Skip to content

நெற்பயிரில் துத்தநாக சத்துப்பற்றாக்குறையும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நடப்பு காரிப்பருவத்தில் கடந்த 16ஆம் தேதி வரை 398.64 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தின் நெல் கொள்முதலை ஒப்பிடும்போது இது 74.24 லட்சம் டன் அதிகமாகும். தமிழகத்தை பொருத்தவரை தற்போது பருவமழை நன்கு பொழிந்துள்ளதால்  காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களில்  துத்தநாக சத்துப்பற்றாக்குறை அதிகளவில் தென்படுகின்றது. ஒரு தாவரம் வளர்வதற்கு 17 வகையான சத்துக்கள் தேவை. அதில் 8 வகையான நுண்ணுட்ட சத்துக்களும் அடங்கும். பேரூட்டச்சத்துக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயிகள் நுண்ணூட்ட சத்துக்களுக்கு கொடுப்பதில்லை. அதனால் மண்ணில் அதிகளவு நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கின்றது.

நெற்பயிரை பொருத்தவரை துத்தநாக சத்து பற்றாக்குறை அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் 25% வரை மகசூல் பாதிக்கப்படுகிறது. துத்தநாகசத்துப் பற்றாக்குறையானது முதன்முதலில் நீனே என்பவரால் 1966ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் ‘Khaira disease’ என்று கூறுகின்றனர்.

துத்தநாக சத்துப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • தொடர்ந்து நெற்பயிரை மட்டும் பயிரிடுதல்.
  • பயிர் நடுவதற்கு முன்னால் நுண்ணூட்ட உரங்களை கொடுக்காமல் இருப்பது.
  • மணற்பாங்கான மண்.
  • சரியான வடிகால் வசதி இல்லாமல் இருப்பது.
  • மண்ணின் அங்ககத்தன்மை குறைந்து, கார அமிலத்தன்மை அதிகரித்தல்.
  • மண்ணில் மணிச்சத்து மற்றும் சிலிக்கா அதிகம் உள்ள நிலத்தில் இதன் பற்றாக்குறை அதிகளவு தென்படும்.
  • விவசாயிகள் பெரும்பாலும் நெற்பயிருக்கு அடியுரமாக டி.ஏ.பி இடுவதால் அதில் உள்ள மணிச்சத்து மண்ணில் உள்ள துத்தநாக சத்துடன் பிணைப்பு ஏற்பட்டு பயிர் எடுத்துக்கொள்ள முடியாத ஜிங்க் பாஸ்பேட்டாக மாற்றம் அடைந்துவிடுகிறது. இதனால் பயிரில் துத்தநாக சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

துத்தநாக சத்துப் பற்றாக்குறையின் அறிகுறிகள்:

தாவரங்களில் மிதமான அளவே துத்தநாகம் கடத்தப்படுவதால் இதன் பற்றாக்குறை நடுப்பகுதியில் உள்ள இலைகளில் அதிகமாகத் தென்படும். நாற்றங்கால் மற்றும் நடவு செய்த வயல்களிலும் இதன் பற்றாக்குறை தென்படும். இதன் பற்றாக்குறையால் நடவு செய்த பயிர்கள் தெளியாமல் காணப்படும். இலைகளின் மேற்புறத்தில் துரு போன்ற சிறு புள்ளிகள் முதலில் உற்பத்தியாகும். இலைகள் வெளிரிய மஞ்சள் நிறத்தில் மாற்றம் அடையும். பிறகு அந்த புள்ளிகள் ஒன்றிணைந்து இலை முழுவதும் கருகிவிடும். பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.

மேலாண்மை முறைகள்:

  1. பயிர் நடவு செய்வதற்கு முன்னால் ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் இடவேண்டும். பசுந்தாள் பயிர்களையும் பசுந்தழைகளையும் வயலில் உழுதுவிட வேண்டும்.
  2. சேற்றுழவு முடித்து பயிர் நட செய்யும் முன்னர் ஒரு எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை இட வேண்டும்.
  3. நாற்றுகளை 2% துத்தநாக ஆக்ஸைடு உரத்தில் 15 நிமிடம் வைத்திருந்து நடவு செய்யலாம்.
  4. அதிக மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடுவதை தவிர்க்க வேண்டும்.
  5. பயிர்களில் துத்தநாக சத்து பற்றாக்குறை தென்பட்டால் 0.5% துத்தநாக சல்பேட் மற்றும் 1% யூரியா கலந்து இலைகள் நன்கு நனையும்படி 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்கள்:

  1. எ. செந்தமிழ்,முதுநிலை வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: elasisenthamil@gmail.com
  1. 2. கா. சரண்ராஜ்,முதுநிலை வேளாண் மாணவர்,விஸ்வபாரதி பல்கலைக்கழகம். மின்னஞ்சல்:klsk.1998@gmail.com

Leave a Reply

editor news

editor news