பிரண்டை ஒரு படரக்ககூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவ வகைப் பயிராகும். இப்பயிர் விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis) பிரண்டை இந்திய நாட்டை தாயகமாக கொண்டது.
பயன்கள்
- இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய மருந்தாகும். எலும்பு முறிவிற்க்கு இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
- வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்பட்டு நாம் இதனை அன்றாட உணவில் துவையல், ஊறுக்காய், தொக்கு, குழம்பு செய்து பயன்படுத்தலாம்.
- கொழுப்பபுச்சத்து அதிகம் உள்ளர்கள் எடுத்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கவும், உடற்பருமனை குறைக்கவும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
- மேலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
- கீரையில் வைட்டமின் சி இருப்பதால் தோல்வியாதிகளை குணப்படுத்த பயன்படுகிறது.
பிரண்டை சாகுபடி வழிமுறைகள்
மண்வகை:
வேகமாக வளரக்கூடிய தண்டுகொடிவகை மூலிகையாகும். இது வடிகால் வசதியுடைய மணல், பழுப்பு மற்றும் களிமண் வகைகளில் வளரக்கூடியதாகும். மண்ணின் கார அமிலத் தன்மை நிடுநிலையாக இருப்பது நல்லது.
நடவுமுறை
- பிரண்டை தண்டுக் குச்சி மூலம் கொடி உற்பத்திச் செய்யப்படுகிறது.
- இரண்டு கணுக்களுக்கு இடையே 30செ.மீ. நீளத்தில் பிரண்டை தண்டை வெட்ட வேண்டும்.
- பின்பு வெட்டிய குச்சினை மாட்டு சாணத்தை குழம்பாககரைத்து அதில் நனைக்க வேண்டும்.
- நடவுக்கு தயார் செய்த தண்டுக்குச்சிகள் உலர்ந்த பின் 15X15x15 செ.மீ. நீளம், ஆழம் மற்றும் அகலம் கொண்ட குழிகளில் 1.50 மீ X 1.50 மீ இடைவெளியில் நடவு செய்யலாம்.
- நடவு செய்யும் முன் குழிகளில் சரிவிகிதத்தில் மண்புழு உரம், மாட்டுசாணம், மணல் நன்கு கலந்து இட வேண்டும் .பின்குச்சியினை நடவு செய்ய வேண்டும். பின் நீர் பாய்ச்ச வேண்டும்.
நீர்ப்பாய்ச்சுதல்
நடவு செய்த முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சல் வேண்டும். பின்பு நான்கு நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்ச வேண்டும். கொடி அழுகிவிடாமல் இருக்க நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
சிறப்புமேலாண்மை
கொடிகள் படரவும் சாயாமல் இருக்கவும் குறுக்கே கயிறு கட்ட வேண்டும். செடியின் 5 அல்லது 6 அடி உயர்த்திற்கு மேல் நீண்ட கயிற்றினை குறுக்கும் நெடுக்குமாக 5 சதுர அடிவருமாறு கட்ட வேண்டும்.
கவாத்துசெய்தல்
தேவையற்ற பக்கவாட்டில் வளர்த்த தண்டுகளை கிள்ளி விட வேண்டும். காய்ந்த மற்றும் நோய்த் தாக்கிய குச்சிகளை நீக்கி விட வேண்டும்.
உரமேலாண்மை
பிரண்டையின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தின் தேவை இன்றிமையாததாகிறது .நடவு செய்த 30 நாட்கள் கழித்து தழைச்சத்து அதிகமாக அளித்தல், இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்கு சிறந்ததாகும்.
அறுவடை
முதிர்ந்த தண்டினை இரண்டு கணுக்களின் இடையில் வெட்ட வேண்டும்.
பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த தண்டுகளில் இருந்து மருந்துகள் செய்வதற்கு நேர்த்தி முறைகள் செயப்படுகின்றன.
கட்டுரையாளர்கள்
ப. அமிர்தா மற்றும் சி. ஆனந்தி ,
இளநிலை வேளாண் இறுதியாண்டு மாணவிகள் ,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ,சிதம்பரம் .
மின்னஞ்சல் :amirtha.cdm99@gmail.com