Site icon Vivasayam | விவசாயம்

சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

சோளத்தைத் தாக்கக் கூடியநோய்களில் கரிப்பூட்டை  நோய்தான் அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. இது மூடியக் கரிப்பூட்டை நோய் அல்லது குட்டைக் கரிப்பூட்டை என்றும் அழைக்கப் படுகிறது. அமெரிக்கா, ஆப்ரிக்கா, இலங்கை, பர்மா, இத்தாலி போன்ற பல நாடுகளில் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இது அதிகம் காணப்படுகிறது. பயிர் செய்யப்படும் எல்லா இரகங்களையும் தாக்கக் கூடியது. நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்போது, மகசூல் இழப்பு 25 சதம் வரையிலும் காணப்படுகிறது.

நோய்க்காரணி

            இந்நோய் ஸ்பேசலோத்தீக்கா சொர்கி  என்ற பூசணத்தால் உண்டாக்கப் படுகிறது. இது ஒரு முழு ஒட்டுண்ணி. இப்பூசணம் பூக்களைத் தாக்கி, கரிப்பூட்டை வித்துக் கூடுகளாக மாற்றி விடுகிறது. இதனால் விளைச்சல் பெருமளவுப் பாதிக்கப் படுகிறது.

நோயின் அறிகுறிகள்

            கதிரில் மணிகள் தோன்றும் பருவத்தில் தான், நோய்த் தாக்கியதற்கான அறிகுறிகள் வெளித்தெரியும். மணிகளுக்குப் பதிலாகக் கரிப்பூட்டை வித்துக்கூடுகள் பரவலாகத் தென்படும். பெரும்பாலும் இந்த வித்துக்கூடுகள் சாதாரண மணிகளை விடப் பெரியதாகவும், முட்டை அல்லது நீள் வட்ட வடிவிலும், 5-15 × 3-5 மி.மீ அளவிலும், அழுக்குச் சாம்பல் நிறத்திலும் தென்படும். கதிரிலுள்ள எல்லா மணிகளும் சில வேளைகளில் கரிப்பூட்டை வித்துக்கூடுகளாக மாறக்கூடும் அல்லது கதிரிலுள்ள சில மணிகள் மாத்திரம் கரிப்பூட்டை வித்துக்கூடுகளாக மாறும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்நோயானது பெரும்பாலும் விதைகள் மூலம் பரவக்கூடியது. பயிர் அறுவடையின் போதும் கதிரடிக்கும் போதும் வித்துக்கூடுகள் உடைந்து உள்ளிருக்கும் கரிப்பூட்டை வித்துக்கள் வெளிவந்து, சோளம் விதைகளின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும். அடுத்தப் பருவத்தில் இந்த விதைகளை விதைக்கும்போது, விதைகளின் மேற்ப்பரப்பில் உறங்கும் நிலையில் இருக்கும் கரிப்பூட்டை வித்துக்கள் முளைத்து, விதைகளிலிருந்து வெளிவரும் இளம் நாற்றுக்களைத் தாக்குகின்றன. விதைகள் முளைத்து இளம் நாற்றுக்கள் நிலப்பரப்பிற்கு மேல் வரும் முன்னரே நோய்த் தாக்கிவிடும். நோய் நாற்றுக்களைத் தாக்குவதற்கு ஏற்ற மண்ணின் வெப்பநிலை 20-300 செ.கி.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்  : (i) நோயினால் தாக்கப்பட்டக் கதிர்களை அவ்வப்போது அகற்றி எரித்து விடவேண்டும். (ii) நோய்த் தாக்காதப் பயிரிலிருந்து விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விதை சிகிச்சை

            சூரிய வெப்ப சிகிச்சை : விதைகளை முதலில் 4 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் அவற்றை வெளியே எடுத்து, நன்கு பரப்பி, நேரடியாக நல்ல சூரிய வெப்பத்தில் 4 மணி நேரம் உலரவைத்துப் பின்னர் விதைக்கப் பயன்படுத்த  வேண்டும்.

மருந்து சிகிச்சை :

ஒரு கிலோ விதைக்கு கந்தகத்தூள் – 4 கிராம் அல்லது திரம் – 4 கிராம் அல்லது காப்டான் –  4 கிராம் வீதம், விதைப்பதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே நன்குக் கலந்து வைத்திருந்துப் பின்னர் விதைக்க வேண்டும்.

கட்டுரையாளர்: கு.விக்னேஷ், முதுநிலை வேளாண் மாணவர், தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்– 608002. தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

Exit mobile version