Skip to content

குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர்

கடந்த ஐந்த ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் உள்ள தாகூர் மாவட்டத்தின் லிம்கெடா வட்டத்தில் உள்ள கம்டோய் கிராமத்தில் துவங்கிய மலர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மிகப்பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை கிராமப்புற பெண்கள் அடைய பெரிதும் உதவியுள்ளது. முந்தைய நெல் மற்றும் மக்காச்சோள சாகுபடிக்கு மாற்றாக விவசாயிகள் சாகுபடி செய்யும் மலர்கள், தோட்டக்கலை பயிர்களே சுமார் 650 விவசாயிகள் வாழ்க்கையை வெகுவாக முன்னேற செய்துள்ளது. இத்தகைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக இங்கு விவசாயிகள் பிள்ளைகள் அதிகளவு கல்வி கட்டணங்களை செலுத்தி தனியார் பள்ளிகளில் பள்ளிக் கல்வி பெற முடிகிறது. பல விவசாயிகள் இரு சக்கர வாகனங்களை வாங்கி மிகவும் வேகமாக தங்களின் மலர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை விற்பனை செய்ய முடிகிறது. இத்தகைய புதிய முன்னேற்றம் மற்றும் மாற்றத்திற்கு காரணம் இங்கு விவசாயிகளிடம் கடந்த 1970 முதல் செயல்பட்டு வந்த நவீன் சந்திரா மபட்லால் சத்குரு அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். குறிப்பாக பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார முனன்னேற்றத்திற்கு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் கடந்த 2014ஆம் வருடம் முதல் ஆக்ஸிஸ் வங்கி உதவியுடன் கிராமப்புற மக்களிடம் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு முயற்சிகள், புதிய பயிர்கள் சாகுபடி பற்றிய விரிவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்புதிய தொழில்நுட்ப உதவிகள் மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக கிராமமக்கள் மக்கள் நீர்ப்பாசன பகுதிகளில் பல தடுப்பு அணைகள் (Check Dams) உருவாக்கப்பட்டு, நிலத்தடி தண்ணீர் மற்றும் பாசன தண்ணீர் பாதுகாக்கப்பட்டது. சுமார் 200 மில்லி மீட்டர் வருடத்திற்கு மழை கொண்ட இப்பகுதியில் சேமிக்கப்பட்ட பாசன தண்ணீர் வாயிலாக வருடம் முழுவதும் விவசாயிகளின் உற்பத்தி திறன் பெருக வழிவகை செய்யப்பட்டது.

வளம் தந்த சாமந்தி மலர் சாகுபடி

புதிய தடுப்பு அணைகள் வாயிலாக நீர்ப்பாசன வசதி பெற்ற கம்போய் கிராமத்தில் உள்ள 58 விவசாயிகள் நீண்ட கால பலன்களை தரும் மலர்களை சாகுபடி செய்யும் பணிகளை துவங்கினர். இதன் வாயிலாக சாமந்தி மலர்கள் சாகுபடி துவங்கப்பட்டது. இந்த தோட்ட நிலங்களில் காற்றில் இருந்து மலர்களை  பாதுகாக்க தேக்குமரங்கள் வேளாண் நிலங்களை சுற்றி நடுவு செய்யப்பட்டது. சுமார் 4000 முதல் 5000 தேக்கு மரங்கள் நீண்ட கால முதலீடுகள் என்ற அளவில் நடவு செய்யப்பட்டு தேக்கு வன காடுகள் உருவாக்கப்பட்டது. இது தவிர ரோஜா மலர் சாகுபடி பணிகளும் துவங்கப்பட்டது. இரண்டு ரக ரோஜா மலர்கள் மற்றும் ஐந்து ரக சாமந்தி மலர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து பல வண்ணங்களில் மலர்கள் பூக்கத் துவங்கியது. இதில் ஈடுபட்ட  கிராமப்புற பெண்கள் மற்றும் விவசாயிகள் நாள்தோறும் ரூ.700 முதல் ரூ.1000/- வரை வருமானம் பெறத் துவங்கினர். இதனை பார்த்த பல விவசாயிகள், இப்புதிய மலர் சாகுபடியில் ஈடுபட துவங்கினர். இத்தகைய லாபகரமான மலர் சாகுபடி வாயிலாக பெற்ற வருமானம் வாயிலாகவும் மேலும் நீர்ப்பாசன வசதிகளைப் பெறவும், மலர்கள் விற்பனை செய்ய புதிய இருசக்கர வாகனங்களை வாங்கவும், தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்து நல்ல பள்ளிக் கல்வி பெறவும் பெரிதும் உதவி புரிந்துள்ளது. முந்தைய நெல் மற்றும் மக்காச்சோள சாகுபடியை காட்டிலும் அதிகப்படியாக வருமானத்தை விவசாயிகள் பெற பெரிதும் உதவியுள்ளது. மேலும் இச்சேமிப்புகளை கொண்டு கிராம மக்கள் புதிய பெரிய வீடுகளை கட்டியதுடன் பிற தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியிலும் ஈடுபட்டு தங்களின் வருமானத்தை பெருக்கி வருகின்றனர். பலா, மா, கொய்யா, எலுமிச்சை பழ சாகுபடியிலும் ஈடுபட்டு வருமானம் பெற்று வருகின்றனர். மேலும் சுமார் 29,000 தேக்கு மரங்கள் நடவு செய்யப்பட்டு, அவை கிராமத்தின் பொது வளத்தை பெருக்குவதாக உள்ளது. இது தவிர வெண்டைக்காய் சாகுபடி, முருங்கை, கத்தரிக்காய் மற்றும் மிளகாய் சாகுபடி வாயிலாகவும் அதிக வருமானம் பெற்று வருகின்றனர். மேலும் கால்நடைகள் வளர்ப்பு வாயிலாகவும் குறிப்பாக எருமை மாடுகள் வளர்ப்பு மற்றும் பால் மாடுகள் வளர்ப்பு வாயிலாக வருடத்திற்கு 1.37 கோடிகள் வரை வருமானம் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குஜராத் மாநிலத்தில் புதிய மலர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு வாயிலாகவும் பல ஆயிரம் விவசாய குடும்பங்கள் பொருளாதார முன்னேற்றம் பெற்றுள்ளது. இதன் வாயிலாக ஏற்பட்டுள்ள வாழ்வியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் கிராமங்களையும், கிராமப்புற வசதி வாய்ப்புகளையும் பெருக செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com

Tags:

Leave a Reply

editor news

editor news