Vivasayam | விவசாயம்

எண்ணெய் பனை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான உக்திகள்

தற்போது நம் நாட்டில் கிட்டத்தட்ட 3.16 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்பட்டுள்ளது. இதன் மிக அதிக எண்ணெய் உற்பத்தித்திறன் மூலம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்யவல்லது. தற்போது தேசிய அளவில் ஹெக்டேருக்கு சராசரியாக 4.3 முதல் 6.1 டன் வரை பழக்குலைகள் விளைச்சலை கொடுக்கின்றது. பெருந்தோட்டப் பயிர்கள் கடவுளின் பரிசாக கருதப்படுகின்றன ஏனெனில் அவை அ) வறுமை ஒழிப்பு ஆ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு இ) வேலைவாய்ப்பு மற்றும் ஈ) ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன. தோட்டப்பயிர்களில், எண்ணெய் பனை ஒரு தனித்துவமானது இது ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 18 டன் கச்சா பனை எண்ணெய் வரை கொடுக்கக்கூடிய மரபணு திறன் வல்லமை பெற்றது. இந்திய துணைக்கண்டத்தின் சமையல் எண்ணெயின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க ஏற்ற பயிராகும்.

.

எண்ணெய் பனை 1970 ஆம் ஆண்டுகளில் வணிகப்பயிராக இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அதன் வணிக சாகுபடி 1972 முதல் 1984 ஆண்டுகளில் தொடங்கியது. ஆரம்பத்தில் கேரளா மற்றும் சிறிய அந்தமான் ஆகிய இரண்டு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டது.  பின்னர் இப்பயிர் சாகுபடிக்கு உகந்ததாக அடையாளம் காணப்பட்ட 11 மாநிலங்களில் சுமார் 0.79 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. இந்திவாவின் சூழ்நிலைக்கு ஏற்ப எண்ணெய் பனை பாசன தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டது. 1,000 ஹெக்டேர் அளவிலான மூன்று செயல்விளக்க பண்ணைகள் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.   பின்னர், எண்ணெய் பனை அபிவிருத்தி திட்டம் (OPDP) இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சகத்தின் தொழில்நுட்ப மிஷனால் செயல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டில் மத்திய வேளாண்மை துறையால் அமைக்கப்பட்ட டாக்டர். ரெத்தினம் தலைமையிலான குழு, 18 மாநிலங்களில் எண்ணெய் பனை சாகுபடிக்கு உகந்ததாக 1.93 மில்லியன் ஹெக்டேர் பகுதிகளை அடையாளம் கண்டது (படம் 2). மொத்த அடையாளம் காணப்பட்ட (1.93 மில்லியன் ஹெக்டேர்) பகுதிகளில், 16.37% (0.316 மில்லியன் ஹெக்டேர்) மட்டுமே மார்ச், 2017 வரை பயிரிடப்பட்டுள்ளது.

முனைவர். எம். எஸ். சுவாமிநாதன் அவர்கள் சந்தை மற்றும் பருவமழை ஆகிய இரண்டும் விவசாயிகளை பாதிக்கும் முக்கிய காரணிகள் என கூறியிருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களையும் நம்மால் திறம்பட நிர்வகிக்க முடிந்தால், விவசாயிகளில் பெரும்பாலோர் விவசாயத்தை மிக ஈடுபாட்டுடன் செய்வார்கள். எண்ணெய் பனை விஷயத்தில் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள சந்தை வசதிகள் உள்ளன. மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் எண்ணெய் பனை மிகப் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது, இந்த நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் எண்ணெய் பனை சிறுசிறு பரப்பளவில் தோட்டக்கலை பயிராக பயிரிடப்படுகிறது. மேலும், இந்தியாவில் எண்ணெய் பனை 90 சதவிகிதத்திற்கும் மேல் பாசன பயிராக வளர்க்கப்படுகிறது எனவே, இந்தியாவில் எண்ணெய் பனை உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான உத்திகள் நிச்சயமாக மற்ற நாடுகளை விட வேறுபட்டவை.

தற்போதைய உற்பத்தித்திறன் மற்றும் அதன் முன்னேற்றத்திற்கான உத்திகள்

கடந்த ஏழு ஆண்டுகளில் தேசிய சராசரி எண்ணெய் பனை பழக்குலைகள் உற்பத்திதிறன் ஒரு ஹெக்டேருக்கு 4.31 முதல் 6.12 டன் வரை உள்ளது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு.  அதேபோல் எண்ணெய் பனை பழக்குலைகள் உற்பத்தித்திறனை பொருத்தவரை மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது (அட்டவணை 1).

