கடந்த சில ஆண்டுகளாக கேரளா மாநிலத்தின் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகள் உணவு மற்றும் தோட்டப் பயிர்கள் சாகுபடியில் கேரளா மாநிலம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருமாற பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. சுபிஷிகா கேரளா என்ற திட்டத்தின் பகுதியாக மேற்கொள்ளப்படும் இப்புதிய வளர்ச்சி முயற்சிகள் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்தி பெருக்கம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிகளவு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் கூட கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானத்தைப் பெற்றுத் தர துவங்கப்பட்ட முல்லைப்பூ கிராமம் திட்டம் கேரளா மாநிலத்தின் மலர் தேவைகளை நிறைவு செய்வதுடன், பல புதிய கிராமப்புற வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித்தருகிறது.
முல்லைப்பூ கிராமங்கள் வளர்ச்சித் திட்டம்
கொரோனா நோய் பரவல் காலங்களில் கூட நாடு முழுவதும் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பணிகள் அனுமதிக்கப்பட்டாலும், பொது போக்குவரத்து மற்றும் மாநிலங்கள் இடையிலான போக்குவரத்துகளுக்கு பல கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் மலர் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டது. பல மலர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்ட மலர்களை விற்பனை செய்ய முடியாத சூழல் நிலவியது. மறுபுறம் தன்னுடைய மலர் தேவைகளுக்கு தமிழகம் போன்ற பிற மாநிலங்களை நம்பிய கேரளா இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டது. பல விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றின் போது மலர்கள் வருகை குறைவு காரணமாகவும், அதிகப்படியான தேவைகள் காரணமாகவும் அதிகளவு மலர் விலை உயர்வுகளைச் சந்தித்தது.
இத்தகைய நடைமுறை சூழலில் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தின் ஆர்ய கிராமம் பஞ்சாயத்தின் கீழ் பெண் விவசாயிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டு ‘சமன்வயா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு மலர் சாகுபடியில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டனர். இத்தகைய நடைமுறைச்சூழலில் சுமார் 106 பெண்கள் விவசாயக் குழுக்களுக்கு 10,000 மல்லிகைக் கன்றுகள் இலவசமாக முதல் தவணையாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு விவசாய பெண்கள் குழுவுக்கு 100 மல்லிகை கன்றுகள் வழங்கப்பட்டு, மலர் சாகுபடி பணிகள் துவங்கப்பட்டது. சுமார் 800 கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்புக்களை 18 வார்டுகளில் பெற்று தரும் இப்புதிய மலர் சாகுபடி திட்டத்தின்கீழ் பஞ்சாயத்து சார்பில் உரங்களும் இலவசமாக வழங்கப்பட்டு பெண் விவசாயக் குழுக்களுக்கு அதிகளவு ஊக்கம் தரப்பட்டது. சுமார் ஆறு மாத காலத்தில் அறுவடைக்கு வரும் இம்மல்லிகை மலர்கள் தற்போது பஞ்சாயத்துகளில் உள்ள மலர் சேகரிப்பு மையங்களில் பெண் விவசாயிகளிடம் சந்தை விலையில் சேகரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இப்புதிய மலர் சாகுபடி மற்றும் வணிக திட்டத்திற்கு என சுமார் 50 லட்சம் ரூபாய் பஞ்சாயத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா காலகட்டத்தில் கூட கேரளா மாநிலத்தில் தங்களின் மலர் தேவைகளை சந்திப்பதிலும், கிராமப்புற பெண்களிடம் போதிய அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் “முல்லைப்பூ கிராமம்” வளர்ச்சித் திட்டம் பெரிதும் உதவியுள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் கிராமப்புற பெண்கள் இடையே காணப்பட்ட மனச்சோர்வுகளை நீக்கி மகிழ்ச்சியுடன் மலர் சாகுபடியில் ஈடுபட்டு அதிகளவு வருமானம் பெறவும் பெரிதும் உதவியுள்ளது.
இத்தகைய ஆக்கப்பூர்வமான புதிய மலர் சாகுபடி முயற்சிகள் “பெண் விவசாயிகளை உள்ளடக்கி பெருக்குவதன் வாயிலாக நம்மால் கிராமங்களில் துவங்கி, மாவட்டங்கள், மாநில எல்லைகளை தாண்டி தேசிய அளவில் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive growth) உருவாக்கச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர்:
முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com