மண்புழு என்பது மண்ணில் வாழும் முதுகு நாணற்ற உயிரினமாகும். சுமார் 80 சதவீதம் மண்ணில் காணப்படுகிறது. மண்புழுவானது கரிமக்கழிவுகளை உண்டு அதனை சத்தான உரமாக மாற்றி மண்ணிற்கு அளிக்கின்றது. எனவே, மண்புழு உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றது. இரசாயன உரங்களின் மூலம் ஏற்படும் மாற்றத்தினை தவிர்க்க பயன்படுகின்றது. மண்புழுவின் செயல்களினால் மண்ணில் உள்ள காற்றின் அளவு 8-30% வரை அதிகரிப்பதாகவும் மற்றும் நீர் ஊடுருவும் திறன் 4-10 மடங்கு அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மண்புழுவின் உடலில் 70% புரதம் இருப்பதால் இறந்த மண்புழுவின் உடல் மட்கும் போது மண்ணின் தழைச்சத்தை அதிகரிக்கின்றது. மண்புழு, மண்ணுக்கும் அதன் மூலம் மக்களுக்கும் ஓய்வில்லாமல் மகத்தான பணியாற்றி வருகின்றது. மண்புழுவின் ஓய்வில்லாத தொடர் உழைப்பினை மனோன்மணியம் சுந்தரனார் “நாங்கூழ்ப் புழுவே உன் பாடு ஓவாப்பாடு” எனப் பாராட்டுகின்றார்.
மண்புழு உரம் தயாரித்தல்:
கரிமக்கழிவுகளை மண்புழுக்கள் மூலம் மட்க செய்து உரம் தயாரிக்கும் முறையே வெர்மிகம்போஸ்டிங் (Vermicomposting). இந்த மண் புழு உரத்தினை வருடம் முழுவதும் நம் மண்ணிலேயே உற்பத்தி செய்யலாம். குறுகிய காலத்தில் அதாவது 40-60 நாட்களிலே கழிவுகள் மட்கி உரமாக மாறுகின்றது. தற்போது தொழில்முனைவோர் அதிக
அளவில் உற்பத்தி செய்து வருகின்றனர்.
உரம் தயாரிக்கும் முறை:
- மண்புழு உரத்தினை தயாரிக்க நிழலான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- சிறிய அளவில் உரத்தினை தயாரிக்க வீட்டின் அருகில் 2மீ நீளம்×1 மீ அகலம்×1 மீ ஆழம் அளவுக்கு குழி தோண்ட வேண்டும்.
- குழியின் அடிப்பகுதியில் 8 செ.மீ உயரத்திற்கு உடைந்த செங்கற்களை நிரப்ப வேண்டும். அதற்கு மேல் தென்னை நார் அல்லது காய்ந்த புல்லை பரப்ப வேண்டும்.தென்னை நாரானது ஈரப்பதத்தை சேமிக்க உதவுகின்றது.
- பின்னர் 15 செ.மீ அளவிற்கு அடுக்கு அடுக்காக கரிமக்கழிவுகள் மற்றும் மாட்டு சாணத்தை கொண்டு நிரப்ப வேண்டும்.
- குழி நிரப்பப்பட்டு அதன் மேலே வைக்கோல் இட்டு தண்ணீர் தெளித்தல் வேண்டும்.
- தினந்தோறும் நீரைத் தெளித்து 60 சதவீதம் ஈரப்பதத்தில் வைக்க வேண்டும்.
- 20-25 நாட்கள் கழித்து 2000-2500 மண்புழுக்களை இட வேண்டும்.
- 35 நாட்களுக்கு மேல் குழியின் மேற்பகுதியில் குருணை வடிவில் புற்றும் புற்றாக மண்புழு உரம் உருவாகும். 50-60 நாட்களில் மண்புழு உரம் தயாராகிவிடும்.
- மண்புழு உரத்தினை அவரவர் தேவைக்கேற்ப குழி, பெட்டி மற்றும் குவிப்பு முறைகளிலும் தயாரிக்கலாம்.
மண்புழு உரத்தினை சேகரித்தல்:
- மண்புழு உரத்தினை அறுவடை செய்வதற்கு முன் நீர் தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும். மண் புழுக்களானது கீழே ஈரமான பகுதிக்கு சென்றுவிடும். தயாரான மண்புழு உரத்தினை ஒரு குவியலாக குவிக்க வேண்டும். 2 அல்லது 3 மணி நேரத்தில் புழுக்களானது கீழே போய்விடும்.
- பின்பு உரத்தினை நிழலில் உலர்த்தி சல்லடையால் சலிக்க வேண்டும்.
- சலித்த உரத்தை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
- சல்லடைக்கு மேல் தங்கும் புழுமுட்டைகளையும், குட்டி புழுக்களையும் புதிய உரத்தினை தயாரிக்க பயன்படுத்தலாம்.
நன்மை பயக்கும் மண்புழு:
ஓரளவு மட்கிய கரிமப்பொருட்களை மண்புழுக்கள் உண்டு அதனுடைய அரைவை பையில் அரைக்கப்படுவதால் அதன் மேற்பரப்பு அதிகரிக்கிறது.இந்த அதிகரிக்கப்பட்ட பரப்பில் பலவகையான நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சான்கள் வளர்கின்றன. இவ்வாறு கரிமப் பொருட்களின் மூலம் நுண்ணுயிர்கள் பல்கி பெருகின்றன. இதன்மூலம் சுரக்கின்ற நொதிகளானது கரிமப்பொருட்களை விரைவில் சிதைத்து மட்க செய்கின்றன. எனவே மண்புழுவின் குருணையில் அதிக அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களும் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் தாவர வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றது. மண்புழுக்களானது தன் எடையை போல் 1-10 மடங்கு கரிமப்பொருட்களை உண்ணுகின்றன. ஆனால் மண்புழுவானது 10 சதவீதம் மட்டும் தன்னுடைய வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்துகின்றது. மீதமுள்ள 90 சதவீதத்தை கரிமப்பொருட்களை மட்க செய்து மண்ணிற்கும் மற்றும் பயிர்களுக்கும் நன்மையை பயக்கின்றது.
கட்டுரையாளர்: பி.மெர்லின், முதுநிலை வேளாண் மாணவி, வேளாண் நுண்ணுயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: merlinbrittoagri@gmail.com