பருத்தி சாகுபடியில் மகசூல் இழப்பிற்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் மிக முக்கிய காரணமாகும். இவை பருத்தியின் இளம் பருவத்தில் தோன்றி காய் வெடித்து பஞ்சு எடுக்கும் வரை பல்வேறு சமயங்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமான சாறு உறிஞ்சும் பூச்சிகளும் அதன் நிர்வாக முறைகளும் பின்வருமாறு:
- பச்சை தத்துபூச்சி : அம்ராஸ்கா டிவாஸ்டன்ஸ்
தாக்குதலின் அறிகுறிகள்
பச்சை நிறத்தில் இருக்கும் சிறிய குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடிப்புறத்திலிருந்து சாறை உறிஞ்சுவதால் முதலில் இலைகள் மஞ்சள் நிறமடைந்து பின்னோக்கி வளைந்து சுருங்கிவிடும். இவ்வாறாக பச்சை தத்துபூச்சிகள் சாறை உறிஞ்சும் பொழுது, நஞ்சு கலந்த எச்சிலை இலைகளின் உட்செலுத்துவதால் இலை ஓரங்கள் முதலில் சிவப்பு நிறமாக மாறி, பின் இந்த நிறமாற்றம் இலைகளின் நடுப்பகுதி வரை பரவி விடும். நாளடைவில் நிறம் மாறிய இலைகள் கருகி, செடியிலிருந்து உதிர்ந்துவிடும். இவ்வாறாக கருகிய நிலையில் இலைகள் காணப்படும் போது “காப்பர் பர்ன்” அறிகுறி என்று அழைக்கப்படுகிறது.
பூச்சியின் விபரம்
- இளம் பூச்சிகள் பச்சை நிறத்தில் இருக்கும். முதிர் பூச்சிகள் கூம்புப் பலகை வடிவில் பச்சை நிறத்தில் காணப்படும்.
- பருத்தி அசுவினி: ஏபிஸ் காஸிப்பி
தாக்குதலின் அறிகுறிகள்
உருண்டை வடிவில் இருக்கும் அசுவினி பூச்சிகளின் குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் செடிகளின் இளம் தண்டு, கொழுந்து, பூக்கள் மற்றும் இலையின் அடிப்பகுதியில் கூட்டமாக அமர்ந்து கொண்டு சாறை உறிஞ்சி குடிக்கும். தாக்குதல் தீவிர நிலையை அடையும் பொழுது இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, சுருங்கி வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் இப்பூச்சிகள் அளவுக்கதிகமான சாறை உறிஞ்சி குடித்த பின் எஞ்சியதை இனிப்பு சுவையுடைய தேன் போன்ற கழிவுகளாக வெளியிடும். இக்கழிவுகள் கீழ்புறமுள்ள இலைகளின் மேற்புறத்தில் படர்ந்து, நாளடைவில் இக்கழிவுகளின் மீது கருமை நிறபூசணம் வளர்ந்து ஒளிச்சேர்க்கை தடை பெறுகிறது.
பூச்சியின் விபரம்
- அசுவினி பூச்சியின் குஞ்சுகள் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். முதிர்ப்பூச்சிகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- இலைப்பேன்: திரிப்ஸ் டபேசி
தாக்குதலின் அறிகுறிகள்
இலைப்பேன் இளம் பருத்தி செடியில் இலைகளின் அடிப்பாகத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலைகளிலிருந்து சாறை உறிஞ்சுவதால் சிறிய வெண் புள்ளிகள் இலைகளின் மேற்புறத்தில் தோன்றும். மேலும் இலைகள் மேல் நோக்கி சுருங்கி, வளைந்து கிண்ணம் போன்று காணப்படும். சேதம் மிக அதிகமாக உள்ளபோது இலைகள் மொர மொரப்பாகவும், வெளிர் பச்சை நிறமாகவும் மாறுகின்றன. தீவிர தாக்குதலின் போது இளஞ்செடிகளின் வளர்ச்சிக் குன்றும். பூக்கள், மொட்டுகள் உதிர்ந்து விடும்.