அட்டவணை 1.  மாநில வாரியாக சராசரி எண்ணெய் பனை (பழக்குலைகள்) உற்பத்தித்திறன் (டன்/ ஹெக்டேர்)

மாநிலம்  2010-11 2011-12 2012-13 2013-14 2014-15 2015-16 2016-17
ஆந்திரா 6.26 7.3 9.17 9.97 9.55 9.56 8.71
கர்நாடகா 0.58 0.57 0.51 0.44 0.48 0.51 0.38
தமிழ்நாடு 0.21 0.31 0.31 0.29 0.32 0.36 0.32
குஜராத் 0.02 0.05 0.05 0.05 0.12 0.14 0.2
ஒடிசா 1.52 2.91 0.67 0.49 0.34 0.32 0.31
கோவா 2.16 0.26 2.34 2.32 2.5 3.65 5.43
கேரளா 7.73 7.97 7.51 6.85 7.22 7.14 5.96
மிசோரம் 0.05 0.11 0.17 0.16 0.18 0.24 0.24
தெலுங்கானா 3.93 5.72 4.72 5.94 5.12 5.64 5.98
இந்தியா  4.31 5.05 5.85 6.12 5.81 5.8 5.24

 

பிரதான நிலத்தில் நடவு செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எண்ணெய் பனை விளைச்சலைத் தொடங்குகிறது. அதன்படி, சராசரி பழக்குலை மகசூல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப்பட்ட பகுதியிலிருந்து கணக்கிடப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் தற்போது ஒரு ஹெக்டேருக்கு 5.24 டன் பழக்குலை என மிகவும் குறைவாக உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் சராசரி பழக்குலை மகசூல் 4.31 லிருந்து 5.24 டன்னாக முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியாவில் எண்ணெய் பனையின் குறைந்த மகசூலுக்கான காரணங்கள்

எண்ணெய் பனை ஒரு கடினமான பயிராக இருப்பதால், பெரும்பாலான பாதகமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மகசூல் குறையும். இது பெரும்பாலும் ஈரப்பதமான வெப்பமண்டல பகுதிகளில் இயற்கையாக இருப்பதால் அதிக அளவு தண்ணீர், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் தேவைப்படுகிறது. உற்பத்தித்திறனை பாதிக்கும் காரணிகள் எல்லா மாநிலங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. நீரின் தன்மை, மகரந்தச் சேர்க்கை, அறுவடை, மண் அமிலத்தன்மை, குறைந்த வெப்பநிலை, மோசமான நீரின் தரம் போன்றவை இப்பயிரின் குறைந்த மகசூலுக்கான காரணங்களாக இருக்கலாம். விளைச்சலில் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இரகங்களை ஒப்பிடுகையில் இரண்டு இரகங்களுக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை.  ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சராசரி மகசூலைப் பார்க்கும்போது, ​​மற்ற மாநிலங்கள் குறைந்த மகசூலையே ஈட்டுகின்றன. சில மாநிலங்கள் குறைந்த மகசூல் பெறுவதற்கான முக்கிய காரணங்கள்

  1. முறையற்ற நீர் மேலாண்மை: எண்ணெய் பனைக்கு அதன் ஆவியுயிர்ப்பு தேவைகளை பூர்த்தி செய்ய மிக அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இந்தியாவில் இது பாசன பயிராக வளர்க்கப்படுகிறது மற்றும் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான நீர்ப்பாசனம் பெரும்பாலான மாநிலங்களில் கடினமாக உள்ளது. நீர் அழுத்தம் காரணமாக பாலின விகிதத்தில் ஏற்படும் மாற்றம் புதிய பழக்குலை மகசூலை பாதிக்கிறது.
  2. முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை: வெவ்வேறு பிராந்தியங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அட்டவணைகள் இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், பெரும்பாலான பண்ணைகளில் சரியான பயன்பாட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. கோவா, ஆந்திரா, மிசோரம், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு DRIS (கண்டறிதல் மற்றும் பரிந்துரைகள் ஒருங்கிணைந்த முறை) நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, மிகவும் குறைபாடுள்ள சத்துக்களை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பல்வேறு மாநிலங்களில் நிலவும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளும் மகசூல் குறைப்புக்கு பங்களிக்கின்றன. பல இடங்களில் போரான் குறைபாடு மிகவும் பொதுவான பிரச்சனை. பெரும்பாலான தோட்டங்களில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடுகள் காணப்படுகின்றன. மண் உப்புத்தன்மை பழக்குலை விளைச்சலை மோசமாக பாதிக்கும் மற்றொரு பிரச்சனையாகும்.
  3. காலநிலை மாறுபாடு: அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை (40-450 சி வரை) உள்ள பகுதிகளில் எண்ணெய் பனை செயல்திறன் மற்றும் மகசூல் சிறப்பாக உள்ளது. குறைந்த வெப்பநிலை உள்ள பகுதிகளில் குறைந்த மகசூலே கிடைக்கும். இன்றும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது கிடைக்கின்ற விளைச்சல் மரபணு திறன் விளைச்சலிளிருந்து இருந்து வெகு குறைவாக உள்ளது.  இது உற்பத்திதிறனை அதிகறிப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பு உள்ளதை குறிக்கிறது. குறைந்த வெப்பநிலை எண்ணெய் பனை வளர்ச்சி, மலர் உருவாக்கம் மற்றும் பழக்குலை உற்பத்தியை மோசமாக பாதிக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

