பசுமை இல்ல பராமரிப்பு
- மண்
பொதுவாக வணிக மலர்கள் பசுமை மாளிகையின் தரைப்பரப்பில் தான் பயிரிடப்படுகின்றன. ஆனால் அழகுத் தாவரங்கள் மண் கலவை நிரப்பப்பட்ட தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பசுமை இல்லத்தில் உள்ள பெஞ்சுகளில் வைத்து பராமரிக்கப் படுகின்றன. ஆகவே பசுமை இல்லங்களில் மலர்களை வளர்க்க நல்ல வடிகால் வசதி உடைய வளமான நடுநிலை அமிலக் காரத் தன்மையுடைய மண்ணை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். நல்ல வளமான நிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்ணை அவற்றில் உள்ள நுண் கிருமிகள் அழியும் பொருட்டு நீராவி அல்லது மருந்துகளைக் கொண்டு சுத்திகரிக்க வெண்டும். மலர்களை இவ்வாறு சுத்தப்படுத்திய மண்ணில் சாகுபடி செய்தபின் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பழைய மண்ணை அகற்றிவிட்டு சுத்தமாக்கப்பட்ட புதிய மண்ணை சாகுபடிக்கு பயன்படுத்த வெண்டும். வளர்ச்சி ஊடகமாக மண்ணைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால் தற்பொது மண் இல்லாத மற்ற ஊடகங்களை பாலித்தீன் மற்றும் தொட்டிகளில் நிரப்பி மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
- உர மேலாண்மை
ஒவ்வொரு வகை மலர் பயிருக்கும் தேவையான உர அளவை ஊடகத்தில் தூவியும் இலை வழி தெளித்தும் பாசன நீர் கலந்தும் கொடுக்கலாம். மணிச்சத்து மற்றும் மெதுவாக வெளியாகும். உரங்களை ஊடகத்தில் அடியுரமாகவும் நீரில் கரையும் உரங்களை மேலுரமாக இலைகளில் தெளித்தும் பாசன நீருடன் கலந்தும் கொடுக்க வேண்டும்.
- நீர்ப்பாசனம்
பசுமை இல்லத்தில் அமிலக் காரத் தன்மை இல்லாத சுத்தமான தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும். தெளிப்பு மற்றும் சொட்டு நீர் பாசன முறையில் பசுமை இல்லத்தில் நீர்ப்பாசனம் செய்யலாம். பொதுவாக செடிகள் பிழைக்கும் வரை தெளிப்பு பாசனம் மூலமாகவும் செடியின் எல்லா வளர்ச்சிப் பருவங்களில் சொட்டு நீர்ப் பாசனம் மூலமாகவும் நீர்ப் பாசனம் கொடுக்க பயிரின் வளர்ச்சி நிலைகேற்ப பாசன முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பயிர்ப் பாதுகாப்பு
பசுமை இல்லத்தில் நிலவும் கட்டுப்படுத்தப் பட்ட சூழ்நிலையில் பூச்சி மற்றும் நோய்கள் பெருகுவதற்கு ஏற்றதாக உள்ளன. பசுமை இல்லத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விசத் தன்மையான பூச்சி பூஞ்சாண மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. அசுவிணி வெள்ளை எறும்பு பொன்ற பூச்சிகளை ஹைடிரோ சயனிக் அமிலத்தைப் பயன்படுத்தியும் பூச்சிக் கொல்லி வகைகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்த விஷத்தன்மை குறைந்த தாமிரக் கலவை அல்லது கந்தகத் தூளைப் பயன்படுத்த வேண்டும்.
