ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் இவை. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டை சார்ந்த டச்சு மற்றும் இத்தாலிய ஓவியங்களில் இக்கோழிகளை காண முடிகிறது. போலிஷ் கோழிகள் (Polish Chicken) என்றழைக்கப்பட்டாலும், இவை போலந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல. பழங்கால போலந்து நாட்டு போர் வீரர்கள் அணியும் இறகுகளாலான தொப்பியை போல, இவற்றின் கொண்டை அமைந்துள்ளதால் இவற்றை போலிஷ் கொண்டை கோழிகள் என்று அழைக்கின்றனர். இவற்றின் பூர்வீகம் நெதர்லாந்து என்று கணித்துள்ளனர்.
இவற்றின் குணங்கள் பெரும்பாலும் லகான் கோழியை ஒத்துள்ளன. மிகச்சிறப்பாக பறக்கும் தன்மை கொண்ட இக்கோழிகள், குழந்தைகளிடம் கூட எளிதாக பழகக் கூடியவை.
நான்கு முதல் 8 வருடங்கள் வரை உயிர் வாழும் இக்கோழிகள், 2 முதல் 3 கிலோ எடை வரை வளர்கின்றன. 20 முதல் 24 வாரங்களிலிருந்து இவை முட்டையிட தொடங்குகின்றன. ஆண்டுக்கு 200 முட்டை வரையிட்டாலும், இதனை அழகுக்காகவே பெரும்பாலும் வளர்க்கின்றனர்.
தனிப்பட்ட கோழி தீவனத்தை தவிர்த்து, காய்கறி கழிவுகள், இறைச்சி கழிவுகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றையும் உண்கின்றன.
கருப்பு, வெள்ளை, நீலம், பழுப்பு, தங்க நிறம், வெள்ளி நிறம் என பல நிறங்களில் இக்கோழிகள் காணப்படுகின்றன. நிறம் மற்றும் கொண்டையின் தன்மையை பொறுத்து ஒரு கோழி 1800 ரூபாய் முதல் 2200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
முனைவர் வானதி பைசல்,
விலங்கியலாளர்.