Skip to content

சிறுகிழங்கில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்: ஒரு வெற்றிக்கதை

முன்னுரை

இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் ஒரு முக்கிய பயிர் சிறு கிழங்கு ஆகும். உருளைக்கிழங்கைப் போல் தோற்றமளிக்கும் இதன் கிழங்குகள் சமைத்து காய்கறியாக உண்ணப்படுகின்றன. செடிகளின் அடிப்பகுதியில் தண்டோடு சேர்ந்து கரும் தவிட்டு நிறத்தில் நல்ல வாசனையுடனான கிழங்குகள் கொத்தாக இச்செடிகளில் உண்டாகின்றன.  கிழங்குகளில் உலர்ந்த பொருள் (31-33%), மாவுச்சத்து (18-20%) மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் (0.05 முதல் 0.12%) காரணமாக ஒரு சிறப்பியல்பு சுவையுடன் நுகர்வோரால் இக்கிழங்கு பெரிதும் விரும்பப்படுகின்றன. இந்தியாவில், இது முக்கியமாக கேரளா மாநிலத்தில் திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களிலும், தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர்களால் நெடுங்காலமாக பயிரிடப்பட்டு வருகின்றது.

சிறுகிழங்கின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்

கடந்த ஐம்பத்தேழு ஆண்டுகளில் சி.டி.சி.ஆர்.ஐ.யில் நடத்தப்பட்ட முறையான ஆராய்ச்சியின் மூலம், சிறுகிழங்கின் உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை மேம்படுத்துவதற்காக மேம்பட்ட இரகம் (படம் 1) மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள்  (அட்டவணை 1) ஆகியவை உருவாக்கப்பட்டன.

தொழில்நுட்ப, மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் சமூக-பொருளாதார காரணிகள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் காரணமாக சிறுகிழங்கின் மேம்பட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் ஏற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

படம் 1. சி.டி.சி.ஆர்.ஐ உருவாக்கிய சிறுகிழங்கின் மேம்படுத்தப்பட்ட இரகம்

 

அட்டவணை 1. பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள்

நடும் பருவம் ஜூலை-அக்டோபர்
விதை பொருட்கள்

 

முழு விதை கிழங்கு: 40-50 கிலோ ஒரு ஹெக்டேருக்கு; விதை செடியின் தண்டின்
அளவு: 10-15 செ.மீ நீளம்
நிலம் தயாரிக்கும் முறை மற்றும் நடவு குவியல்; பார் மற்றும் படுக்கை
நடவு செய்யும் முறை செங்குத்தாகவோ அல்லது படுக்கை வசமாகவோ நடவு செய்ய வேண்டும்
ஏற்ற நிலம் மேட்டு மற்றும் வயல் நிலங்களில் கீழ் மானவாரிப் பயிராகவும், நல்ல வடிகால் வசதி கொண்ட வளமான மண்ணிலும் வளரும்
இடைவெளி மற்றும் செடிகளின் எண்ணிக்கை (ஹெக்டேர்) 45 x 30 செ.மீ; 74000 செடிகள்

 

தொழு உரம் (டன்/ ஹெக்டேர்) 10
தலை:மணி:சாம்பல் சத்து (கிலோ/ ஹெக்டேர்) 60:60:100
பின்செய் நேர்த்தி ஒரு மாதத்தில் களையெடுத்தல் மற்றும் பின்செய் நேர்த்தி செய்தல் மற்றும் இரண்டாவது மாதத்தில் களையெடுத்தல்
பயிரின் காலம் 4-5 மாதங்கள்
அறுவடை, தரம் மற்றும் பொதி செய்தல் வேலையாட்கள் மூலம்

 

சராசரி மகசூல் (டன்/ ஹெக்டேர்) 20-25

தொழில்நுட்ப செயல்விளக்கங்கள்

விஞ்ஞானிகள், தொழில்நுட்ப மற்றும் திறமையான ஊழியர்களைக் கொண்டு செயல்விளக்கங்கள் செப்டம்பர் 2018 – ஜனவரி 2019 (படம் 2) காலத்தில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆல்வான் துலுக்கப்பட்டியில் நடத்தப்பட்டன. செயல்விளக்க திட்டங்களை நிறுவுவதற்காக விவசாயிகளுக்கு தரமான நடவு பொருட்கள் மற்றும் முக்கியமான இடுபொருட்கள் வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு மற்றும் வளர்ச்சி மற்றும் மகசூல் செயல்திறனைக் கண்காணிக்க விஞ்ஞானிகளால் அடிக்கடி பண்ணை ஆய்வும் நடத்தப்பட்டன.

