Skip to content

திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள்

ஜாதிக்காய் ஒரு வாசனை மரப் பயிராகும். இவை தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பயிரிடப் பட்டு வருகிறது. இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்ட பயிராகும். இது ஒரு வாசனை பயிராக இருந்தாலும் மிகுந்த மூலிகைத்துவம் கொண்டது. இதில் இருந்து எடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெயானது சர்வதேச சந்தையில் கூடுதல் மதிப்பு உள்ளது. இந்த மரமானது பெரும்பாலும் தென்னை மற்றும் பாக்கு மரங்களுக்கு இடையில் ஒரு ஊடுபயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். எனவே இக்கட்டுரையில் திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்களைப் பற்றி விரிவாக காண்போம்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதி உள்ள களிமண் மற்றும் செம்மண் நிலப்பகுதி உகந்தது. இலை மக்குகள் மற்றும் அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை உயரமுள்ள தோட்டங்களில் இதனைப் பயிரிடலாம். மரங்கள் ஈரப்பசையுடன் கூடிய வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும். மழையளவு 150-250 செ.மீ வரை பொழியும் இடங்களில் இதனைப் பயிரிடலாம். தமிழ்நாட்டில் கல்லாறு, பாலியாறு, மரப்பாலம், கூடலூர் மற்றும் குற்றாலம் பகுதிகளில் ஜாதிக்காய் பயிரிடப்படுகிறது, கீழ்பழனி மலைப்பகுதிகளில் உள்ள கலப்புத் தோட்டங்களில் இதனைப் பயிர் செய்யலாம்.

இரகங்கள்

விஷ்வ ஸ்ரீ, கொங்கன் சுகந்தா மற்றும் கொங்கன் ஸ்வாட் ஆகும். அதிக மகசூல் தரக்கூடிய ஐ. ஐ.எஸ்.ஆர் பரிந்துரை செய்யப்பட்ட மரங்களான ஏ 9. 20, 22, 25, 69, 150 ஏ 4 -12, 22, 52, ஏ11 – 23, 70 போன்றவற்றினை பயிர் செய்யலாம்.

இனப்பெருக்கம்

விதை மற்றும் ஒட்டுக்கட்டிய செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். ஜாதிக்காய் நாற்றுக்களை விட ஒட்டுக்கட்டிய செடிகள் மிகுந்த பலனைக் கொடுக்கும்.

விதைப்பெருக்கம்

ஜீன்-ஜீலை மாதங்களில் தேர்வு செய்யப்பட்ட பெண் மரங்களிலிருந்து 30 கிராம் எடை கொண்ட பழங்களை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட விதைகளை 30 செ.மீ இடைவெளியில் 2.5 -5.0 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். அதன் பின் தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். விதைகள் நட்ட ஒரு மாதத்தில் முளைக்க தொடங்கும். சுமார் நான்கு மாதங்கள் வரை விதைகள் முளைப்பது தொடர்ந்து இருக்கும். ஒரு வருட வயதுள்ள நாற்றுகளை 35×15 செ.மீ அளவு கொண்ட பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். பின் 18-24 மாத வயதுடைய நாற்றுகளை நன்கு உழுத வயல்களில் நடவேண்டும்.

விதையில்லா பயிர் பெருக்கம்

அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களை பயிர் பெருக்கம் செய்ய ஒட்டுமுறை (அ) மொட்டு ஒட்டு முறை சிறந்தது. அக்டோபர் – ஜனவரி மாதங்களில் (நேர் தண்டுகளை) பயன்படுத்தி ஒட்டுகட்ட வேண்டும்.

நடவு

நாற்றுக்களை நட குழிகளை 60 செ.மீ நீள, அகலம் மற்றும் ஆழம் இருக்குமாறு தோண்டவேண்டும். இடைவெளி 8 x 8 மீட்டர் இருபுறமும் இருக்கவேண்டும். குழிகளில் தொழு எரு, தோட்டத்து மண் ஆகியவற்றை இட்டு நிரப்பி வைக்கவேண்டும். பருவமழை தொடங்கும் போது நாற்றுக்களை நடவு செய்யவேண்டும். ஜூன் – டிசம்பர் மாதங்களில் நட வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

நட்ட ஒரு வருடம் ஆன பிறகு மரம் ஒன்றிற்கு தொழு எரு 15 கிலோ, தழைச்சத்து 20 கிராம், மணிச்சத்து 20 கிராம் மற்றும் சாம்பல் சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும். வளர்ந்த மரங்களுக்கு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 300 கிராம், மணிச்சத்து 300 கிராம், சாம்பல்சத்து 960 கிராம் கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இரண்டு பாகங்களாக பிரித்து ஜூன்- ஜூலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். உரம் இட்ட ஒரு மாதம் கழித்து மரம் ஒன்றிற்கு 50 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் உரம் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

கோடைக் காலத்தில் 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

பின்செய்நேர்த்தி

மரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் களை எடுத்து சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். நடவு செய்த இளஞ்செடிகளுக்கு நல்ல நிழல் கொடுக்கவேண்டும். மரங்களுக்கிடையே நிழல் தர வாழை போன்றவற்றை வளர்க்கலாம். ஜாதிக்காயை தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் கலப்புப் பயிராகப் பயிர் செய்யலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

ஜாதிக்காயில் பூச்சிகளும், நோய்களும் குறைவு.  இருந்தாலும் ‘லொரன்தஸ்’ என்னும் ஒட்டுண்ணிச் செடியினால் மரத்தின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணிச் செடியை வெட்டி எறியவேண்டும். பின்பு போர்டோ பசையை மரத்தில் தடவிவிடவேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்

ஜாதிக்காய் மரம் நட்ட ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மரத்திலிருந்து ஜாதிக்காய் பழம்: 1000-2000 எண்ணிக்கை, உலர்ந்த ஜாதிக்காய் கொட்டை: 5 – 7 கிலோ, ஜாதிப் பத்திரி : 0.5-0.7 கிலோ (500-700 கிராம்) கிடைக்கும்.

கட்டுரையாளர்:

கா. அருண்குமார், ஆராய்ச்சி மாணவர் (வாசனை மற்றும் மலை தோட்டப்பயிர்கள் துறை), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை, 641003.

மின்னஞ்சல்: arunkru9791402135@gmail.com

Leave a Reply

editor news

editor news