Site icon Vivasayam | விவசாயம்

அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-1)

ஆரம்ப காலத்திலே அங்கக வேளாண்மை விளை பொருட்களிலும் இயற்கையான பொருள்கள் என்ற பொய்மையா விளம்பரத்துடன் சந்தைக்கு வர ஆரம்பித்தது. அக்கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் அங்கக வேளாண் விளை பொருட்கள இறக்குமதி செய்து வருகிறது.  போலியான அங்கக வேளாண் விளைபொருட்களை தடுக்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆர்கானிக் ரெகுலேசனை (Organic Regulation ECC No. 2092/91) 1991-ம் ஆண்டு அங்கக விவசாயம் பற்றிய சட்டத்தைப் பிறப்பித்தது.

             நம்முடைய  நாட்டிலும் அங்கக வேளாண் உற்பத்தி பற்றிய தேசிய திட்டம் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அங்கக வேளாண் உற்பத்தி மற்றும் சான்றளிப்பு முறைகள் பற்றி விளக்கி கூறப்பட்டுள்ளது.  மேலும் சர்வதேச சந்தையில் இந்திய அங்கக வேளான் பொருட்களைப் பிரபலப்படுத்த இந்திய ஆர்கானிக் என்ற முத்திரையையும் வெளியிட்டுள்ளது.

சான்றளிப்பு:

அங்கக வேளாண் விளைபொருட்கள் உள்நாட்டு மற்றும சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. நுகர்வோர்கள், குறிப்பாக வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ளவர்கள் வேளாண் விளைபொருட்கள் அங்கக விவசாய முறையிலே உற்பத்தி செய்யப்பட்டவை என்று திருப்தியடைந்தால்தான் பொருள்களை வாங்குவர்.             நம்நாட்டில் உணவுப் பொருள்களுக்கு அக்மார்க் தர சான்றளிப்பும், நல்ல உயர்ரக விதைகளுக்கு விதைச்சான்றளிப்பும் நடைமுறையில் உள்ளது  யாவரும் அறிந்ததே.   இதைபோல் தான் தரமான அங்கக வேளாண் விளைப் பொருட்களை விற்பனை செய்ய சான்றளிப்பு தேவைப்படுகிறது.

அங்கக வேளாண் சான்றளிப்புக்கான குறைந்தபட்ச தேவைகள்:

அங்க வேளாண் சான்றளிப்பு பொருட்களை மட்டும் ஆய்வு செய்து வழங்கப்படுவதில்லை. மாறாக சாகுபடி முறைகளை ஆய்வு செய்த தோட்டத்திற்குதான் சான்றளிப்பு வழங்கப்டுகிறது. தேசிய அங்கக வேளாண் பொருட்கள் உற்பத்தி திட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தேவைகளைப் பற்றி கீழே காண்போம்

  1. பண்ணை முழுவதையும் குறிப்பிட்ட வருடத்திற்குள் அங்கக விவசாயத்திற்கு மாற்றுவதே சாலச்சிறந்தது. அதுவரை அங்கக விவசாயம் செய்யும் பகுதிகளையும், அங்கக விவசாயம் அல்லாத பகுதிகளையும் தனித்தனியே பராமரித்து வரவேண்டும்.
  2. விதைகள் மற்றும் நடவுப் பொருட்களை அங்கக விவசாயப் பண்ணைகளிலிருந்தே வாங்குவது சிறந்தது. அங்கக விவசாய விதைகள் கிடைக்காவிட்டால் இரசாயனப் பொருட்களைக் கொண்டு நேர்த்தி செய்யாத விதைகளை ஒரு முறை பயன்படுத்தலாம்.
  3. மரபணு தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட விதைகளையும், செடிகளையும் பயன்படுத்தக்கூடாது.
  4. பண்ணையில் கால்நடை வளர்ப்பு, பயிர் சுழற்சி மூடாக்குப் பயிர்கள் வளர்ப்பு,  பசுந்தாள் மற்றும் தீவனப்பயிர்கள் வளர்ப்பு, ஊடுபயிர் மற்றும் கலப்பு பயிர் வளர்ப்பு, காடு வளர்ப்பு போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதனால்  வேறுபாட்டை பராமரிக்க முடியும்
  5. தமது பகுதிக்கு ஏற்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  6. இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூசணக் கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் இரசாயனப் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது.
  7. தாவரங்கள் விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களை ஆதாரமாகக் கொண்டுள்ள வேளாண் இடுபொருட்களைப் பயன்படுத்தி மண் வளத்தைப் பெருக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்
  8. பண்ணையின் அங்கக கழிவுகளைத் தீயிட்டு கொளுத்தக் கூடாது. அதனை மறுசுழற்சி செய்து மண்வளத்தை பெருக்க வேண்டும்.
  9. மண்வளப் பாதுகாப்பு உத்திகளை கடைபிடித்து மண் அரிப்பை தடுக்க வேண்டும். தகுந்த நீர்நிர்வாக முறைகளைக் கடைபிடித்து நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்.
  10. விவசாயத்திற்காகக் காடுகளை அழிப்பது தடை செய்யப்பட்டுள்ளது
  11. அண்டைய தோட்டங்கள் அங்கக தோட்டங்களாக இருப்பின் அத்தோட்டங்களில் இடப்படும் இரசாயனஉரம் மற்றும் பூச்சிகொல்லி மூலம் மாசு ஏற்படுவதைத் தடுக்க காப்புமண்டலத்தை உருவாக்கிட வேண்டும்.
  12. நாற்றுகள் வளர்க்கவோ, நாற்றங்கால் அமைக்கவோ பாலித்தீன் பொருள்களை உபயோகப்படுத்த நேரிட்டால் அவற்றின் உபயோகத்திற்குப் பிறகு அவற்றை மண்ணில் தீயிட்டு கொளுத்தக்கூடாது. அவற்றை தனியே அப்புறப்படுத்த வேண்டும்.
  13. தொழிலாளர்களுக்கான சமூகை நீதியைப் பாதுகாக்க வேண்டும்.
  14. விளை பொருட்களை கூடுமானவரை இடைத்தரகர்கள் இன்றி நேரடி விற்பனை செய்ய வேண்டும்.
  15. ஓராண்டு பயிர் செய்யும் தோட்டங்களுக்கு அங்கக விவசாயம் தொடங்கிய தேதியிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் கழித்து சான்றளிப்பு வழங்கப்படும். பல ஆண்டுகளாக அங்கக விவசாயம் செய்து வரும் தோட்டங்களில் இதனை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமானால் சான்றளிப்பு நிறுவனம் இந்த மாறும் காலத்தை குறைக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ முடியும்.

-தொடரும்…

கட்டுரையாளர்கள்: முனைவர் பே. கிறிஸ்டி நிர்மலா மேரி, முனைவர் இரா. முருகராகவன், முனைவர் ஜெ. இராமச்சந்திரன், செல்வி. ச.கற்பகம் மற்றும் திரு. ப. இராமமூர்த்தி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை-625104. மின்னஞ்சல்: chrismary21041969@gmail.com

Exit mobile version