மகசூல் மற்றும் பொருளாதார வருவாய்

மேம்படுத்தப்பட்ட இரகமான ஸ்ரீதாராவின் மகசூல் ஒரு ஹெக்டேருக்கு 26.7 டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது, இது உள்ளூர் வகைகளின் மகசூல் 22.9 டன் விளைச்சலை விட 16.6% அதிகமாகும். கிழங்குகள் அறுவடைக்குப்பின் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள பல்வேறு சந்தைகளுக்கு விற்கப்படுகின்றன. ஒரு கிலோ கிழங்கின் விலை ரூ. 30 முதல் 50 வரை தேவையைப் பொருத்து விற்கப்படுகின்றன (படம் 3). இந்த கிழங்குகள் ஐக்கிய அரபு நாடுகள்,  அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

அட்டவணை 2. மேம்படுத்தப்பட்ட சிறுகிழங்கின் பொருளாதார நிலைபாடு (ஸ்ரீ தாரா)

இரகங்கள் மகசூல்

( டன்/ ஹெக்டேர் )

மொத்த வருமானம்

(₹ / ஹெக்டேர்)

மொத்த செலவு

(₹ / ஹெக்டேர்)

நிகர வருமானம் (₹ / ஹெக்டேர்) வரவு செலவு விகிதம்
ஸ்ரீ தாரா 26.7 2,80,350 1,01,290 1,79,060 2.77
உள்ளூர் வகைகள் 22.9 2,40,450 97,660 1,42,790 2.46

 

கள நாள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் சந்திப்பு : மேம்படுத்தப்பட்ட சிறுகிழங்கு குறித்த செயல்விளக்கங்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆல்வான் துலுக்கப்பட்டியில் 2019 ஜனவரி 11 அன்று கள நாள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது (படம் 4).  இந்நிகழ்ச்சியில் சுமார் 100 விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

சுயசார்பை நோக்கி பயணித்தல்: கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீதாராவின் (படம் 5) நல்ல தரமான நடவுப் பொருட்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய விதை கிராமங்களை நிறுவுவதற்காக அறுவடை செய்யப்பட்ட கிழங்குகளை மற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. பண்ணை வருமானத்தை மேம்படுத்துவதற்கு, குறைந்த அளவிலான முதலீடுகளை கொண்டு சிறுகிழங்கின் உற்பத்தியை அதிகரிக்க வரவிருக்கும் ஆண்டுகளில் உயர் விளைச்சல் தரக்கூடிய ஸ்ரீ தாராவின் கீழ் நிறைய பகுதிகள் சாகுபடியில் உள்ளடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுரை

சிறுகிழங்கின் மேம்படுத்தப்பட்ட இரகம் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பங்கேற்பு செயல்விளக்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களின் தொழில்நுட்ப தலையீடுகளால் உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை அதிகரிக்க முடியும் என்பதைக் காண்பிக்கின்றன. எனவே, பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள், இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளான ‘உழவர் வருமானத்தை இரட்டிப்பாக்குவது’ நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. உழவர் பங்கேற்பு செயல்விளக்கங்கள் விவசாயத்தை அதிக இலாபகரமானதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதற்கான காலத்தின் தேவை என்பதை இந்த வெற்றிக் கதை தெளிவாக நிரூபித்துள்ளது.

கட்டுரையாளர்கள்: முனைவர்கள் து. ஜெகநாதன்,  இரா. முத்துராஜ்,  ப. சி. சிவகுமார், ப. பிரகாஷ்,  ஷீலா இம்மானுவேல்  மற்றும் வி. ரவி. ஐ.சி.ஏ.ஆர்- மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், திருவனந்தபுரம் – 695017, கேரளா.

மின்னஞ்சல்: djaganathtn@gmail.com

Leave a Reply

editor news

editor news