Skip to content

உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

உளுந்து பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இதிலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இது. இங்கு  பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் பருப்பு வகையாகும்.   தோசை, இட்லி, வடை என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உளுந்தில் பெருமளவு விளைச்சலைப் பாதிக்கும் மஞ்சள் தேமல் நோய்ப்  பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் இங்கு காண்போம்.

நோய்க்காரணி

இந்நோய் உளுந்து மஞ்சள் தேமல் நச்சுயிரியினால் தோன்றுகிறது.

நோயின் அறிகுறிகள்

பயிர் சுமார் ஒரு மாத வயது இருக்கும் போது, நோயின் அறிகுறிகள் தோன்றும். முதலில் இலைப்பரப்பில் மஞ்சள் நிறப்புள்ளிகள், பெரும்பாலும் சிறிய அளவில் தோன்றும். பின்னர் இப்புள்ளிகள் விரிவடைந்து, மஞ்சளும் பச்சையும் மாறி மாறி, ஒழுங்கற்ற வடிவில், படைகளாகத் தோன்றும். பின்னர் இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். நாளடைவில் மஞ்சள் நிறமாக மாறிய இலைகள் வெளிரி, கரிந்து, மடிந்து விடும். செடியினுள் காணப்படும் நச்சுயிரிகள் அதிகளவில் பெருக்கமடைந்து, எல்லாப் பாகங்களுக்கும் பரவி, புதிதாகத் தோன்றும் இலைகளும் தாக்கப்படுவதால் அவை சுருக்கங்களுடனும், நெளிவுகளுடனும் தென்படும். தாக்கப் பட்ட செடிகளில் காய்கள் தோன்றுவது மிகவும் குறையும். காய்கள் தோன்றினாலும் அவை நெளிந்தும் உருக்குலைந்தும் தோன்றும். விதைகளும் சரிவர முற்றாமல், சுருங்கியும், வெளிரிய நிறத்துடன் காணப்படும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்த நச்சுயிரி நோய் பெமீசியா டபாசை என்னும் வெள்ளை ஈக்களால் பரப்பப்படுகிறது. பாசிப்பயிறு, சோயா மொச்சை, கொண்டைக்கடலை , கம்பு புல் போன்ற பல்வேறு வகைச் செடிகளைத் தாக்கக்கூடியது. வெள்ளை ஈக்கள், நோய்த் தாக்கியச் செடிகளிலிருந்து சுமார் 15 நிமிடங்கள் சாற்றை உறிஞ்சும்போது, நச்சுயிரிகளை அவற்றின் உடலுக்குள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் நச்சுயிரிகள், பூச்சிகளின் குடலுக்குள் சுமார் 3 மணி நேரம் இருந்தப் பின்னரே நோயைப் பரப்பும் தன்மையைப் பெறுகின்றன. ஒரு பூச்சியானது ஒருமுறை நச்சுயிரிகளைத் தன் உடலினுள் எடுத்துக் கொண்டப் பின்னர், சுமார் 10 நாட்களுக்கு நோயைப் பரப்பக் கூடியது. பெரும்பாலும் முதலில் தோன்றும் முக்கூட்டு இலைகள் பூச்சிகளால் தாக்கப்பட்டு நோயின் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும்.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்  :

நோய்த் தாக்கியச் செடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும். நோய்த் தாக்கக் கூடிய களைச் செடிகளை அழித்து வயல் வெளிகளைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

மருந்து சிகிச்சை :

            ஏக்கருக்கு மோனோகுரோட்டோஃபஸ் – 300 மில்லி அல்லது மீதைல் டேமட்டான் – 200 மில்லி வீதம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, விதைத்த சுமார் 30 நாட்களில் ஒரு முறையும், பின்னர் 10 – 15 நாட்களுக்குப்பின் இரண்டாவது முறையும் தெளிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்

            யு.பி.யு.1, யு.பி.யு.2, என். பி. ஆர். பி.1, என். பி. ஆர். பி.2, என். பி. ஆர். பி.3  போன்ற இரகங்கள் இந்நோயினால் அதிகம் தாக்கப்படுவதில்லை.

கட்டுரையாளர்: கு.விக்னேஷ், முதுநிலை வேளாண் மாணவர், தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்– 608002. தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

1 thought on “உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்”

Leave a Reply

editor news

editor news