Site icon Vivasayam | விவசாயம்

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -1)

முன்னுரை

வணிக ரீதியாக உயர் லாபம் தரக்கூடிய மலர் வகைகளை உற்பத்தி செய்வதில் இந்த நூற்றாண்டில் பசுமைக்குடில்கள் அல்லது பசுமை இல்லங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திறந்தவெளி தோட்டங்களில் பயிரிடும் போது பயிர் வளர்ச்சிக்கு உகந்த காலநிலை காரணிகளான வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், சூரிய வெளிச்சம், நீர் போன்றவற்றை மலர்களுக்கு தேவையான வகையில் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு வகை மலர் பயிருக்கும் தேவையான குறிப்பிட்ட காலநிலை காரணிகளை பசுமை இல்லத்தில் குறிப்பிட்ட அளவுக்கு கட்டுப்படுத்த இயலுமாகையால் பசுமை இல்லங்களில் பல மடங்கு அதிக மகசூலையும் பெறலாம். மேலும் திடீரென மாறும் காலநிலை பகுதிகளிலும் பசுமை இல்லங்களில் மலர்களை வளர்ப்பதால்  இயற்கை காரணிகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்து தரமான மலர்களை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யலாம்.

பசுமை இல்லத்தின் முக்கியத்துவம்

  1. ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் மட்டுமே பயிரிடுவதற்கு ஏதுவான கடுமையான பகுதிகளில் பசுமை இல்லங்களில் சாகுபடி செய்து முழுவதும் தரமான மலர்களைப் பெறலாம்.
  2. பசுமை இல்லத்தில் சாகுபடி செய்வதன் மூலம் மலர்களின் பூக்கும் பருவத்தை அதிகரித்து அதிகமான மகசூலை பெறலாம்.
  3. பசுமை இல்லத்தில் சாகுபடி செய்யப்படும் மலர்கள் உயர் வெப்பம் கடும் குளிர் மற்றும் உலர் காற்று போன்ற பாதகமான தட்பவெப்ப நிலைகளினின்று பாதுகாக்கப்படுவதால் பசுமை இல்லத்தின் மூலம் அதிக மகசூலும் உயர் தரமும் உடைய மலர்களை பெறலாம்.
  4. காலநிலை காரணிகளை தேவைக்கேற்ப கட்டுப்படுத்தும் பசுமை இல்லங்களில் குறிப்பிட்ட பயிரின் வளர்ச்சிக்கு தேவைப்படும் தட்ப வெப்ப நிலை பராமரிக்கபடுவதால் குறிப்பிட்ட மலர் வகையிலிருந்து உச்சகட்ட மகசூல் பெறுவது சாத்தியமாகிறது.
  5. பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஒவ்வாத காலநிலை நிலவும் பகுதிகளில் பசுமை இல்லங்களில் நாற்றுகளை உற்பத்தி செய்து சாதகமான பருவங்கள் திறந்த வெளி தோட்டங்களில் வந்ததும் நாற்றுகளை நடுவதால் பருவத்தை தவறவிடாமல் உயர் மகசூல் பெறலாம்.

பசுமை இல்லத்தின் அமைப்புகள்

முற்காலங்களில் பெரும்பாலும் பசுமை இல்லங்கள் கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருந்ததால் அவற்றை கண்ணாடி பசுமை இல்லங்கள் அல்லது கண்ணாடி மாளிகைகள் என்று அழைத்தனர். ஆனால் தற்போது பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பசுமை இல்லங்கள் அமைப்பதற்கு ஏற்ப குணாதிசியங்கள் கொண்டிருப்பதோடு குறைந்த விலையில் கிடைப்பதால் இத்தகைய பொருட்கள் பெருமளவில் தற்போது பசுமை மாளிகை அமைப்பதற்கு பயன்படுகின்றன. நம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப மண்டல காலநிலை நிலவுவதால் வெப்பத்தால் பாதிக்கப்படாத வகையில் லேத் துணியால் அமைக்கப்பட்ட பசுமை இல்லங்களே பெருமளவில் கட்டப்படுகின்றன. மேலைநாடுகளில் பசுமை இல்லங்கள் கண்ணாடி அல்லது பாலித்தீனால் அமைக்கப்படுகின்றன. இத்தகைய பசுமை இல்லங்கள் தேவைக்கேற்ப தாற்காலிகமாக ஒரு பருவ குளிர் பாதுகாப்பு ஊடகங்களாகவோ (cold frames) அல்லது சிமெண்ட் தரை இடப்பட்ட நிரந்தர கண்ணாடி பசுமை இல்லங்களாகவோ அமைக்கப்படுகின்றன. பொதுவாக டன்னல்கள் (tunnels) தரை பசுமை இல்லங்கள் (ground green house) கேபிள் வகை பசுமை இல்லங்கள் (cable type green house) குவான்செட் வகை பசுமை இல்லங்கள் (Quonset  type green house) ஆகிய 4 வகை பசுமை இல்லங்கள் தான் மலர்கள் சாகுபடிக்கு மிக உகந்தவையாக கருதப்படுகிறது.

