எண்ணெய் வித்துக்களின் ராஜா என்றழைக்கப்படும் நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஆனிப்பட்டம் மிகச்சிறந்த பட்டமாகும். தமிழகத்தில் இந்த பட்டத்தில் நிலக்கடலை மானாவாரியாக பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தை பொருத்த வரை கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலக்கடலையை இந்த பட்டத்தில் பயிரிடுகின்றனர்.
ஒரு பயிரை சாகுபடி செய்வதற்கு முன்னர் அதிக மகசூல் தரக்கூடிய சரியான ரகத்தினை தேர்வு செய்வது மிக முக்கியமாகும்.
ஆனிப்பட்டத்தில் மானாவாரியாக சாகுபடி செய்ய சிறந்த நிலக்கடலை ரகங்களை தேர்வு செய்வதை பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
TMV Gn 13, TMV 14, VRI Gn 6, VRI Gn 7, CO 6, CO 7, BSR 2 ஆகிய ரகங்கள் ஆனிப்பட்டத்தில் பயிர் செய்ய ஏற்ற ரகங்கள் ஆகும்.
இதில் TMV Gn 13, TMV 14, VRI Gn 6, VRI 8, CO 7, BSR 2 ஆகிய ரகங்கள் கொத்து வகையையும் VRI Gn 7, CO 6 ஆகிய ரகங்கள் அடர் கொத்து வகையையும் சார்ந்தவை.
TMV 14, BSR 2 ஆகிய ரகங்கள் TMV 7 என்ற ரகத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட புதிய ரகங்கள் ஆகும்.
இதில் Co 7 என்ற ரகம் மானாவாரியில் அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு 2300 கிலோவும், BSR 2 2222 கிலோவும், VRI 8 2130 கிலோவும், TMV 14 2124 கிலோவும் மகசூல் தர வல்லது.
ஆந்திராவில் ஆச்சாரியா ரங்கா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட கதிரி லபாக்ஸி 1812 என்ற ரகம் ஒரு ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் தரவல்லது என்றும் கூறுகின்றனர்.
இந்தப் பட்டத்தில் நிலக்கடை பயிரிடும் விவசாயிகள் தங்கள் பகுதிக்கும் பட்டத்திற்கும் ஏற்ற ரகத்தை தேர்வு செய்து பயிரிட கேட்டுக்கொள்கிறோம்.
கட்டுரையாளர்
எ. செந்தமிழ்,
முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல்),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 608 002