Skip to content

சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள்

சப்போட்டா பொதுவாக வெப்பமண்டல பழப் பயிராகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது, 10-38 டிகிரி செல்சியஸ் வரை உகந்த வெப்பநிலை மற்றும் 70 % ஈரப்பதம் தேவைப்படுகிறது.

மண்

பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது. வண்டல் மற்றும் செம்மண் வகைகள் உகந்த மண் ஆகும்.

ரகங்கள்

பாலா, கிரிக்கெட் பால், கோ1, கோ2 , PKM 1 போன்ற ரகங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக பயிர் செய்யும் ரகங்கள் ஆகும் .

நிலம் தயார் செய்தல்

நிலத்தை சமன்செய்து இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும் . நிலத்தை சுற்றிலும் காற்றை  தடுக்கும் மரங்களான மா, நாவல், புளியமரம், போன்ற மரங்களை 1.5 முதல் 1.8  மீட்டர் தள்ளி வரப்பின் ஓரங்களில் வைக்க வேண்டும் .

நடவு

நடவுப் பொருள்

சப்போட்டாவைப் பொறுத்தவரை பொதுவாக ஒட்டுச்செடிகள் நடவு செய்யப்படுகிறது . விண் பதியம், மொட்டுக்கட்டுதல் முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது .

பயிர் செய்யும் பருவம்

நீர்ப்பாசன வசதி உள்ள நிலங்களில் அனைத்து பருவங்களிலும் பயிர் செய்யலாம். பொதுவாக மழைக்காலங்களின் இறுதியில் பயிர் நடவு செய்யப்படுகிறது. அதிக மழைபெய்யும் பகுதிகளில் செப்டம்பர் மாதத்தின் இறுதியிலும் பயிர் நடவு செய்யபடுகிறது.

இடைவெளி

ஒரு எக்டருக்கு 8 X 8 மீ இடைவெளியில் 156  செடி / எக்டர் நடவு செய்ய வேண்டும் . அடர்நடவு முறையில் 8 X 4 மீ (312 செடிகள்) கன்று நடவு செய்ய 60 X 60 X 60 cm அளவு இருக்குமாறு குழி எடுக்க வேண்டும். குழியில் நன்கு மக்கிய உரம் அல்லது தொழுஉரம் 100 கிராம் இடவேண்டும். நடவு செய்யும்போது ஒட்டுக்கட்டிய பகுதி மறையும் வரை மண் இட வேண்டும். நடவு செய்த பின்பு செடி காற்றினால் சாயாதவாறு பக்கத்தில் குச்சி வைத்து கட்ட வேண்டும். இளம் செடி என்பதால் சூரியவெப்பத்தில் இருந்து காக்க தென்கிழக்கு தவிர மூன்று பக்கமும் காய்ந்த புற்களை கொண்டு நிழல் அமைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

நடவின்போது ரசாயன உரம் தேவையில்லை. ஒரு வயது முடிந்ததும் செடி ஒன்றுக்கு 200 கிராம் தழை  மற்றும் மணிச்சத்து, 250 கிராம் சாம்பல் சத்து  என்ற அளவிலும் இதே உரத்தை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து பிறகு 5 வருடங்களுக்கு பிறகு 1 கிலோ தழை, மணிச்சத்து, 1.5 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இடவேண்டும். மானாவாரிப் பயிராக இருந்தால் பருவமழை தொடங்கும்போதே உரம் இட வேண்டும். நீர்ப்பாசன வசதி உள்ள நிலமாக இருந்தால் பருவமழை தொடக்கத்திலும், பருவமழை இறுதியிலும் (செப் – அக்) என இரண்டு முறையாக பிரித்து இட வேண்டும்

நுண்ணூட்ட சத்துக்கள்

ஜின்க் மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் கரிம உரங்கள், ஜின்க் சல்பேட் மற்றும் இரும்பு சல்பேட் (0 .5 %) தெளிக்க வேண்டும்.

நீர் பாய்ச்சுதல்

30 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் போதுமானது. வறண்ட காலமாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

ஊடு பயிர்

பப்பாளி, கத்தரி, தக்காளி, வெள்ளரி போன்ற பயிர்களை ஊடுபயிராக நடவு செய்யலாம்.

கிளை அகற்றுதல்

மரத்திற்கு மரம் கிளைகள் ஒன்று சேரும் தருவாயில் கிளைகளை குறைத்தல் வேண்டும். சூரிய ஒளி மண்ணில் படுமாறு கிளை நிர்வாகம் செய்தல் வேண்டும்.

