வற்றிய கடல்…
இந்த உலகம் 5முறை அழிந்துள்ளது. இப்பொழுது மீண்டும் 6ஆவது முறையாக அது மனிதர்களால் நடக்குமோ என்ற அச்சம் உருவாகத் தொடங்கி இருக்கிறது. இந்த தலைப்பை படிக்கும் போதே ஒரு எண்ணம் வந்திருக்கும் கடல் வற்றுமா வாய்ப்பே இல்லை என்று ஆனால் உண்மையில் ஒரு கடல் வற்றி தான் போனது. மனிதனின் செயல்களால் இயற்கையின் இயல்பை மாற்ற நினைக்கும் எல்லாருக்கும் இது ஒரு பெரிய உதாரணம். உலகின் மிக பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு என்று ஐ.நா மன்றம் இதை அறிவிக்கிறது அப்படி பட்ட கடல் தான் ஆரல் கடல்.
ஆரல் உண்மையில் கடல் இல்லை ஏரி தான். ஆனால் கடல் போல் காட்சியளிக்கும் மிகப் பெரிய ஏரி. உலகின் நான்காம் பெரிய ஏரி ஆரல். அந்தப் பகுதி மக்கள் அதை கடல் என்று தான் அழைப்பர். ரஷ்யாவின் உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் இடையில் 68000 சதுர கிலோமீட்டரில் அமைந்த ஏரி அது. கிட்டத்தட்ட 1050 km3 அந்த ஏரியின் நீர் கொள்ளளவு ஆகும். அந்த பகுதி மக்களின் பொருளாதாரத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் அந்த ஏரியை நம்பித்தான் இருந்தனர். மீன் பிடித்தல், சுற்றுலா என அந்த மக்களின் வருவாயில் பெரும் பங்கு ஆரலை சார்ந்தே இருந்தது. இதில் குறிப்பிட வேண்டியது ஆரல் கடலில் மீன் பிடிக்க அம்மக்கள் படகை மீறி கப்பலில் செல்வார்களாம். இதுவே ஆரலின் பிரம்மாண்டத்தை விவரிக்கும்.
இப்படிப்பட்ட இந்த ஏரிக்கு நீர்வார்க்கும் இரண்டு பெரும் நதிகள் அமுடார்யா, சயர்டார்யா என்னும் நதிகள் தான் அந்த ஏரியை தாண்டி பெரும்பாலான இடங்கள் பாலை வகை நிலத்தை சார்ந்தது தான். அன்றைய அரசு 1950 களில் ஒரு முடிவு எடுக்கிறது அது தான் இந்த பேரழிவின் துவக்கம். ஏரிக்கு போகும் நீரை தடுத்து அணைகட்டி மடை மாற்றி ஏன் விவசாயம் செய்யக் கூடாது என்பது தான் அந்த எண்ணம். அதை நடத்தியும் காட்டியது இரண்டு நதிகளுக்குமிடையில் தன் விருப்பம் போல் அணையைக் கட்டி நீரை மடை மாற்றுகிறது.
ஆரல் கடல் மற்ற பகுதி போல் அன்றி அங்கு வேறு சில சிக்கல் இருக்கிறது. அங்கே ஆரலுக்கு உள்ளே வரும் நீரின் அளவிற்கு ஆவியாகுதலும் நடக்கும். இதன் விளைவு 1960களில் இருந்து தன்னுடைய சுற்றளவில், பரப்பளவில் என்று சுருங்கத் துவங்கியது. ஆரல் அடுத்த 40 வருடங்களுக்குள் 10% ஆரல் இல்லாமல் ஆனது. முதலில் வருடத்திற்கு 21 செ.மீ. குறைந்த ஆரல் பிறகு அது 57 செ.மீ. ஆக உயர்ந்தது. 1998இல் தன்னுடைய கொள்ளளவில் 210 km3 ஆக குறைந்தது. அதுவே 2007இல் வெறும் 27 km3 தான். ஆனால் விவசாய வேலைக்காகவும் அங்கே துவங்க பட்ட சில தொழிற்சாலைக்காகவும் குடியேறிய மக்கள் எண்ணிக்கை 13.8 மில்லியனில் இருந்து 33.2 மில்லியனாக உயர்ந்தது. இப்பொழுது தான் பெரும் சிக்கல் எழுந்தது அத்துணை மக்களுக்கான நீர் தேவை கூட சேர்ந்து உயர்ந்தது ஆரல் தொடர்ந்து வற்ற துவங்கியது. இதனால் ஏற்பட்ட சூழலியல் மாற்றம் தான் எத்தனை…
அழிந்த மீன்கள்
1960 களில் ஆரல் கடலில் பெறப்பட்ட மீனின் அளவு 44000 டன் ஆகும் என்கின்றனர். ஒரு வகை மீன் ஆரல் கடலில் பிரத்யேகமாக வளரும். அதை உண்ணவே பல சுற்றுலா பயணிகள் அங்கே வருவார்கள். ஆனால் இன்று 24 வகை மீன் இனங்கள் அங்கே அழிந்தே விட்டன. 245 வகை மற்ற உயிரினங்களும் அழிந்து விட்டன. ஆரல் கடல் வற்றியதால் மீன் பிடித்தல் தொழிலும் பெரிதும் சேதம் அடைந்தது. 40000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பை கொடுத்த தொழில் அது அத்தோடு ஒட்டு மொத்த ரஷ்யாவின் 6இல் ஒரு பங்கு மீன் உற்பத்தி இங்கு தான் நிகழ்ந்தது.
