கேள்வி: மானாவாரியில் டி.எம்.வி7 என்ற நிலக்கடலை இரகத்தை விதைத்து 55 நாட்கள் ஆகியுள்ளது. தற்போது பயிர்கள் சற்று பூக்கும் தருணத்தையும் அடைந்துள்ளது. இந்நிலையில் இளம் இலைகள் இளம் பச்சை நிறமாகவும். பின்பு இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவருகிறது. இது எதனுடன் தொடர்புடையது, மேலும் இதற்கான காரணங்கள் மற்றும் நிவர்த்தி முறைகளை கூறுங்கள்?
-வீ.இராமசாமி,கோழிப்பட்டு,விழுப்புரம்.
பதில்: இவை இரும்புச்சத்து பற்றாக்குறையுடன் தொடர்புடையது. மண்ணில் அதிக சுண்ணாம்புச்சத்து இருந்தால் இக்குறைபாடுகள் தோன்றும்.இதற்கு பெர்ரஸ் சல்பேட் உரத்தினை ஏக்கருக்கு 10 கிலோ அல்லது வேளாண் துறையினரால் பறிந்துரைக்கப்பட்ட நுண்ணுட்ட கலவை 5 கிலோவை 20கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். ( அல்லது) பெர்ரஸ் சல்பேட் லிட்டருக்கு 10 கிராம் அல்லது திரவ வடிவிலான பெர்ரஸ் சல்பேட் EDTA லிட்டருக்கு 1 மி.லி என்ற அளவில் குறைபாடு நீங்கும் வரை பத்து நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
கேள்வி: சொட்டுநீரை பயன்படுத்தி காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன். தற்போது சிவம் என்ற தக்காளி இரகத்தின் நாற்றுக்களை வாங்கி நடவுசெய்து ஒரு மாதம் ஆனது. இளம் தக்காளி செடிகளின் இலைகளில் சிறு,சிறு துளைகளுடன் கூடிய வெண்ணிற கோடுகள் காணப்படுகிறது. இதற்கான காரணமும் மற்றும் மேலாண்மை முறைகளை தெரிவிக்கவும்?
– சே. அவினாஷ்,களரம்பட்டி, பெரம்பலூர் மாவட்டம்.
பதில்: லிரியோமைனசா ட்ரைஃபோலியை எனும் இலை துளைப்பானால் ஏற்படும் பாதிப்பு. இவற்றை கட்டுப்படுத்த டிரைஅசோபாஸ்(40%EC) அல்லது குளோர்பைரிபாஸ் (20%EC) லிட்டர் நீருக்கு 2 மி.லி. கலந்து காலை அல்லது மாலையில் இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்