எண்ணெய் பனை சாகுபடியிலிருந்து சிறந்த மகசூலை அறுவடை செய்ய பின்வரும் உத்திகளை பின்பற்றலாம்.

  1. வள மேலாண்மை: எண்ணெய் பனை சாகுபடியில் அதிக பொருளாதார விளைச்சலை அடைய நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முக்கிய காரணிகள். பருவத்திற்கு ஏற்ப பயிருக்கு 150 முதல் 300 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டாலும், சில விவசாயிகள் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் அதிகப்படியான தண்ணீரை பயன்படுத்துகின்றனர். சரியாகச் சொல்வதானால், கோடையில் 215-265 லிட்டர், மழைக்காலத்தில் 100-150 லிட்டர் மற்றும் குளிர்காலத்தில் 160-170 லிட்டர் தண்ணீர் ஒரு மரத்திற்கு போதுமானது. அதிக அளவு நீர்ப்பாசனம் எந்த மகசூல் முன்னேற்றத்திற்கும் பயன்படாது மாறாக அதிகப்படியான நீர் வேர்களின் ஊட்டச்சத்து மண்டலத்திலிருந்து ஊட்டச்சத்துக்களை வெளியேற்றும். சொட்டு நீர்ப்பாசன முறையை ஏற்றுக்கொள்வது மற்றும் தானியங்கி நீர்பாசன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையான அளவு தண்ணீரைத் தருவதன் மூலம் தேவைக்கு அதிகமான நீரை மற்ற பயிர்களை வளர்ப்பதற்குத் திருப்பிவிட முடியும். இவை தவிர, கரிம கழிவுகளைகொண்டு பனை படுகைகளை தழைக்கூளம் செய்வது மற்றும் சரிவின் குறுக்கே அகழி அமைத்தல் ஆகியவை நீர் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்படுகிறது.

இதேபோல், மண் மற்றும் இலை ஊட்டச்சத்து பகுப்பாய்வின் அடிப்படையில் ஊட்டச்சத்து மேலாண்மை குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்தல் ஊட்டச்சத்து பயன்பாட்டு செயல்திறனை அதிகரிக்கிறது. ஆய்வு செய்யாமல் அதிக அளவு உரங்களைப் பயன்படுத்துவதால் பண விரயம் மட்டுமல்ல, ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துகிறது மேலும் அதன் மூலம் சில ஊட்டச்சத்துக்கள் உட்கொள்வதைத் தடுக்கிறது. மண்ணின் நிலையைப் பாதுகாக்க, நியாயமான ஊட்டச்சத்து மேலாண்மை மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், நுண்ணீர் பாசன உரமிடுதல் முறை மூலம் உரங்களைப் பயன்படுத்துவது சிறந்த ஊட்டச்சத்து பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் உற்பத்திச் செலவைக் குறைக்க உதவுகிறது. எனவே, மண் மற்றும் இலை மாதிரிகளை அவ்வப்போது பரிசோதித்து தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை துல்லியமான விகிதத்தில் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.

  1. பயிர் அமைப்பு முறைகள்: பொருத்தமான ஊடுபயிர் பயிரிடுவதன் மூலமும் கோழி, ஆடு, மாடு போன்றவற்றுடன் கலப்பு பண்ணை விவசாயம் செய்வதன்மூலம் அதிக லாபத்தை அடையமுடியும். ஊடுபயிர்களை வளர்ப்பது மண்ணில் நிறைய உயிரினங்களைச் சேர்க்கிறது நுண்காலநிலையை மாற்றுகிறது அதன் மூலம் எண்ணெய் பனை உற்பத்திதிறனை அதிகரிக்கிறது. இளந்தோட்டத்தில் (முதல் மூன்று ஆண்டுகள்), வாழை மற்றும் கொலோகேசியா வளர்ப்பது முறையே ரூ. 81,405 மற்றும் 61,053 அதிக நிகர வருமானத்தை தருகிறது (அட்டவணை 2). வயதுவந்த தோட்டங்களில் எண்ணெய் பனை + புதர் மிளகு பயிரிடுவதன் மூலம் ரூ. 1,56,985 நிகர வருமானம் பெறலாம். அதேபோல் கொக்கோவுடன் ஊடுபயிராக எண்ணெய் பனை பயிரிடுவதன் மூலம் ரூ. 1,24,864 (அட்டவணை 3) நிகர வருவாயைக் கொடுக்கலாம்.