பசுமை இல்லத்தில் கால நிலையை கட்டுப்படுத்துதல் குளிர்வித்தல்

பொதுவாக பசுமை இல்லங்களில் உள் வெப்பநிலை வெளிப்புற வெப்பநிலை  விட 5 முதல் 100 செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். வெப்ப மண்டல பகுதிகளில் பசுமை இல்லங்களில் குளிர் பிரதேச பயிர்களை வளர்க்கும் போது உள்பகுதி வெப்ப நிலையை குளிர்ச்சியாக பராமரிக்க வேண்டியது  மிகவும் அவசியம் ஆகும். ஆவியாக்கி குளிர்வித்தல் (Evaporative cooling) குளிர்ப்பேடுகள் (cooling Pads) மற்றும் டிராப்ட் காற்றாடிகள் (Draft Fans) ஆகியவற்றை கொண்டு பசுமை இல்லத்தை குளிர்விக்கலாம். மேலும் கூரை பகுதிகளில் வெப்பத்தை உட்கிரகிக்காமல் எதிரொலிக்கும் பெயிண்ட் வகைகளை பூசியும் வெப்பநிலையை குறைக்கலாம்.

வெப்பப்படுத்துதல்

மலைப்பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவும் பகுதிகளிலும் வெப்பநிலை 300 செல்சியஸ் குறைவாக இருக்கும் போது வெப்பப்படுத்துவதன் மூலம் வெப்பநிலையை பராமரித்து வரலாம். மலர்ப்பயிர்களின் தன்மைக்கேற்ப வெப்பத்தின் அளவு பயிருக்கு பயிர் மாறுபடும். மக்கிய எரு, வெப்பமான நீர் மற்றும்  நீராவி என்னைக்கலன்கள், புரேப்பேன் வாயு போன்றவற்றை பயன்படுத்தி பசுமை இல்லங்களை வெப்பப்படுத்தலாம்.

ஈரப்பதத்தை அதிகரித்தல்

பெரும்பாலான மலர் பயிர்களின் வளர்ச்சிக்கு 80 முதல் 95 சதவீதம்  வரை ஈரப்பதம் தேவைப்படும். நிழல் கொடிகளை கூரையின் மீது படரவிடுவதன் மூலமும் பசுமை இல்லத்தின் மத்தியப் பகுதியில் சிறிய நீர் குட்டை அமைப்பதன் மூலமும் தண்ணீரை மென்மையாக செடிகளின் இலைப்பரப்பில் தெளிப்பதன் மூலமும் பசுமை இல்லத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கலாம்.

நிழல் ஏற்படுத்துதல்

சில மலர் பயிர்கள் அளவுக்கதிகமான சூரிய வெளிச்சத்தால் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய பயிர்களுக்கு லேத் துணி அல்லது அலுமினியத்தால் பூசிய துணியை  கொண்டு பசுமை இல்லத்தின் கூரைகளை அமைப்பதன் முலம் தேவைக்கெற்ப 25 முதல் 80 சதவீதம் அளவிற்கு நிழலை ஏற்படுத்தலாம். பசுமை இல்லங்களில் நிழலை ஏற்படுத்துவதற்கு தற்பொது நவீன மயமாக்கப்பட்ட இயந்திரங்கள் பயன்படுகின்றன.

ஒளிக்காலத்தை ஒழுங்குபடுத்துதல்(Photo period)

ஒவ்வொரு  வகை மலர் பயிரும் ஒரு குறிப்பிட்ட ஒளி காலத்தில் மிக நன்றாக மலர்ந்து நன்றாக மகசூல்  கொடுக்கும். பயிரின் தன்மைக்கு ஏற்ப பசுமை இல்லங்களில் ஒளிக் காலத்தை அதிகப்படுத்தியோ  அல்லது குறைத்தோ பராமரிப்பது முக்கியமானது ஆகும். ஒளிக்கால அளவை அதிகப்படுத்த இரவு நேரங்களில் ஒளி விளக்குகளை பசுமை இல்லத்தில் பொருத்த வெண்டும். குறைந்த ஒளிக் காலத்தை பெறுவதற்கு கருப்புப் பாலித்தீன் பட்டைகளைக் கொண்டு பசுமை இல்லத்தினுள் நுழையும் ஒளியை மறைக்க வேண்டும்.

  • தொடரும்….

கட்டுரையாளர்கள்: 1. அ. சங்கரி, இணைப் பேராசிரியர் (தோட்டக்கலை), காய்கறி பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003.

  1. கி. திவ்யா, உதவிப் பேராசிரியர் (வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மை துறை), வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் – 641 301

மற்றும்

  1. கா. கயல்விழி உதவிப் பயிற்றுனர் (தோட்டக்கலை), வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர் – 621 712.

மின்னஞ்சல்: sathatnau@yahoo.co.in

Exit mobile version