உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் நார்ப் பயிராக பருத்தி விளங்குகிறது. நார்ப் பயிர்களின் இராணி எனவும் வெள்ளைத் தங்கம் எனவும் பெருமையாக அழைக்கப்படுகிறது. தொழிற்சாலை வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு தருவதிலும் நாட்டின் வருமானத்திலும் பருத்தியின் பங்கானது இன்றியமையாதது. பருத்தி உற்பத்தியில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம் வகிக்கின்றது. எனினும், உற்பத்தித்திறனானது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. குறைவான உற்பத்திக்கு எண்ணற்ற காரணிகள் இருந்தாலும் சப்பைகள் உதிர்வதும், பூக்கள் கொட்டுவதும் முக்கிய காரணிகளாய் உள்ளன. மண்ணில் இடும் உரங்களில் இருந்து சத்துக்கள் சில சமயங்களில் பயிர்களால் முழுமையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில் நுண்ணூட்டச் சத்துக்களும், வளர்ச்சி ஊக்கிகளும், பயிர் ஹார்மோன்களும் பயிரின் வளா்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்க தேவைப்படுகின்றன.
பருத்தி பயிரிடுதலில் முக்கியமான உழவியல் மேலாண்மை ரீதியான சவால்கள்: 1. பாசன நீர் பற்றாக்குறை 2. நீண்டகாலப் பயிர் 3. உர மேலாண்மை. இதனை கருத்தில் கொண்டு நெல் தரிசு நிலத்தில் இலைவழி ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் பயன்பாடு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்விற்காக நெல் தரிசில் பயிரிடக்கூடிய MCU-7 ரகம் பயிரிடப்பட்டது. ஆராய்ச்சியானது பிப்ரவரி – ஜூலை 2019 ல் நடத்தப்பட்டது. சீரற்ற தொகுதி வடிவமைப்பில் (Randomized block design) மூன்று பிரதிகளுடன் (Replications) பதினொரு சிகிச்சைகளை (Treatments) உள்ளடக்கி சோதனை செய்யப்பட்டது. பேரூட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியன அடி மற்றும் மேல் உரங்களாக 60:30:30 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் அளிக்கப்பட்டன. இந்த ஆய்வில் த.வே.ப. பருத்தி பிளஸ் 5 கிலோ/ஹெக்டேர் (பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில்), நாப்தலின் அசிட்டிக் அமிலம்(NAA) 40 பிபிஎம் (பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில்), ஃபாண்டாக் பிளஸ் 1மிலி/லிட்டா் (பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில்) மற்றும் மெபிகாட் குளோரைடு 100 பிபிஎம் (காய்க்கும் பருவத்தில்) ஆகியன தனித்தும் சேர்க்கைகளாகவும் இலைவழியாக அளிக்கப்பட்டன. பரிசோதனை காலத்தில் வளர்ச்சி மற்றும் மகசூல் கணக்கிடப்பட்டது. அவற்றுள் முக்கியமான உற்பத்திக் கூறுகள் பின்வருமாறு: பக்கவாட்டுக் கிளைகளின் எண்ணிக்கை, சப்பைகளின் எண்ணிக்கை, காய்களின் எண்ணிக்கை மற்றும் காய் எடை ஆகும்.
இலைவழி ஊட்டமாக, பூக்கும் தருணத்தில் நாப்தலின் அசிட்டிக் அமிலம்(NAA) 40 பிபிஎம் மற்றும் காய்க்கும் பருவத்தில் ஃபாண்டாக் பிளஸ் 1மிலி/லிட்டா் இணையானது கணிசமான உற்பத்திக்கூறுகளை பதிவு செய்ததுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி அதிகமான பக்கவாட்டுக் கிளைகளின் எண்ணிக்கை (13.67), சப்பைகளின் எண்ணிக்கை (48.16), காய்களின் எண்ணிக்கை (19.41) மற்றும் காய் எடை (3.25 கிராம்) மேலும் அதன் தொடா்ச்சியாக அதிக விதை பருத்தி மகசூலை (1504.81 கிலோ/ஹெக்டேர்) பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி ஊக்கிகளின் இலைவழி தெளிப்பின் மூலம் பக்கவாட்டுக் கிளைகள் 35.19% அதிகரித்தும், சப்பைகள் 30.01% அதிகரித்தும், காய்களின் எண்ணிக்கை இல் 17.88% அதிகரித்தும் மற்றும் காய் எடையில் 11% அதிகரித்தும் கட்டுப்பாட்டு சிகிச்சையோடு ஒப்பிடும் போது பதிவு செய்ததுள்ளது. சப்பைகள் மற்றும் காய்களைத் தக்கவைத்துக் கொள்வதில் NAA மிகவும் திறமையானது என்பதால், மற்ற சிகிச்சைகளை விட சப்பைகள் மற்றும் காய்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கட்டுப்பாட்டை விட அறுவடை செய்யப்பட்ட காய்களின் எண்ணிக்கை ஒரு செடிக்கு (17.88%) அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணம். ஃபான்டாக் பிளஸ் போன்ற இலைவழி ஊட்டச்சத்துக்களின் பயன்பாடானது காய்கள் உதிர்தலைக் குறைக்க உதவியது மற்றும் நார் செல்கள் துவக்கத்தையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இத
னால் மற்ற சிகிச்சைகளை விட காய்களின் எடை கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற சிகிச்சைகளைக் காட்டிலும் அதிகமான விதை பருத்தி எடையினை பதிவு செய்தமையால் நிகர இலாபம் அதிகரித்துள்ளது. இந்த சிகிச்சையின் நிகர இலாப விகிதம் 2.02 ஆக இருக்க கட்டுப்பாட்டின் நிகர இலாப விகிதமானது 1.44 ஆக பதிவாகியுள்ளது.
எனவே நெல் அறுவடைக்குப் பின் பருத்தி பயிரிடுவதோடு விடாமல் அவற்றிற்குத் தேவையான இலைவழி ஊட்டச்சத்துக்களையும் ஹார்மோன்கைளயும் பூ பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் அளிப்பதால் நெல் தரிசு பருத்தியில் உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம்.
கட்டுரையாளர்கள்:
- ச.ஹரிணிஸ்ரீ, முதுநிலை ஆராய்ச்சி மாணவி மற்றும்
- முனைவர். த. கல்யாணசுந்தரம், பேராசிரியா், உழவியல் துறை
வேளாண்புலம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: agriharini@gmail.com