பசுமை இல்ல சாகுபடிக்கு உகந்த பயிர்கள்
ஏற்றுமதிக்கேற்ற தரமான மலர்களையும் அதிக லாபத்தையும் பெறுவதற்கு தரமான நாற்றுக்களையும் ரகங்களையும் தேர்ந்தெடுப்பது மிக அவசியம் ஆகும். பொதுவாக பசுமை இல்லத்தில் வளர்க்கப்படும் மலர் ரகங்களால் இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைக்கேற்ற வகையிலும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாத ஒழுங்கான வளர்ச்சியுடையவையாகவும் இருக்க வேண்டும். அழகு தொட்டி செடிகளை தொட்டிகளிலும் வணிக கொய் மலர்களை பசுமை இல்லத்தில் உள்ள தரையில் நிரப்பிய சுத்திகரிக்கப்பட்ட மண்ணிலும் வளர்க்க வேண்டும். மலர்நாற்றுக்கள் உற்பத்தி செய்ய பசுமை இல்லத்தினுள் மேட்டுப் பாத்திகள் அமைத்து விதைகளை விதைக்க வேண்டும். நாற்றுக்கள் தயார் ஆனவுடன் மேற்கூறிய பராமரிப்பு முறைகளை கையாண்டு பசுமை இல்லத்தினுள் மலர்களை வளர்க்க வேண்டும்.
முக்கிய மலர்ப் பயிர்களும் அவற்றிக்கு உகந்த கால நிலைகளும்
வ.எண். | பயிர் | வெப்ப அளவு | ஒளி அளவு | ||
விதை முளைப்பு
|
பகல் வெப்பம் | இரவு வெப்பம் | |||
1. | ரோஜா | – | – | 15.5 | நடு அளவு |
2. | கிளாடியோலஸ் | 7-13 | 15-20 | – | நீண்ட ஒளி நாள் ஒளி நேரம் |
3. | கார்னேசன் | – | 18.3 | 13.2-14.3 | நீண்ட ஒளி நேரம் |
4. | சாமந்தி | 18-21 | – | 15.5-12.7 | குறைந்த ஒளி நேரம் |
5. | சம்பங்கி | – | 20-30 | – | 16 மணி நேரம் |
6. | டாலியா | 18-28 | 25 | 12 | 10-14 மணி நேரம் |
7. | ஜெர்பிரா | 25 | – | 12 | 8 மணி நேரம் |
8. | ஆந்தூரியம் | – | 18-21 | – | |
9. | ஆர்கிட்ஸ் | ||||
1. வெப்ப மண்டல ஆர்க்கிடுகள் | – | 21-29 | 18-21 | குறைந்த ஒளி நேரம் | |
2. மித வெப்ப மண்டல ஆர்க்கிடுகள் | – | 18-21 | 15.5-18 | குறைந்த ஒளி நேரம் | |
3. குளிர்ப்பிரதேச ஆர்க்கிடுகள் | – | 15.5-21 | 10-12.5 | குறைந்த ஒளி நேரம் |
எதிர்கால கண்நோக்கு
இந்தியாவில் சுமார் 75 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு சாகுபடி செய்ய இயலாத கடுங்குளிரும் வறண்ட வெப்பமும் நிலவும் பகுதியாக காணப்படுகிறது. இன்னும் வணிக ரீதியில் சாகுபடிக்கு பயன்படுத்தப் படாத பசுமை இல்லங்களை பயன்படுத்தி மேற்கூறிய நிலப்பரப்பில் ஒரு பகுதியில் சாகுபடி செய்தால் கூட கணிசமான அளவு அந்நியச் செலவாணி பெறுவதற்கு வாய்ப்பாக உள்ளது. ஆகவே பயன்படுத்தப்படாத நிலப்பரப்புகளை முறையான பசுமை இல்ல சாகுபடியின் கீழ் கொண்டு வந்து மேற்கூறிய பராமரிப்பு முறைகளைக் கையாளுவதன் மூலம் நாட்டில் மலர்கள் உற்பத்தியில் ஒரு மலர்புரட்சியைச் செய்யலாம் என்பது திண்ணம்.
-முற்றும்…
கட்டுரையாளர்கள்: 1. அ. சங்கரி, இணைப் பேராசிரியர் (தோட்டக்கலை), காய்கறி பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003.
- கி. திவ்யா, உதவிப் பேராசிரியர் (வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மை துறை), வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் – 641 301
மற்றும்
- கா. கயல்விழி உதவிப் பயிற்றுனர் (தோட்டக்கலை), வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர் – 621 712.
மின்னஞ்சல்: sathatnau@yahoo.co.in