ஏரி எனும் நன்னீர் ஊற்று
நாம் எல்லோரும் ஒரு கிரேக்க கதை படித்திருப்போம் ஒரு யானையின் எடையை காண விரும்பும் அரசனின் கதை இது. ஒரு முழு யானை எவ்வளவு எடை இருக்கும் என்று சந்தேகம் அரசனுக்கு. இதை தன் அரசவையில் எல்லோரிடமும் கேட்டான் எல்லா அறிஞர் பெருமக்களும் யானையை எவ்வாறு எடைபோடுவது என்று முழித்தனர். அப்பொழுது ஒருவர் மட்டும் நான் யானையின் எடையை கச்சிதமாக சொல்கிறேன் என்று கூறி யானையை ஒரு படகில் ஏற்றி வந்து படகு எவ்வளவு பகுதி தண்ணீரில் மூழ்கியது என்பதை கணக்கெடுத்தார். பின்பு அதே படகில் அதே அளவு மூழ்கும் வரை சிறு சிறு கற்களை அதன் மீது வைத்தார். இப்பொழுது இந்த சிறிய கற்களில் எடையும் யானையின் எடையும் சமமாக இருக்கிறது. இதன் மூலம் யானையின் எடையை கச்சிதமாக அந்த அறிஞர் கூறினார். மற்றவர் எல்லோரும் யானையை ஒரு பெரும் பொருளாக பார்க்கும் பொழுது அவர் யானையின் சிறு சிறு பகுதிகளாக பிரித்துப் பார்த்தார் வென்றார்.
சிறிது காலத்திற்கு முன்பு நம் தமிழகத்திலும் அணைகள் பற்றிய ஒரு பெரும் விவாதம் எழுந்தது. அணைகள் தான் நம் நீர் தேவைக்கான ஒரே ஆதாரம் என்றும் அணைகள் தான் தமிழ்நாட்டின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கும் என்றும் பலபேர் பலவிதமான கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் அணைகளைத் தாண்டி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகிற்கும் நன்னீரை பகிர்ந்து கொண்டிருப்பது ஆறுகளும் ஏரி குளம் குட்டை போன்ற நீர் நிலைகளிலும் தான். இது நம்மில் பலரும் அறியாத செய்தி அணைகளைத் தாண்டி நாம் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஏரிகளையும் குளங்களையும் தான்.
உலகில் ஒட்டுமொத்தமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து நமக்கு 93100 கன மீட்டர் அளவு நன்னீர் கிடைக்கின்றது. உலக அளவில் மக்களுக்கு அதிகமான நீரை கொண்டு சேர்ப்பது இப்படி பட்ட ஏரியும் குளங்களும் தான்.
அணைகள் கட்ட பெரிய நில பரப்பு தேவைப்படும். ஒரு அணை குறைந்தது 50 க்கு மேற்பட்ட கிராமங்களை விழுங்கி தான் கட்டபட்டிருக்கும். ஏன் தற்போது கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையால் 178 கிராமங்கள் பாதிப்படையும் என்ற செய்திகளை நாம் பார்க்கவில்லையா.
ஆனால் ஏரிகள், குளங்கள் அப்படி அல்ல அது மட்டும் இன்றி குறிப்பிட்ட பகுதியின் சூழலை அது கட்டுக்குள் வைக்கிறது (micro environment). அத்தோடு மீன் வளர்ப்பு சில நீர் நிலைகளில் பூ வளர்ப்பு என்று சில மக்களின் வாழ்வாதாரத்தை ஈடு செய்கிறது.
1912ல் பிரான்கோயிஸ் அல்போன்ஸ் போல் என்பவர் ஜெனிவா ஏரியை படித்து ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் பற்றி படிப்பதற்கான ஒரு படிப்பை லிமினோலஜி என்னும் பெயரில் உருவாக்கினார். பின்னாட்களில் 1922இல் ஆகஸ்ட் தினேமன் என்னும் ஜெர்மன் விலங்கியலாளரும் ஐநார் நைமன் என்னும் ஸ்வீடன் நாட்டு தாவரவியலாளரும் ஒன்றாக சேர்ந்து உலக அளவில் ஏரிகள் பற்றிய படிப்பிற்கான ஒரு அமைப்பை (International soceity of liminology) உருவாக்கினர். இதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் கடல் போல் படர்ந்து இருக்கும் ஏரிகளை பற்றி படிப்பதாகும். limnology என்பது உள்நாட்டு நீர்த்தேக்கங்களை பற்றி படிக்க கூடியது. இவற்றில் சில இடங்களில் அணைகளும் அடங்கும். ஏரிகளை மற்றும் உள்நாட்டு நீர் தேக்கங்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர். ஒன்று மேலடுக்கு நிலை (littoral zone), இது மேற்புறம் நிலத்தோடு அதீத தொடர்பு உடைய பகுதி. இரண்டாவது திறந்த நீர் வெளி பகுதி ( photic or open water zone), இவை சூரிய ஒளி படக் கூடிய ஒன்றாக இருக்கும். மூன்றாவது ஆழப்பகுதியில் (benthetic or deep water profundal), அங்கு சூரிய ஒளி மிகவும் குறைவாக இருக்கும். அது மட்டுமன்றி ஒரு ஏரியின் தன்மை அந்த நீரில் உள்ள ஊட்டச்சத்து பொருத்தும் அமையும். இது போல் இன்னும் ஏரிகளை பற்றிய பல்வேறு விஷயங்களை இந்த படிப்பு குறிக்கின்றது. உலகின் ஒட்டுமொத்த நன்னீரின் சதவீதம் வெறும் 3.5தான். அதில் பனிக்கட்டியாகவும், நிலத்தடி நீராகவும் மட்டும் 98 சதவிகிதம் இருக்கிறது. மீதமுள்ள 2 சதவீதத்தில் நிலத்திற்கு மேல் உள்ள நன்னீரில் ஏரிகளின் பங்கு மிக பெரியது சில இடங்களில் மக்கள் வெறும் ஏரியை மட்டும் கூட நம்பி வாழ்வார்கள். டிடிகா ஏரியை நம்பி உரோஸ் மக்கள் வாழ்கிறார்கள் அப்படி.
அது சரி தங்க புதையலை நம்பி ஒரு ஏரி அழிந்த கதை தெரியுமா?
அடுத்த வாரம் பார்ப்போம்….
கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com