Skip to content

அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-2)

ஆவண பராமரிப்பு:

அங்கக வேளாண் சான்றளிப்பில் ஆவண பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பண்ணை சாகுபடி மற்றும் பதப்படுத்தும் முறைகள், இடுபொருள், விளைபொருள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து தர வேண்டும். அங்கக விவசாய பண்ணைகளில் கீழ்க்கண்ட ஆவணங்களை, பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்.

  1. பண்ணை வரைபடம்.
  2. பண்ணை விளைநிலங்களைக் குறித்த கடந்த மூன்று ஆண்டுகளின் விபரங்கள்.
  3. பண்ணையில் மேற்கொள்ளப்படும் செய்முறைகள்.
  4. இடு பொருட்கள் பதிவேடு.
  5. விளை பொருட்கள் பதிவேடு.
  6. அறுவடைப் பதிவேடு.
  7. சேமிப்புப் பதிவேடு.
  8. விற்பனைப் பதிவேடு.
  9. குறியீட்டு அட்டை குறித்த பதிவேடு.

இந்த ஆவண பராமரிப்பு மூலம் சான்றிதழ் பெற்ற தோட்டங்களின் விளைபொருள்களில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதனைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய முடியும்.

சான்றளிப்பு  நிறுவனம்:

மத்திய வர்த்தக அமைச்சக விதிமுறைகளின்படி நம் நாட்டில் அங்கக வேளாண் சான்றளிப்பு வழங்கி வருகின்ற அல்லது வழங்க விரும்புகின்ற எந்த ஒரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனமும் மத்திய வர்த்தக அமைச்சகத்தில்  அங்கீகாரத்தைப் பெறவேண்டும்.

சான்றிதழ்  பெறும்  முறைகள்:

சான்றிதழ் பெற விரும்பும் அங்கக வேளாண் உற்பத்தியாளர்கள் மத்திய வர்த்தக  அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். உடனே சான்றளிப்பு நிறுவனம் விண்ணப்ப படிவம், கட்டண முறைகள், உற்பத்தி முறைகள், ஆய்வு மற்றும் சான்றளிப்பு வழிமுறைகள், தண்டனைகள் மற்றும் மேல்முறையீடு குறித்த தகவல்களை அனுப்பி வைக்கும். உற்பத்தியாளர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் கடந்த மூன்று வருடங்களாக பண்ணையில் கடைபிடித்த மண், நீர், பூச்சி, நோய் மற்றும் விளைபொருட்களைப் பதிவு செய்யும் முறைகள் போன்றவை குறித்த தகவல்களையும் அனுப்ப வேண்டும். அதன் பின் சான்றளிப்பு நிறுவனத்திற்கும், உற்பத்தியாளருக்கும் இடையே சான்றளிப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

பின்னர் சான்றளிப்பு நிறுவனம் தனது ஆய்வாளரை அனுப்பி பண்ணையை ஆய்வு செய்யும் ஆய்வாளர் தனது சிபாரிசுடன் கூடிய ஆய்வு அறிக்கையை சான்றளிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பார். பண்ணை ஆய்வின் போது தேவைப்பட்டால் மண், இலை, தழை மற்றும் விளை பொருள்கள் இடுபொருள்கள், பூச்சிக் கொல்லிகள் கலந்துள்ளனவா என்று கண்டறியப்படுகிறது. அதன்பின் சான்றளிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் சான்றிதழ் வழங்குகின்றது. இச்சான்றிதழ் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

சான்றளிப்பு நிறுவனம் அங்கக வேளாண் சான்றிதழை தனி நபருக்கோ அல்லது குழுக்களுக்கோ (உழவர் குழுக்கள் உழவர் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள்) வழங்கி வருகின்றது.

தனிநபர் சான்றளிப்பு:

சான்றிதழ் பெற விரும்பும் தனிநபர் உற்பத்தியாளர்கள் நேரடியாக சான்றளிப்பு நிறுவனத்தை அணுகி சான்றளிப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். சான்றளிப்பு நிறுவன ஆய்வுக்குப் பின் சான்றிதழை தனிநபர் பெயரில் வழங்கப்படுகிறது. தனிநபர் உற்பத்தியாளர் சிறு விவசாயியாக இருக்கும் பட்சத்தில் அங்கக வேளாண் விளை பொருட்களின் அளவும் குறைவாகவும் இருக்கும். ஆதலால் விளைபொருட்களை விற்பனை செய்வதில் பிரச்சனை ஏற்படுகிறது.

குழு சான்றளிப்பு:

விவசாய குழுக்கள், விவசாய சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் போன்றவை குழு சான்றளிப்பின் கீழ் வருகிறது. குழுவில் உள்ள அங்கக விவசாயிகளின் சார்பில் குழுவானது சான்றளிக்கும் நிறுவனத்தை அணுகி சான்றளிப்பு ஒப்பந்தம் செய்து கொள்கிறது. சான்றளிப்பு நிறுவனம் ஆய்விற்கு பின் சான்றிதழை குழுவின் பெயரில் வழங்குகிறது.

குழு சான்றளிப்பில் உள்கட்டுப்பாட்டு அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதாவது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர் விவசாயியின் தோட்டத்தையும் மேற்கூறிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சங்கங்கள் தமக்குள்ளே ஆய்வு செய்து ஆய்வறிக்கையை பாரமரிக்க வேண்டும். சான்றளிப்பு நிறுவனம் குழுவில் உள்ள தோட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வு செய்தும் ஆய்வு செய்தும் ஆவணங்களைச் சரிபார்த்தும் சான்றிதழை வழங்குகிறது. குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் உண்மையுடனும், பரஸ்பர நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். குழுவில் யாரேனும் ஒருவர் அங்கக விவசாய விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறினால் குழுவின் சான்றளிப்பு பாதிக்கப்படும்.

குழு சான்றளிப்பில் சான்றுக்கட்டணம் மிகவும் குறைவு குழுக்களில் அதிக அளவில் அங்கக வேளாண் விளை பொருட்கள் கிடைக்கும் என்பதாலும் குழுவின் பெயரில் சான்றிதழ் வழங்கப்படுவதாலும் குழுவானது நேரடி விற்பனை அல்லது ஏற்றுமதி செய்ய இயலும்.

  • முற்றும்.

கட்டுரையாளர்கள்: முனைவர் பே. கிறிஸ்டி நிர்மலா மேரி, முனைவர் இரா. முருகராகவன், முனைவர் ஜெ. இராமச்சந்திரன், செல்வி. ச.கற்பகம் மற்றும் திரு. ப. இராமமூர்த்தி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை-625104. மின்னஞ்சல்: chrismary21041969@gmail.com

Leave a Reply

editor news

editor news