Site icon Vivasayam | விவசாயம்

வளம் தரும் விதை வங்கிகள்

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள பருவ மாற்று பிரச்சனைகள் (Climate Change issues) காரணமாக கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பண்ணை மகளிர் கடுமையான பொருளாதார இழப்புகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். இத்தகைய நடைமுறைச்சூழல் காரணமாக நமது நாட்டில் உள்ள விபத்துகள் மற்றும் தற்கொலை புள்ளி விபரங்கள் (Accidental death and suicides in India) அறிக்கையின்படி கடந்த 2015ஆம் ஆண்டில் 39% விவசாயிகள் வேளாண் கடன் காரணமாக தற்கொலைகள் செய்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 19% பேர் இயற்கைச் சீற்றங்கள் காரணமாக தற்கொலைகள் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சராசரியாக பார்க்கும்போது தற்கொலைகள் செய்துகொண்ட ஆண் விவசாயிகள், பெண் விவசாயிகளைவிட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்புகள் உருவாக்கும் கிராமப்புற வறுமை மற்றும் நெருக்கடிகளே பல வேளாண் தற்கொலைகளுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை சூழலில் வேளாண்மையில் உற்பத்தி செலவுகளை குறைக்கவும், பருவ மாற்றுச் சூழலுக்கு ஏற்ப நமது பாரம்பரிய பயிர் ரகங்களை தேர்வு செய்து நமது சிறு மற்றும் குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் பயிர் செய்து தங்களின் வேளாண் பணிகளை தொடரவும் தற்போது நமது நாட்டின் பல பகுதிகளில், மாநிலங்களில் செயல்பட்டு வரும் பல விதை வங்கிகள் (seed banks) நமது விவசாயிகளுக்கு பெரிதும் துணை புரிந்து வருகிறது.

கடந்த 1970 ஆண்டுவரை சுமார் 1,10,000 நெல் ரகங்கள் வரை கொண்ட நமது நாட்டில் தற்போது சுமார் 6000 நெல் ரகங்களே உள்ளது. இதனை பாதுகாக்கவும், நமது பாரம்பரிய வேளாண்மையை தொடரவும் நமது நாடு முழுவதும் பல விதை வங்கிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு பல வேளாண் மற்றும் தோட்டக்கலை விஞ்ஞானிகள், பல்துறை வல்லுனர்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய செயல்பாடுகள் வாயிலாக அழியும் நிலையில் உள்ள பல பாரம்பரிய ரகங்கள் மீட்கப்பட்டு, சாகுபடி பணிகள் செய்வதுடன், அவற்றின் சாகுபடி பரப்பளவும் பெருகி வருகிறது.

தற்போது நமது நாட்டின் தோட்டக்கலை பயிர்களின் 99% சதவீதம் பழைய பாரம்பரிய ரகங்கள் அழிந்துவிட்ட சூழலில் இருக்கும் சில தோட்டக்கலை ரகங்களை பாதுகாக்க வேளாண் விஞ்ஞானி முனைவர் பிரபாகர் ராவ் அவர்கள் துவங்கிய ஹரியாலி (Hariyalee) விதை வங்கி வாயிலாக கடந்த ஏழு ஆண்டுகளில் 540 ரகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தவிர பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு. வந்தனசிவா அவர்கள் துவக்கிய நவதான்யா (Navdanya) விதை வங்கி வாயிலாக நாடு முழுவதும் 124 சமுதாய விதை வங்கிகள் வாயிலாக நமது நாட்டின் பாரம்பரிய ரகங்கள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது.

இது தவிர முன்னாள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர் திரு.சங்கீத் சர்மா அவர்கள் துவங்கிய அன்னதான்யா (Annadanya) விதை வங்கி வாயிலாகவும், சுமார் 800 ரக பாரம்பரிய ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மேலும் கடந்த 1980களின் முன்னோடி விவசாயி விஜய் ஜார்தாரி (vijay jardhari) அவர்கள் துவங்கிய பீச் பச்சோவ் அந்தோலன் என்ற விதை வங்கியும் சுமார் 350 பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதில் துணை புரிந்துள்ளது. மேலும் சுமார் 200 பீன்ஸ் ரகங்களை பாதுகாக்கவும் உதவி புரிந்துள்ளது. அடுத்ததாக  கேரளா மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள ‘நமது நெல் ரகங்களை பாதுகாப்போம்’ என்ற பிரச்சார இயக்கத்தின் அடிப்படையில் துவங்கப்பட்ட விதை வங்கிகளில் சுமார் 567 நமது பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு நமது நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் விதை வங்கிகள் வாயிலாக பல இடங்களில் விதை திருவிழாக்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளிடையே பாரம்பரிய விதை ரகங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு, நமது பாரம்பரிய ரகங்கள் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது.

இதன் வாயிலாக குறைந்த உற்பத்தி செலவில், தற்போது பருவ மாற்று பிரச்சனைகளால் ஏற்படும் இயற்கை சீற்ற பாதிப்புகளை தாங்கி நமது சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் வேளாண் பணிகளை தொடர முடிவதுடன், நமது நாட்டில் இயற்கை சீற்றங்கள் விளைவாக ஏற்படும் வேளாண் தற்கொலைகளைத் தடுக்கவும் முடிகிறது.

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com

Exit mobile version