பூச்சி மேலாண்மை

இலை சுருட்டு புழு, தண்டு துளைப்பான், செதில் பூச்சிகள் மற்றும் மாவுபூச்சி ஆகியன சப்போட்டாவில் பொதுவான பூச்சிகள் ஆகும். இதை கட்டுப்படுத்த பேசலான் 35 EC (2 மி.லி / லிட்டர்), குளூரிபைரிபாஸ் 20 EC  அல்லது டைமெதோட் (2 மி.லி / லிட்டர்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை

இலைப்புள்ளி நோய், கரும்பூஞ்சாண நோய் ஆகியன சப்போட்டாவை தாக்கும் நோய்கள் ஆகும். இதை கட்டுப்படுத்த டைத்தேன் எம் – 45, காப்பர் ஆக்ஸ்சி குளோரைடு (3 கிராம் / லிட்டர்) ஆகிய மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம். கரும்பூசண நோய்க்கு  1 கிலோ மைதாவை 5 லி நீரில் கரைத்து 20  லிட்டராக்கி தெளித்து கட்டுப்படுத்தலாம். (5 % மைதா (அ) ஸ்டார்ச் கரைசல்)

அறுவடை மற்றும் மகசூல்

மூன்றாம் வருடத்திலிருந்தே காய்க்க தொடங்கிவிடும். பொருளாதார ரீதியான மகசூல் என்று பார்க்குபோது ஐந்தாவது வருடத்திலிருந்து அறுவடை செய்யலாம். இரண்டு பருவங்களில் பூ வைத்து அறுவடை செய்யப்படுகிறது. பூக்கும் மாதங்கள் அக் – நவம் மற்றும் பிப் – மார்ச் ஆகும். அறுவடை மாதங்கள் ஜனவரி – மார்ச் மற்றும் மே – ஜூன் ஆகும். அதாவது பூ பூத்ததில் இருந்து அறுவடை செய்ய நான்கு மாதங்கள் ஆகும். நன்கு முதிர்ந்த காய்களையே அறுவடை செய்ய வேண்டும். அதாவது (75-90 %) முதிர்ந்த காய்கள், பழத்தோலில் உள்ள சிறிய சிறிய கருந்துகள்கள் மறைந்து பழங்கள் பளபளவென இருக்கும். காய்களின் மேலுள்ள துகள்களை நகத்தால் கீறி பார்க்கும்போது வெளிர் மஞ்சள் (அ) தங்க நிறத்தில் இருக்க வேண்டும்.

பச்சை நிறத்தில் இருந்தால் முதிர்ச்சியடையாத காய் என்று அறிந்துகொள்ளலாம். பழத்தோலின் சொரசொரப்பு  மாறி மிருதுவாகும். பறிக்கும்போது அதிகபால் வடியும் காய்கள் சுவை குறைவாகவும், தரமற்றதாகவும் இருக்கும். குறைவான பால் வடியும் காய்களே நன்கு முதிர்ந்த காய்கள் ஆகும். பறிக்கும் போது காய்கள் கீழே விழுந்து அடிபடாதவாறு கவனமாக அறுக்க வேண்டும். மரத்தின் கீழ் பகுதியில் வலை கட்டியும் அறுவடை செய்யலாம். மரத்தின் வயதை பொறுத்து 1000 முதல் 1500 காய்கள் வரை  ஒரு  மரத்திலிருந்து அறுவடை செய்யலாம்.

பழுக்க வைத்தல்

அறுவடை செய்த காய்களை நீரில் கழுவும்போது அதன் மேல் உள்ள மண் போன்ற துகள்கள், பால், இதர தூசுகள் நீங்கி சுத்தமாக இருக்கும். பின்பு நிழலில் உலர்த்தி கோணி பையில் காற்று புகாதவாறு கட்டி வைத்தால் இரண்டே நாட்களில் பழுத்துவிடும். வேதி பொருட்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கட்டுரையாளர்கள்: ரா. ராஜபிரகாசம்1, முனைவர் கோ. மாலதி2 மற்றும் முனைவர் ம. விஜயகுமார்31இளநிலை ஆராச்சியாளர், 2உதவிப் பேராசிரியர் (தோட்டக்கலை), 3திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம். தொடர்பு எண்: 8190908315.

Leave a Reply

editor news

editor news