இந்தியர்களின் சமையலறையில் ஓர் இன்றியமையாத வாசனை பொருளாக பெருங்காயம் திகழ்கின்றது. பல நோய்களுக்கு இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய பெருங்காயத்தை நாம் இறக்குமதி செய்கிறோம் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசானது வருடந்தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை ரூ.600 கோடி செலவில் ஈரான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது. இச்செலவினை குறைக்கும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் பெருங்காய விதைகளை பயிரிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பெருங்காயமானது அதிக குளிர்ச்சி மற்றும் வறண்ட இடங்களில் வளரும் தாவரமாகும். அதனுயை தாவர பெயர் ஃபெருலா அசஃபோடிடா (Ferula asafoetida) ஆகும், அம்பெலிஃபெரா குடும்பத்தை சேர்ந்தது. இந்த தாவரமானது அனைத்து ஊட்டச்சத்துக்களையும் செடிகளின் சதைப்பற்றுள்ள வேர்களுக்குள் சேமித்து வைக்கிறது. தாவரத்தின் வேர் பகுதியில் ஓலியோ கம் ரெஸின் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த ரெஸின் உருவாக சுமார் 5 ஆண்டுகள் தேவைப்படுகின்றது. 20 கிலோ ரெஸின் மூலம் 500 கிலோ பெருங்காய தூள்களை உற்பத்தி செய்யலாம். பெருங்காயம் தூள் அல்லது கட்டி வடிவத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தியாவில் பயிரிடும் பெருங்காயம்:
- கடந்த 2007 ஆம் ஆண்டு நேஷனல் பீரோ ஆஃப் பிளான்ட் ஜெனிடிக் ரிசோர்ஸ் (NBPGR) மூலம் 6 வகையான பெருங்காய விதைகளை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
- பெறப்பட்ட விதைகளை பல்வேறு காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
- பெருங்காயமானது 30-35 டிகிரி செல்சியஸ் வெப்பமும் மற்றும் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் குளிரையும் தாங்கி வளரக்கூடிய தாவரமாகும். எனவே இந்தியாவில் குளிர் அதிகமாக காணப்படும் இமயமலை பகுதியை தேர்வு செய்துள்ளனர்.
- சி.எஸ்.ஐ.ஆர் – இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலய பயோசோர்ஸ், பாலம்பூர் – விஞ்ஞானிகள் பெருங்காய விதைகளை இமயமலை பகுதிகளில் வளர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல் பெருங்காய செடியை லஹால் பள்ளத்தாக்கிலுள்ள இமாச்சல பிரதேசத்தின் குவாரிங் கிராமத்தில் நடப்பட்டது. இமாலய உயிரி தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர்.சஞ்சய் குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் அப்பகுதி விவசாயிகளுக்கு பெருங்காயம் உற்பத்தி செய்யும் பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
- லடாக் மற்றும் உத்திரகாண்ட் பகுதிகளிலும் பெருங்காய விதைகளை பயிரிட சோதனைகளை விரிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட திட்டமிட்டுள்ளனர்.
- மேலும் டிஷ்யூ கல்ச்சர் மூலம் பெருங்காய செடிகளை ஆய்வகத்தில் வளர்க்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
பெருங்காய செடிகளின் பயன்கள்:
- பெருங்காயமானது சமையலில் வாசனை பொருளாகவும், சுவையூட்டியாகவும் பயன்படுகிறது. சைவ சமையல்களில் அதிகளவில் பயன்படுகிறது.
- உலகளவில் விளையும் பெருங்காயத்தை சுமார் 40 சதவீதம் இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.
- பன்றி காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் அஜீரணம், குடல் புண் முதலான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
இத்தகைய பயனுடைய பெருங்காயத்தை நம் நாட்டில் விளைவித்து பயன்படுத்தும் போது இறக்குமதி செலவும் குறையும் நம் நாடும் தன்னிறைவு பெரும்.
கட்டுரையாளர்: பி.மெர்லின், முதுநிலை வேளாண் மாணவி, வேளாண் நுண்ணுயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: merlinbrittoagri@gmail.com