Skip to content

கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு

இயற்கை வேளாண்மையில் முக்கிய அம்சங்களில் ஒன்று மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். இதற்காக பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல், மீன்அமிலம் போன்ற பலவகையான இடுபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றை தயார் செய்யத் தேவையான மூலப்பொருட்களை சேகரிக்க அதிகநேரம் செலவாகிறது. ஆகவே மிககுறைந்த செலவில் எளிமையான முறையில் இடுபொருளைத் தயார்செய்ய வேஸ்ட் டீகம்போசர் என்ற பொருளை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த வேஸ்ட் டீகம்போசர் என்றால் என்ன?

நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களை பிரித்தெடுத்து விஞ்ஞானி  கிருஷ்ணன்சத்யா அவற்றை ஆய்வகத்தில் பலமடங்காக பெருக்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 12  ஆண்டுகள் பல்வேறு பண்ணைகளில் பரிசோதனைகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

உத்திரபிரதேசம் மாநிலம், காஸியாபாத்தில் உள்ள மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ்செயல்படும் தேசிய இயற்கை விவசாய மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 30g என்ற அளவில் சிறிய பாட்டிலில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதன் விலை மேலே குறிப்பிட்டது போலவே 20 ரூபாய் மட்டுமே.

தென்னிந்திய விவசாயிகளிடம் இதனை கொண்டு சேர்க்கும் வேலையில் பெங்களூரில் உள்ள மண்டல இயற்கை விவசாய மையம் ஈடுபட்டுள்ளது.

எப்படி பெறுவது?

பெங்களூரில் உள்ள மையத்தின் கீழ்கண்ட முகவரிக்கு வரையோலை அல்லது மணியார்டர் அனுப்பி‌வைத்தால் அவர்கள் பார்சல் மூலம் பாட்டில்களை அனுப்பிவைப்பார்கள். அஞ்சல்சேவைக்கு தனியே கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

மையத்தின் முகவரி:

Deputy director,

Regional centre of organic farming,

Kannamangala cross,

Whitefield-Hosekote road,

Kadugodi post, Bangalore–560067

Mobile : +91 95455 20037

வேஸ்ட்டீகம்போசர். இந்த பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது எதற்கு பயன்படுகிறது என்று. பண்ணைக் கழிவுகளான இழை தழை மற்றும் காய்கறிக் கழிவுகளையும் எளிதாக மக்க வைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல் இதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் இருப்பதனால் வளர்ச்சிஊக்கியாகவும் பயன்படுகிறது. மாட்டின் கோமியத்தில் உள்ள நுண்ணுயிர்களும் இதில் சேர்க்கப்பட்டிருப்பதால் இது பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது.

எப்படி தயார் செய்வது?

இதை தயார் செய்வது மிகவும் சுலபமானது. 200லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் 2  கிலோ அளவு நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில் நாம் வேளாண் ஆய்வகத்தில் இருந்து வாங்கிய வேஸ்ட்டீகம்போசரை சேர்த்து நன்கு கலக்கிவிட வேண்டும்.

ஈக்கள் அதில் சென்று முட்டை இடாதவாறு ஒரு துணியால் இருக்கமாக கட்டிவிட வேண்டும். தினமும் இரண்டு வேளை அதாவது காலையும் மாலையும் இந்த கரைசலை நன்கு கலக்கி விட வேண்டும். இவ்வாறு செய்தால் 7 நாட்களில் இந்த வேஸ்ட்டீகம்போசர் கரைசல் தயாராகிவிடும்.

எப்படிபயன்படுத்துவது?

இவ்வாறு தயார் செய்யப்பட்ட கரைசலை இழை வழித்தெளிப்பாகவும் அல்லது நேரடியாக பாசன நீரிலும் கலந்து பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் இந்த கரைசலை பாசன நீரில் கலந்து பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் அளவு அதிகரித்து மண்ணின் வளம் பெருகும். மாதம் இருமுறை இவ்வாறு இந்த கரைசலை பயன்படுத்தலாம். ஒருமுறை இந்த கரைசலை தயார்செய்து  கொண்டால் வாழ்நாள் முழுவதும் அதைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் கரைசலை தயார் செய்து கொள்ளலாம்.

கட்டுரையாளர்:

மா. மாதேஸ்வரன் மினிச்சாமி,

இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

editor news

editor news