Skip to content

நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு

ஹிர்ஸ்மேனில்லா ஒரைசே என்றழைக்கப்படும் நெல் வேர் நூற்புழு நெற்பயிரைத்  தாக்கி அழிக்கக்கூடிய முக்கியமான நூற்புழுக்களுள் ஒன்றாகும். இது முதன் முதலில் 1902 ஆம் ஆண்டு ஜாவா தீவில் உள்ள நெல் வயலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்நூற்புழு நெற்பயிர் விளைவிக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றது.

நெல் வேர் நூற்புழு போன்ற உருவத்துடன் காணப்படும் நீளமான நூற்புழுவாகும். இதனை உருப்பெருக்கியால் மட்டுமே காணமுடியும். இந்நூற்புழு வேரின் உள்ளே புகுந்து வாழ்நாள் முடிய நகர்ந்து கொண்டே  பயிரின் சாறை உறிஞ்சும் தன்மை கொண்டது. வட இந்தியாவில்  ரபி பருவத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால் நூற்புழுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். அதற்கு மாறாக தமிழகத்தில்  இரண்டு முதல் மூன்று போகம் நெல் சாகுபடி செய்வதாலும் வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலை காணப்படுவதாலும் இந்நூற்புழு பல மடங்கு பல்கி பெருகி பயிரை சேதப்படுத்துகிறது.

உருப்பெருக்கியில்  நெல் வேர் நூற்புழுவின் தோற்றம்

பொதுவாக இந்நூற்புழுக்களின் எண்ணிக்கை பூக்கும் தருணத்தில் அதிகமாக காணப்படும். நெல் வயலில் காணப்படும் கிராமினே மற்றும் சைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த களைச் செடிகளிலும் வாழும் தன்மை கொண்டது. ஆண், பெண்  மற்றும் அனைத்து நிலை நூற்புழுக்களும் பயிரை தாக்கி அழிக்கும் திறன் பெற்றதாலும் இந்நூற்புழு ஏற்படுத்திய காயங்களின் வழியே மண்ணில் உள்ள தீமை செய்யக்கூடிய பூஞ்சணங்கள் உள்ளே சென்று கூட்டு நோயை உண்டாக்குவதாலும் பயிருக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது.

நூற்புழுக்களுக்கும் பயிருக்கும் இடையேயான தொடர்பு

பயிரின் வேர் பகுதியில் நுழையும் நூற்புழு எபிடெர்மல் செல்களில் காயங்களை ஏற்படுத்துகிறது. கார்டெக்ஸ் பகுதியில் செல்களின் சுவர்கள் கரைந்து குழிகள் ஏற்படுகிறது. பின்னர் பல குழிகள் இணைந்து வேரழுகல் நோயை ஏற்படுத்துகிறது.

ஒரு மாத ஆயுட்காலத்தை கொண்ட இந்நூற்புழு வேரின் உள்ளே கார்டெக்ஸ் என்றழைக்கப்படும் பகுதியில் முட்டை இடும் தன்மை கொண்டவை. பொதுவாக பயிர் அறுவடை செய்வதற்குள் 2 முதல் 4 தலைமுறை நூற்புழுக்களை உருவாக்கும் திறன் கொண்டவை. இந்நூற்புழுக்களின் பாதிப்பு வடிகால் வசதி கொண்ட மணல் பாங்கான நிலங்களிலும், நேரடி நெல் விதைப்பு வயலிலும் அதிகமாக காணப்படும்.

சேத அறிகுறிகள்

  • பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும்
  • தூர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும்
  • சாதாரண பயிரை விட இந்நூற்புழுக்களினால் பாதிப்படைந்த நெற்பயிர் பூப்பதற்கு இரண்டு வாரங்கள் தாமதமாகும்.
  • பாதிப்படைந்த பயிரில் நெல் மணிகளின் எடை குறைதல்
  • பாதிப்படைந்த வேர் பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்
  • வேர் பாகத்தின் சாறுகள் உறிஞ்சப்பட்டு சக்கை போன்று காணப்படும்.மகசூல் இழப்பு
    • இந்நூற்புழுக்கள் பராமரிப்பு இல்லாத மற்றும் போதிய உரமிடாமல் உள்ள வயல்களில் 31 சதம் மகசூல் இழப்பும் மற்றபடி 19 சதம் மகசூல் இழப்பும் ஏற்படுத்துகிறது.

    நூற்புழு மேலாண்மை

    • நடவுக்கு முன்பு சணப்பை பயிரிட்டு அதை பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதல்

    நெல் வேர் நூற்புழுக்களை கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறையில்

    • உளுந்து, பச்சைப்பயறு, எள் அல்லது நிலக்கடலை பயிரிடுதல்
    • வயலில் உள்ள களைச் செடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல்
    • மண் பரிசோதனை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்பட்ட அளவில் உரமிடுதல்
    • சூடோமோனஸ் எதிர் உயிர்க்கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல்.
    • நடவு வயலில் கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு ஏக்கருக்கு 13 கிலோ வீதம் இடுதல். ஒரு வாரத்திற்கு பிறகு யூரியா 1.5 சதம் (100 லிட்டர் தண்ணீருக்கு 1 கிலோ ) தெளித்தல்.
    • பயிரின் வளர்ச்சி மிகவும் பாதிப்படையும் தருணத்தில் 1 சதம் பிபி.எப்.எம் (12 லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி வீதம் கலந்து தெளித்தல் )
    • கோடை உழவு செய்தல் போன்ற மேலாண்மை முறைகளை விவசாய பெருமக்கள் பின்பற்றி நெல் வேர் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

    கட்டுரையாளர்: மோ. சண்முகப்பிரியா, உதவிப் பேராசிரியை (நூற்புழுவியல்), வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  நிலையம், ஈச்சங்கோட்டை தஞ்சாவூர் – 614 902. மின்னஞ்சல்: shanmugapriyam@tnau.ac.in

Leave a Reply

editor news

editor news