வெள்ளை ஈ பிறப்பிடம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் ஆகும். 2016 -ம் ஆண்டு கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முதலில் தாக்குதல் அறியப்பட்டது. மூன்று விதமான வெள்ளை பூச்சி ரகங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பூச்சி அமைப்பு :
முதிர்ந்த வெள்ளை ஈ 2மி.மீ நீளம் உடையது. வெள்ளை நிறமுடையது. வாழ்நாள் காலம் 40-50 நாட்கள். மிகவும் வேகமாக பெருக்கம் அடையும். பூச்சியின் முட்டை நிலை 10 நாட்களும், முதல் இன்ஸ்டார் 5 நாட்களும், இரண்டாம் இன்ஸ்டார் 4 நாட்களும், மூன்றாம் இன்ஸ்டார் 4 நாட்களும், 4 ம் இன்ஸ்டார் 4 நாட்களும், மொத்த பருவ காலத்தில் எடுத்து கொள்கின்றன.
சாதகமான சூழல் :
வெள்ளை ஈ தாக்குதலுக்கு வறண்ட சூழல் சாதகமாகும்.
நோய் தாக்கம் :
இப்பூச்சி இலையின் அடிப்பாகத்திலிருந்து தாக்குதலை ஆரம்பிக்கிறது. பயிரிடமிருந்து நேரடியாக சாற்றினை உறிஞ்சுகிறது. பின்னர் தாக்கப்பட்ட இடத்தில் தேன் போன்ற பசை திரவத்தை சுரக்கச் செய்கிறது. இத்திரவம் கருமை நிற பூஞ்சை வளர்வதை ஊக்குவிக்கின்றன. இது வெள்ளை ஈ தொற்றால் ஏற்படும் இரண்டாம் நிலை தொற்று ஆகும். இத்தகைய பூஞ்சைகள் கரும் படலம் போல் இலை பரப்பு முழுவதும் படர்கின்றன.இது ஒளிச்சேர்க்கையைத் தடுக்கும். இவை பயிரிடமிருந்து சத்துக்கள் மற்றும் நீரினை நீக்குகிறது. இப்பூச்சி இலையின் அடிப்பகுதியில் வெள்ளை நிற சுருள் வடிவ படலங்களை உருவாக்குகிறது.
மிகவும் குறுகிய காலத்தில் வெள்ளை ஈ தாக்குதல் தென்னை, கொய்யா, வாழை ஆகியவற்றில் பரவியது. தென்னையில் 40% அதிகமான பாதிப்பு இருக்கும் பட்சத்தில் கட்டுப்பாட்டு உத்திகள் பரிந்துரைக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு முறைகள்:
Ø கரும்பூசணம் பாதிக்கப்பட்ட மரங்களில் 1% ஸ்டார்ச் தெளிக்கலாம்.
Ø தாக்குதல் அதிகம் இருக்கும் பட்சத்தில் 0.5% வேப்ப எண்ணெய் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Ø பசை தடவிய மஞ்சள் ஒட்டுப்பொறிகளை மரங்களில் அல்லது மரங்களுக்கு ஊடாக நிறுத்தி வைப்பதன் மூலம் முதிர்ந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். (10 மஞ்சள் நிற ஒட்டுப் பொறி /ஏக்கர்)
Ø உயிரியல் தீர்வு முறையில் என்கார்சியா (Encarsia sp)1-5 கார்டு / பாதிக்கப்பட்ட மரம், ஒட்டுண்ணிகளை வெள்ளை ஈ இருக்கும் இடத்தில் விட வேண்டும். இந்த ஒட்டுண்ணிகள் தனது முட்டைகளை வெள்ளை ஈ லார்வல் நிலையில் அவற்றின் மேல் இடுவதால் வெள்ளை ஈ கட்டுப்படுத்தப்படும்.
Ø கிரைசோபெர்லா (1000 முட்டைகள்/ஹெக்டேர்) விடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Ø காராமணி மற்றும் தட்டைப்பயறு ஆகியவற்றை ஊடு பயிராக வளர்ப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Ø தண்ணீர் கொண்டு கழுவுதல் மற்றும் பீச்சி அடிப்பதன் மூலம் கரும் படலம் மற்றும் வெள்ளை நிற சுருள் படலத்தை நீக்கலாம்.
Ø கார்பன்டசிம் (2 கிராம் /லிட்டர் +ஒட்டும் பசை) தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்
Ø சோப்பு எண்ணெய் (soap oil), நிக்கோட்டினாய்டு தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Ø வாழை , கன்னா இன்டிகா போன்ற தாவரங்கள் என்கார்சியா ஒட்டுண்ணிகள் வளர்வதை ஊக்குவிக்கின்றன.
கட்டுரையாளர்:
சி. அமிழ்தினி, இளநிலை வேளாண் இறுதி ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: amizhthini7639@gmail.com