அட்டவணை 2. எண்ணெய் பனை இளம் பருவத்தில் ஊடுபயிரின் பொருளாதாரம்

ஊடுபயிர்  மொத்த வருமானம் (ரூ./எக்டர்) நிகர லாபம் (ரூ./எக்டர்)
வாழைப்பழம் 129600 81405
கொலோகேசியா 116238 61053
கினி புல் 39858 13553
மக்காச்சோளம் 57960 37732
புகையிலை 98000 58298
மிளகாய் 70000 30744
வெண்டைக்காய் 44444 11095

 

அட்டவணை 3. வயதுவந்த எண்ணெய் பனை தோட்டங்களில் ஊடுபயிரின் பொருளாதாரம்

ஊடுபயிர் மொத்த வருமானம் (ரூ. / ஹெக்டர்) நிகர லாபம் (ரூ. / ஹெக்டர்)
எண்ணெய் பனை ஒரே பயிர் 1,05,430 53,430
எண்ணெய் பனை + கோகோ 1,94,864 1,24,864
எண்ணெய் பனை + சிவப்பு இஞ்சி 1,84,695 1,13,195
எண்ணெய் பனை + ஹெலிகோனியா 1,76,140 1,02,140
எண்ணெய் பனை + புதர் மிளகு 2,40,695 1,56,695
எண்ணெய் பனை + வாழை 1,94,550 1,20,550
எண்ணெய் பனை + அலங்கார செடிகள் 1,71,690 1,07,690

 

இ.வே.ஆ.க. – இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஊடுபயிர் / கலப்பு மாதிரிகள் 

  1. எண்ணெய் பனை + கோகோ
  2. எண்ணெய் பனை + வாழை
  3. எண்ணெய் பனை + நீண்ட மிளகு + புதர் மிளகு
  4. எண்ணெய் பனை + சிவப்பு இஞ்சி + ஹெலிகோனியா
  5. எண்ணெய் பனை + நீண்ட மிளகு + வெட்டு தழைகள்

 

படம் 3. எண்ணெய் பனை தோட்டங்கலுக்கேற்ற ஊடுபயிர்கள்

கேரளா மற்றும் மலைப்பகுதிகளுக்கு பொருத்தமான ஊடுபயிர் / கலப்பு பயிர் மாதிரிகள்

  1. எண்ணெய் பனை + கோகோ / இலவங்கப்பட்டை + கருப்பு மிளகு
  2. எண்ணெய் பனை மீது கருப்பு மிளகு + அந்தூரியம்
  • எண்ணெய் பனை + நறுமண இஞ்சி
  1. சாத்தியமான மதிப்பு கூட்டல்: எண்ணெய் பனையில் நிறைய கழிவுகள் தோட்டங்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் பயிரிடப்பட்ட வயலில் விடப்படுகின்றன. இந்த கழிவுகளை மதிப்பு கூட்டல் மூலம் பயன்படுத்தினால் விவசாயிகளின் நிகர வருமானத்தை மேம்படுத்த முடியும். எண்ணெய் பனை தோட்டங்களிலிருந்து உருவாகும் இலைகள் மற்றும் ஆண் மஞ்சரிகளை பதர் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி திறம்பட மறுசுழற்சி செய்யலாம். பெருந்தோட்டங்களில், எண்ணெய்ப் பனை அதிக அளவு உயிர்வளத்தை (வருடத்திற்கு 15-17 டன் உலர் எடை அடிப்படையில்) இலைகள் மற்றும் ஆண் மஞ்சரிகள் மூலம் உற்பத்தி செய்கிறது.

