Site icon Vivasayam | விவசாயம்

மிக அகலமான கொம்பினை கொண்ட மாடுகள் – அங்கோல் வாட்டுசி

 

நீண்ட மற்றும் மிக அகலமான கொம்புகளை கொண்டுள்ள இம்மாடுகள் அமெரிக்காவின் பிரபலமான வளர்ப்பு கால்நடைகளாகும். அங்கோல் வாட்டுசி மாடுகள் (Ankole watusi), கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் கால்நடையினமான சங்கா மாட்டினத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கலப்பினங்களே. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட இம்மாடுகள், 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அங்கோல் வாட்டுசி மாடுகள் மிகக் கடுமையான வறட்சியை தாங்கும் வல்லமை பெற்றவை. எனவே ஆப்பிரிக்க கண்டத்தின் உகாண்டா, ரூவாண்டா, கென்யா ஆகிய நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவற்றை வீட்டு விலங்காக பழக்கப்படுத்தி விட்டனர்.

நீண்ட கொம்புகளை உடைய மாடுகளை பழங்குடியின மக்களின் தலைவர்கள் வளர்க்க வேண்டும், என்னும் வழக்கத்தினை சில பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். தலைவர்களிடம் வளரும் மாடுகளை இன்யாம்போ (Inyambo) என்று அழைக்கின்றனர். புனித நிகழ்ச்சிகளில் அங்கோல் மாடுகளை பலி கொடுப்பதை அம்மக்கள் கடமையாக கருதுகின்றனர்.

குறைந்த அளவு கொழுப்புடன் கூடிய உயர்தர இறைச்சியை கொடுக்கும் இம்மாடுகள், ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே கொடுக்கின்றன. ஆனாலும் இவற்றின் அழகிய நீண்ட கொம்புகளுக்காக, மிக அதிக அளவில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இவற்றின் கொம்புகள் ஆறு அடி நீளம் வரை வளரக்கூடியவை.  கொம்புகளின் அளவைப் பொறுத்து, அங்கோல் வாட்டுசி மாடுகள்  80 ஆயிரம் ரூபாயிலிருந்து நான்கரை லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

405 முதல் 720 கிலோ வரை எடையுள்ள இம்மாடுகள், 5.5 முதல் 6.6 அடி உயரம் வரை வளர்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள். ஒன்பது மாத கர்ப்ப காலத்தைக் கொண்ட இம்மாடுகள், 18 மாதங்களில் இன முதிர்ச்சி அடைகின்றன. இவற்றின் கொம்புகள் அலங்கார பொருளாகவும், தோல் தாளக் கருவிகள் மற்றும் காலணிகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

C.T வுட்டி என்னும் அங்கோல் வகை மாடு, மிக பெரிய கொம்பு அடிப்பாகத்தை (சுற்றளவு – 103.5 செ.மீ) கொண்ட மாடு என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அங்கோல் வகை மாடுகள் ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதால், இன்று 1500-க்கும் குறைவான அங்கோல் மாடுகளே அமெரிக்காவில் உள்ளன.

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Exit mobile version