Skip to content

தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும்

தென்னை ஒரு முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகும். தென்னையை பல வகைப் பூச்சிகள் தாக்கி சேதம் விலைவிப்பதால் தேங்காய் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த கட்டுரையில் செம்பான் சிலந்தி தாக்குதலால் தென்னையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் மேலாண்மை வழிமுறைகளை பற்றி இந்த கட்டுரையில் காணலாம். இந்த செம்பான் சிலந்தியின் தாக்குதல் முதன்முதலாக மெக்சிக்கோவின் குரேரோ மாநிலத்தில் கீப்பர் என்பவரால் 1965 ஆம் ஆண்டு தென்னத்தோப்புகளில் கண்டறியப்பட்டது. இந்தியாவில், செம்பான் சிலந்தியின் தாக்குதல் தென்னையில் 1998 ஆம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அம்பலூர் சுற்று வட்டாரப்பகுதியிலும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் 1999 ஆம் ஆண்டு இதன் தாக்குதல் தென்னந் தோப்புகளில் கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் தென்னை சாகுபடி செய்யப்படும் அனைத்து பகுதியிலும் இதன் தாக்குதல் கண்டறியபட்டுள்ளது. எனவே இக்கட்டுரையில் இவற்றின் சேதம் மற்றும் மேலாண்மை முறைகளை பற்றி காண்போம்.

வளர்ச்சி பருவம்

சிலந்தியானது 200-250 மைக்கரான் அடர்த்தி உடையது உடலின் முன்புறம் இரண்டு பக்கமும் இரண்டு கால்களாக மொத்தம் 4 கால்கள் உள்ளன. பெண் சிலந்தியானது 20-100 முட்டைகளை அதன் மொத்த வாழ்நாளான 7-10 நாட்களில் இடுகிறது. சிலந்தியானது, கோடை காலத்தில் அதிக இனப்பெருக்க திறன் மற்றும் குறுகிய வாழ்க்கை சுழற்சி ஆகிய காரணங்களால் சிலந்தியின் எண்ணிக்கை மற்றும் தாக்குதல்  அதிகமாக காணப்படுகிறது. இந்த சிலந்தி பூச்சியானது காற்று வழியாக பரவுகிறது. சராசரியாக 11-12 நாட்களில் ஒரு தலைமுறை முடிந்துவிடுகிறது.

பூச்சி தாக்குதலின் சேதம் மற்றும் அறிகுறிகள்

செம்பான் சிலந்தி மகரந்த சேர்க்கைக்கு பிறகு வளரும் குரும்பைகள் மற்றும் இளங்காய்களின் தொட்டுக்கு அடியில் இருந்து கொண்டு மிருதுவான திசுக்களைத் தாக்கி அதன் சாற்றினை உறிஞ்சி வாழ்கிறது. அவ்வாறு உறிஞ்சப்பட்ட பகுதி உலர்ந்தும், பழுப்பு நிறமாகவும் மாற்றம் அடைகிறது. தாக்கப்பட்ட குரும்பைகள் வளர்ச்சி அடைந்து இளங்காய்களாக மாறும்போது பழுப்பு நிரப்பகுதியின் அளவு அதிகமாவதுடன் பல சிறிய வெடிப்புகளும் தோன்றுகின்றன. செம்பான் சிலந்தி பாதிக்கப்பட்ட தேங்காய்கள் சிறுத்து விடுவதுடன், அதன் உள்ளே இருக்கும் பருப்பின் கன அளவும் மிகவு குறைந்து விடுகிறது. ஒன்றிலிருந்து ஆறு மாதக் குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் இவ்வகையான தாக்குதலுக்கு ஆளாகின்றன.

செம்பான் சிலந்தியின் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்

  • செம்பான் சிலந்தியினால் அதிகம் தாக்கப்பட்டு உதிர்கின்ற குரும்பைகளை மண்ணில் புதைத்தோ அல்லது எரித்தோ அழிக்க வேண்டும்.
  • ஊடுபயிர் சணப்பை – ஆண்டிற்கு 4 பயிர்கள் மற்றும் தடுப்பு வரப்பு பயிராக சவுக்கு மரங்களை வளர்ப்பதன் மூலம் இச்சிலந்தி மேலும் பல மரங்களை தாக்காமல் தடுக்கலாம்.
  • தேவையான அளவு நீர் பாய்ச்சுதல் அவசியம்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவை விட யூரியா 1.3 கி.கி, சூப்பர் பாஸ்பேட் 2.0 கி.கி. மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் 5 கி.கி/ மரமொன்றிற்கு/ ஆண்டிற்கு அதிகமாக உரமிடுவதுடன் மூலம் சிலந்தித் தாக்குதலின் எதிர்ப்பு சக்தியை தென்னையில் அதிகரிக்கலாம்.
  • டிரைஅசோபாஸ் 5 மி.லி/லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி/ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். தென்னம் பாலைகள், குரும்பைகள் மற்றும் இளங்காய்களின் மீது நன்கு படும்படி ஒரு மாத இடைவெளியில் 2 முறை தெளிக்கவும். தாவரச் சிலந்தி கொல்லிகளை 45 நாட்கள் இடைவெளியில் 1-6 மாதம் குரும்பைகளின் மேல் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். அசாடிராக்ட்டின் அரை சதம், 5 மி.லி/லி தண்ணீரில் கலந்து முதல் முறையாகவும், வேப்பெண்ணை 3 சதம், 30 மி.லி யை 1 லிட்டர் தண்ணீர் கலந்து இரண்டாவது முறையாகவும் ராக்கர் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
  • மோனோகுரோட்டோபாஸ் அல்லது கார்போசல்பான் 2.0 மி.லி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்தி கட்டுப்படுத்தலாம். அவ்வாறு செய்வதற்கு முன்பு முதிர்ச்சியடைந்த காய்களை பறித்து விடவேண்டும் அல்லது மருந்து செலுத்தி 45 நாட்கள் கழித்து காய்களை பறிக்கவேண்டும்.

கட்டுரையாளர்கள்:

சீ.சின்னதுரை, கி.இலக்கியா மற்றும் மு.ம.மௌதம். முதுநிலை வேளாண் பட்டதாரிகள், பூச்சியியல் துறை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. மின்னஞ்சல்: durai0850@gmail.com

Leave a Reply

editor news

editor news