 

விவசாயிகளின் தோட்டங்களில் உயிரிப் பொருட்கள் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படாமல் உள்ளன. மொத்த சாகுபடி செலவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் எண்ணெய் பனை உரங்களுக்கு செல்கிறது. இந்த கழிவு உயிரினத்தை சரியாக மறுசுழற்சி செய்வதன் மூலம், பெரும்பாலான ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்,

 

காளான் சாகுபடியில் வெற்று பழக்குலைகளை அடி மூலக்கூறாக உபயோகப்படுத்த முடியும். மேலும் எண்ணெய் பனை தொழிற்சாலைகளிலிருந்து கழிவுகளாக உருவாக்கப்படும் இடை கனிசுவர் நார்கள் காளான் வளர்ப்பிற்கு பயன்படுத்த இயலும்..

 

  1. பண்ணை குளங்களில் மீன் வளர்ப்பு: பெரும்பாலான எண்ணெய் பனை விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் சேகரிப்புக்காக பண்ணை குட்டைகளை வைத்திருக்கிறார்கள். நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவப்பட்ட பிறகு, இந்த குளங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த குளங்களை மீன் குளங்களாக மாற்றலாம்.  இந்த குளங்களில் இருந்து 8-9 மாதங்களில் 3-4 அறுவடை செய்ய முடிவும் என தெரியவந்துள்ளது. இததன்மூலம் நிகர வருவாய் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 37,000 முதல் 62,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

  1. முன்னோடி விவசாயிகளுடன் கலந்துரையாடல் : எண்ணெய் பனை சாகுபடியில் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றும் பழக்கத்தை வளர்ப்பதற்கும், குறைந்த விளைச்சல் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து எண்ணெய் பனை விவசாயிகளை அதிக அறுவடை செய்யும் முற்போக்கு விவசாயிகளின் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

 

6.சந்தை விலை: எண்ணெய் பனை 25-30 வருடங்களுக்கு வணிக ரீதியாக வளர்க்கப்படுகிறது. சர்வதேச கச்சா பனை எண்ணெய் விலையை சார்ந்து புதிய பழக்குலைகளின் விலை நிர்ணயிக்கபடுவதால் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் எண்ணெய் பனை உற்பத்தியை பெரிதும் பாதிக்கிறது. எண்ணெய் பனை விரிவாக்க திட்டத்திற்கு இது மிகப்பெரிய தடையாக உள்ளது. எண்ணெய் பனை சாகுபடியை நோக்கி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்ட வேளாண்மை உத்திகளை பின்பற்றுவதற்கும் விலை உறுதிப்படுத்தல் மிகவும் தேவைப்படுகிறது.

  1. பயிர் காப்பீடு: வானிலையின் மாறுபாடுகளின் பாதிப்புகளை சமாளிக்க, ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்துவது அவசியம்.

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவை வேகமாக வளர்ந்து வருகிறது மேலும் 2030ம் வருடத்தில் இது 34 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனை எண்ணெய் நமது நாட்டின் சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யவல்லது. நீர்ப்பாசனத்தின் மூலம் எண்ணெய் பனையை பயிரிடும் ஒரே நாடு இந்தியா மட்டுமே ஏனெனில் இது தண்ணீரை விரும்பும் பயிர். இந்தியாவில் அதன் மரபணு திறன் ஒரு ஹெக்டேருக்கு 18 டன் எண்ணெய் தரவல்லது. இப்போது வரை இப்பயிரின் சாத்தியக்கூறு பழக்குலை உற்பத்திதிறன் அடிப்படையில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. பரிந்துரைக்கப்பட்ட முறையான மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிக்க இயலும். எண்ணெய் பனை தோட்டத்தில் அதிக லாபம் ஈட்ட, விவசாயிகள் நல்ல பயிர் மேலாண்மை, ஊடுபயிர்கள், கால்நடைகள், ஆடுகள் மற்றும் கோழி போன்ற விவசாயத்தின் பிற கூறுகளையும் சேர்த்து கலப்பு பண்ணை விவசாயம் செய்யவேண்டும். மதிப்பு கூட்டல், முறையான ஆராய்ச்சி, குறைந்தபட்ச ஆதாயவிலை நிர்ணயித்தல் மற்றும் அரசின் சரியான கொள்கை போன்ற முயற்சிகள் மூலம் எண்ணெய் பனை விவசாயத்தை ஊக்குவிக்க இயலும் அதன்மூலம் எண்ணெய் பனை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடு நாட்டின் சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யு முடியும்.

 

கட்டுரையாளர்கள்: 

ஜி. ரவிச்சந்திரன், கே. மனோரமா, கே. ராமச்சந்திரடு, மு.வெ. பிரசாத் மற்றும் கு. சோமசுந்தரம்.

இ.வே.ஆ.க. – இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனம், பெடவேகி – 534450, ஆந்திரா மாநிலம்

மின்னஞ்சல் முகவரி: gravi1000@yahoo.com

Exit mobile version