இரசாயன உரங்கள் குறுணை வடிவத்திலோ அல்லது மாவு வடிவத்திலோ மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம். இத்தகைய உரங்கள் மண்ணில் இடப்பட்டவுடன் தானாகவே நீரில் ஊறி மண்ணில் கரையும் வரை காத்திருக்கிறோம். நீர்ப்பாசனமும் வாரம் ஒரு முறை மட்டுமே பொதுவாக மேற்கொள்ளப்படுவதால் இட்ட உரத்தில் எவ்வளவு செடிக்கு கிடைக்கிறது? எத்தனை நாளில் கிடைக்கிறது? சீராக கரைந்து செடிக்கு கிடைக்கிறதா? என்பதா? மண்ணின் தன்மைக்கேற்ப மிகவும் மாறுபடுகின்றது. செடியின் வேர்ப்பகுதிக்கு குறித்த காலகட்டத்தில், குறித்த அளவு நீரும் உரமும் கிடைக்கிறது என்பதற்கு இம்முறையில் உத்திரவாதம் இல்லை. அளவுக்கு அதிகமான உரம் இடப்பட்டு மண்ணும் நீரும் மாசுபடுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. உரத்திற்கு கொடுக்கப்படும் நிதியுதவி மானியம் கிட்டத்தட்ட மண்ணும் நீரும் மாசுபடுத்தப்படவே பெரிதும் உதவுவதாகக் கொள்ளப்படுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டுதான் உலகெங்கிலும் நீர்ப்பாசனத்தையும் உரமிடலையும் சீர்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய நீர்ப்பாசன முறைகளும், உரமளிக்கும் முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
நுண்நீர்ப்பாசன முறைகள் என்றும் கரைதிறன் கொண்ட இரசாயன உரங்கள் (திட மற்றும் திரவ வடிவில்) என்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. பாசன முறையையும், கரையும் உரங்களை இடும் முறையையும் ஒன்றாக இணைத்து, நீர்ப்பாசனத்தோடு உரமிடலும் ஒரே செயலாக நடைபெறும் விதத்தில் நீர்வழி உரமிடல் அல்லது நீர் உரப்பாசனம் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே செடியின் வேர்ப்பகுதியில் மட்டும் நீரும் உரமும் தேவையான அளவில் துல்லியமாக இடப்படுவதால் நீரும் உரமும் வீணாவதுமில்லை. மண்ணும் நிலத்தடி நீரும் மாசுபடுவதில்லை. அதே சமயம் செடியின் சமச்சீரான வளர்ச்சிக்கேற்ப நீரையும் உரத்தையும் கையாள்வதால், அதிக விளைச்சலும் கிடைக்கிறது. நீருக்கான மற்றும் உரத்திற்கான செலவும் குறைகிறது.
கரையும் திட இரசாயன உரங்கள்
பெயருக்கேற்றவாறு கரையும் திட இரசாயன உரங்கள் நூறு சதம் எளிதில் நீரில் கரையக்கூடியன (பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் கால்சியம் நைட்ரேட் கரையும் உரங்களில் மட்டும் சொற்ப அளவு நீரில் கரையாமல் இருக்க வாய்ப்பு உண்டு). பெரும்பாலான கரைதிறன் கொண்ட திட உரங்களை நுண்நீர்ப்பாசன முறையில் முழுமையாக சுலபமாக அளிக்க முடியும். இத்தகைய உரங்களை நீரில் கரைத்து இலை வழியேயும் தெளித்து செடிக்கு கொடுக்க முடியும். துல்லிய பண்ணை முறைக்கு மிகவும் ஏற்றது. இத்தகைய கரைதிறன் கொண்ட திரவ உரங்களும் உண்டு. திட உரங்களும் உண்டு. திட உரங்களுக்கும் திரவ உரங்களுக்கும் வடிவத்தைத் தவிர வேறு வித்தியாசங்கள் கிடையாது. மோனோ பொட்டாசியம் பாஸ்பேட் (00-52-34), பொட்டாசியம் மெக்னீசியம் சல்பேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட் (12-61-00) ஆகியின 100 சதம் நீரில் கரையும் திட வடிவ உரங்களாகும். யூரியா, அம்மோனியம் நைட்ரேட் (32 %), சூப்பர் பாஸ்பாரிக் அமிலம் (70 %), அம்மோனியம் பாலி பாஸ்பேட் (10-34-00) ஆகியன கரைதிறன் கொண்ட திரவ வடிவ உரங்களாகும்.
வ. எண்; | உரங்களின் பெயர்; | காணப்படக்கூடிய உர வடிவங்கள் |
01. | NPK (13:4:12) | நைட்ரஜன், நைட்ரேட் நைட்ரஜன், அம்மோனியாகல் நைட்ரஜன், நீரில் கரையும் பாஸ்பேட் நீரில் கரையும் பொட்டாஷ் மற்றும் சோடியம் |
02. | NPK (18:18:18) | நைட்ரஜன், நைட்ரேட் நைட்ரஜன், அம்மோனியாகல் நைட்ரஜன், நீரில் கரையும் பாஸ்பேட், நீரில் கரையும் பொட்டாஷ் மற்றும் சோடியம் |
03. | NPK (13:5:26) | நைட்ரஜன், நைட்ரேட் நைட்ரஜன், அம்மோனியாகல் நைட்ரஜன், நீரில் கரையும் பாஸ்பேட், நீரில் கரையும் பொட்டாஷ் மற்றும் சோடியம் |
04. | NPK (6:12:36) | நைட்ரஜன்> நைட்ரேட் நைட்ரஜன்> அம்மோனியாகல் நைட்ரஜன்> நீரில் கரையும் பாஸ்பேட்> நீரில் கரையும் பொட்டாஷ் மற்றும் சோடியம்; |
05. | NPK (20:20:20) | நைட்ரஜன்> நைட்ரேட் நைட்ரஜன>; அம்மோனியாகல் நைட்ரஜன்> நீரில் கரையும் பாஸ்பேட்> நீரில் கரையும் பொட்டாஷ் மற்றும் சோடியம் |
06. | NPK (19:19:19) | பொட்டாஷ் மெக்னீசியம் குளோரைடு> சோடியம் குளோரைடு மற்றும் சல்பேட் |
07. | பொட்டாசியம் நைட்ரேட் | நைட்ரஜன்> நீரில் கரையும் பொட்டாஷ்> சோடியம் குளோரைடு மற்றும் கரையாத பகுதி 0.05 சதம் (எடையில்) |
08. | கால்சியம் நைட்ரேட் | நைட்ரஜன்> அம்மோனியா நைட்ரஜன்> கரையும் கால்சியம்> கரையாத பகுதி 1.5 சதம் (எடையில்) |
-தொடரும்…
கட்டுரையாளர்கள்: ஹரிஹரசுதன், வை., சண்முகம், பூ. மு. மற்றும் விஜயபிரபாகர், ஆ.
வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளுர் – 621 712, திருச்சி. மின்னஞ்சல்: tnauhari@gmail.com