Skip to content

பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள்

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் காடுகள் அழிக்கப்பட்டு கான்கீரிட் கட்டடங்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த அவல நிலைமையை போக்குவதற்காகவும், பசுமையை பேணிக் காப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட முறையே மியாவாக்கி காடுகள். காலி இடத்தில் நெருக்கமாக மரங்களை நட்டு காடு அமைக்கும் முறையே மியாவாக்கி காடுகள் எனப்படும். ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிரா மியாவாக்கி என்ற தாவரவியல் வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது. இடைவெளி இல்லாமல் நெருக்கமாக வளர்வதால் மரங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு, 10 ஆண்டுகளில் பெறும் வளர்ச்சியை இரண்டே ஆண்டுகளில் பெறும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 14 ஆயிரம் சதுர கி.மீட்டர் அளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் இந்த முறையை செயல்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக மியாவாக்கி காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மியாவாக்கி காடுகள் அமைக்கும் முறை:

  • காலியான இடத்தை தேர்வு செய்து அதில் குறைந்தது இரண்டரை அல்லது மூன்றடி ஆழத்துக்கு குழி தோண்ட வேண்டும்.
  • அதில் மரத்தூள், மக்கும் குப்பைகளை கொட்டி மேலே அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை இட்டு மரக்கன்றுகளை நெருக்கமாக நட வேண்டும்.
  • உதாரணமாக 1000 சதுர அடி நிலத்தில் 300-400 மரங்கள் வரை வளர்க்கலாம். மரங்களை மழைக் காலங்களில் நடவு செய்தல் வேண்டும்.

மரக்கன்றுகளை தேர்வு செய்யும் முறை:

  • குட்டை, நெட்டை, கிளை பரப்பும் மரங்கள் என கலந்து எடுத்துக்கொள்ளலாம். நாட்டு ரக மரங்களை தேர்வு செய்வது சுற்றுச்சுழலுக்கு நல்லது.
  • புங்கன், வேம்பு, பூவரசு, சரக்கொன்றை, பனை, நுணா, பாலை போன்ற மரங்களையும் வளர்க்கலாம். அவரவர் தேவைக்கேற்ப பழ மரங்களான நாவல்,கொய்யா, இலந்தை போன்ற மரங்களையும் வளர்க்கலாம்.
  • தரமான மரக்கன்றுகளை அருகிலுள்ள வனத்துறை அலுவலகங்கள் மூலமாகவும் அல்லது நர்சரி மூலமாகவும் வாங்கி கொள்ளலாம்.

மியாவாக்கி காடுகளின் பயன்கள்:

  • பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சுழல் பாதிப்பை தவிர்க்க பயன்படுகிறது.
  • காடுகள் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கவும், காற்று மாசுபாட்டை தவிர்க்கவும், வளி மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.
  • குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட்டு வருமானம் ஈட்ட வழிவகுக்கிறது.
  • கடற்கரை பகுதிகளில் சுனாமி போன்ற பேரிழப்பை தடுக்கவும் பயன்படுகிறது.
  • பறவைகள், பூச்சிகள், தேனீக்கள் போன்ற பல்லுயிர்களுக்கு வாழிடமாக பயன்படுகிறது.

கட்டுரையாளர்: பி.மெர்லின், முதுநிலை வேளாண்  மாணவி, வேளாண் நுண்ணுயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: merlinbrittoagri@gmail.com

Leave a Reply

editor news

editor news