Vivasayam | விவசாயம்

தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகில் எண்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை பயிரிடப்படுகின்றது. தென்னை மரத்தின் அனைத்துப் பொருட்களும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன. காண்டாமிருக வண்டு தென்னை மட்டுமல்லாமல்  வாழை, கரும்பு, அன்னாச்சி மற்றும் பேரிச்சை போன்றவற்றை தாக்கும் தன்மைக் கொண்டது. காண்டாமிருக வண்டின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக காணப்படும்.  பொதுவாக காண்டாமிருக வண்டின் புழுக்கள் தென்னை மரத்தின் அருகில் உள்ள எருக்குளிகளில் காணப்படும். இதனால் தென்னை மரத்தின் அருகில் எருக்குளிகள் இருந்தாலோ அல்லது தென்னந்தோப்பை சரியாக பராமரிக்கவில்லை என்றாலோ காண்டாமிருக வண்டின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவ்வண்டு தாக்கப்பட்டால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடுவதுடன் தென்னை மரமும் இறக்க நேரிடும்.

காண்டமிருக வண்டு

காண்டாமிருக வண்டு கருமை நிறத்துடன் தலைபகுதியில் பின்னோக்கி வளைந்த ஒரு கொம்பைக் கொண்டிருக்கும். இந்த காண்டாமிருக வண்டுகள் அதன் நீள்வட்ட வடிவ முட்டைகள் 5-15 செ. மீ. ஆழத்தில் அருகில் உள்ள எருக்குளிகள், குப்பை குவியல்கள் மற்றும் மரத்துகள்களில் வைக்கின்றன.  காண்டாமிருக வண்டின் முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளிவர 8-12 நாட்கள் ஆகின்றன. புழுக்கள் “C” வடிவத்தில் வெள்ளை நிறத்திலும் அதன் தலைப் பகுதி வெள்ளைக் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். புழுக்கள் 4-5 மாதங்களில் கூட்டுபுளுவாக வளர்ச்சி அடையும்.

அறிகுறிகள்:

காண்டாமிருக வண்டு தென்னை மரத்தின் உச்சியில் உள்ள விரிவடையாத குருத்தில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று வளரும் மொட்டுப்பகுதியை தாக்குகின்றன. இவ்வண்டு குருத்து திசுக்களைத் தின்று வெளிவரும் திரவத்தை உட்கொள்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளம் பாளை விரியும் போதே விசிறி அல்லது “V” வடிவ வெட்டுக்களைக் போன்று தோற்றமளிக்கும். காண்டாமிருக வண்டுகள் நடுக்குருத்தில் இருந்து வெளிவரும் பூங்கொத்தையும் தாக்கும். பாளை வெடிப்பதற்கு முன் இவ்வண்டு தாக்கினால் மகசூல் குறையும். வளரும் குருத்துப்பகுதியை காண்டாமிருகவண்டு கடிப்பதினால் ஏற்படும் காயத்தில் சிவப்புக் கூன் வண்டு உற்பத்தியாகி குருத்துப் பாகத்தை தாக்குவதால் குருத்து காய்ந்து மரம் பட்டுப்போகும்.

கட்டுபடுத்தும் முறை

  • தென்னந்தோப்பை சுத்தமாக வைத்திருப்பதுடன் பாதிக்கப்பட்ட பாளைகளை எரித்திடவேண்டும்.
  • மரத்திற்கு மூன்று அந்து உருண்டைகள் என்ற கணக்கில் மேல் மரத்தின் இளம் இலைகளின் இடுக்குகளில் வைப்பதன் முலம் இவ்வண்டுகளை அகற்றலாம்.
  • குருத்துப்பகுதியில் உள்ள வண்டினை கொக்கி வடிவக் கம்பியைக் கொண்டு வெளியே எடுத்து எரித்துவிட வேண்டும்.
  • ரைனோலூர்-12/ஹெக்டர் என்ற கணக்கில் வைப்பதன் மூலம் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • கோடை மற்றும் பருவமழைக்குப் பின் விளக்குப் பொறிகளை அமைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • நீளவாக்கில் தென்னைப் பாளைகளை பிளந்து மற்றும் இளம் மரத்தின் தண்டுப்பகுதியை புதிய கள்ளில் நனைத்து தென்னந்தோப்பில் ஆங்காங்கே வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • ஐந்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் ஆமணக்குப் பிண்ணாக்கை கலந்து பானையில் ஊற்றி தோப்பில் ஆங்காங்கே வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • 250 மிலி மெட்டாரைசியம் அனிசோப்லியே 750 மிலி நீருடன் கலந்து எருக்குழியில் கலப்பதன் மூலம் காண்டாமிருக வண்டின் புழுக்களை முற்றிலுமாக அழிக்கலாம்.

கட்டுரையாளர்கள்: ர.திவ்யா மற்றும் ர. முத்து, முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் (பூச்சியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோயம்புத்தூர்.

மின்னஞ்சல்: divyadivi579@gmail.com

Exit mobile version