பூச்சியின் விபரம்
- இலைப்பேனின் குஞ்சுகள் மிகச் சிறியதாக, தட்டையாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும். வளர்ந்த பூச்சிகள் சிறியதாக, தட்டையாக, மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் பேன் போன்று காணப்படும்
- வெள்ளை ஈ: பெமிசியா டபேசி
தாக்குதலின் அறிகுறிகள்
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளுக்கு அடியில் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சி உண்ணும். இவ்வாறு தொடர்ச்சியாக உறிஞ்சுவதால் இலைகளின் மேல் வெளிர் நிற புள்ளிகள் தோன்றி, பின் இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலையில் உள்ள திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்பு பழுப்பு நிறமடைந்து காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. தீவிர தாக்குதலால், மொட்டுகள் மற்றும் காய்கள் உதிர்ந்து விடும். காய்கள் ஒழுங்கற்ற முறையில் வெடிக்கும். இப்பூச்சிகள் இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை இடுவதால், இவற்றின் மேல் கருமை நிறபூசணம் வளர்ந்து ஒளிச்சேர்க்கை தடை பெறுகிறது. வெள்ளை ஈக்கள் இலை சுருள் நச்சுயிரி நோயை பரப்பும் காரணியாகவும் செயல்படுகிறது.பூச்சியின் விபரம்
- இளம்பூச்சி பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் சிவப்புக் கண்களுடன் முட்டை வடிவத்தில் இருக்கும். கூட்டுப்புழு முட்டை வடிவத்தில், இலையின் அடிப்புறத்தில் காணப்படும். வளர்ந்த பூச்சி மிகச் சிறியதாக மஞ்சள் நிற உடலுடனும், இறக்கைகள் வெள்ளை நிறத்துடன் மெழுகு பூசியது போல் இருக்கும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நிர்வாக முறைகள்
- தொடர்ந்து பருத்தி பயிர் செய்வதையும், மறுதாம்பு பருத்திப் பயிர் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
- பருத்தி வயலுக்கு அருகாமையில் அதே குடும்பத்தை சார்ந்த மற்ற பயிர்கள் பயிருடுவதை தவிர்க்கவும்
- பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் இரகங்களை பயிரிடலாம்.
- வயல்களை களைகள் இல்லாமல் வைத்திருக்கவேண்டும்.
- பரிந்துரைக்கப்பட்டப் அளவே தழைச்சத்து இடவேண்டும்.
- பயறு வகைப்பயிர்களை வரப்பு மற்றும் ஊடுபயிராக பயிரிடும் போது பொறி வண்டு போன்ற இயற்கை எதிரிகளின் எண்ணிக்கை பெருகி சாறு உறிஞ்சும் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுக்குளிருக்கும்.
- ஒரு கிலோ விதைக்கு இமிடாகுளோபிரிட் 70 WS மருந்தை
7 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். - சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்க ஏக்கருக்கு 5 இடங்களில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைத்து கட்டுபடுத்தலாம்.
- வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் (10 கிலோ வேப்பங்கொட்டைக்கு 200 லிட்டர் தண்ணீர்) தெளித்து அசுவினி, இலைப்பேன், பச்சை தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
- ஏக்கருக்கு புப்ரோபெசின் 25% SC 400 மில்லி அல்லது தையாமீதாக்சம் 25% WG 40 கிராம் அல்லது தையாகுளோபிரிட் 21.7% SC 40-60 மில்லி அல்லது பிப்ரோனில் 5%SC 600-800 மில்லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
கட்டுரையாளர்கள்: ஜெ. இராம்குமார்1, ப. வேணுதேவன்1, ப. அருண்குமார்1, இரா. மங்கையர்கரசி2
1வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்
2முதுநிலை ஆராய்ச்சியாளர், மலரியல் மற்றும் நிலலெழிலூட்டும் கலைத்துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
மின்னஞ்சல்: jramtnau@gmail.com