மணல் புயல்
ஆரல் கடல் இருந்த வரை அங்கு வீசும் காற்று வெப்ப காற்றாய் இருந்தாலும் அதை குளுமை செய்யும் ஆரல். ஆனால் இன்றோ அதன் நிலை வேறானது வருடம் குறைந்தது 10 மணல் புயல் அவ்விடங்களில் வீசுகிறது. காரணம், ஆரல் அழிந்தது நீரின் அழுத்தம் முன்பு மணல் புயலை பெரிதும் கட்டுபடுத்தியது இன்று அது பெரிதும் சாத்தியம் இல்லாமல் போகிறது.
அதிகரிக்கும் உவர்ப்பு
ஆரலை கடல் என்று அழைப்பதாலோ என்னவோ அதன் நீர் உவர் நீர் தான். ஆனால் அது வற்றத் துவங்கியதும் அதன் உவர் தன்மை அதிகரிக்கத் துவங்கியது. குறிப்பாய் 1960 இல் 10g/lit ஆக இருந்தது பின் 100g/lit ஆக மாறியது.
உபாதைகள்
அங்கே வாழும் மற்ற உயிரினம் மட்டுமன்றி மனிதர்களுக்கும் பெரும் சுகாதார, உடலியல் பிரச்சனைகள் உருவாகத் துவங்கி இருக்கிறது. ஆயிரத்தில் 75குழந்தைகள் பிறக்கும் பொழுதே இறக்கின்றன. 10000இல் 12 குழந்தைகள் கருவிலேயே இறக்கின்றன. பலருக்கு காசநோய் உட்பட பல நோய்கள் உருவெடுக்கிறது காரணம் சூழலியல் மாற்றம். இது மட்டுமின்றி அங்கே 5 மில்லியன் மக்கள் ஏதேனும் உடல் உபாதைகள் இல்லாம இருக்க மாட்டார்கள் என்கின்றது சில அறிக்கைகள். வெறும் 2 நதியின் போக்கை மாற்றியதற்கே இப்படி பட்ட விளைவை ரஷ்யா சந்திக்கும் பொழுது நாம் இங்கே நதி நீர் இணைப்பை பற்றி பேசும் பொழுது பெரிய உரையாடல் கருத்துக்கள் தேவை என்பது விளங்கும்.
இது எல்லாம் படித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தான் அமேசன் காட்டை ஒரு சில அரசுகள் அழிக்க எண்ணுகிறது என்பது எப்படிப்பட்ட அறிவற்ற செயல் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த உலகம் மனிதனால் ஆக்கப்பட்டது இல்லை மனிதருக்கு மட்டும் என்றும் ஆக்கப்பட்டது இல்லை. நாம் நமது வசதிக்காக நாடு என்றும் எல்லை என்றும் பிரிந்து கிடக்கிறோம், இயற்கை பிரியவில்லை. அமேசான், ஆரல், நைல், நையாகரா மட்டும் அல்ல ஒவ்வொரு நதியும், இந்த உலகின் சொத்து தான்… உலகின் பங்கு தான்…
-தொடரும்….
கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com