Skip to content

திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள்

மிளகு ஒரு வாசனை பயிராகும். இது வாசனைப் பயிர்களின் ராஜா என்று அழைக்கப் படுகிறது. பைபர் நைகிரம் என்பது அதன் தாவரவியல் பெயராகவும் மற்றும் பைபரேசியே அதன் குடும்பமாகவும் கருதப்படுகிறது. மேலும் மிளகானது ஒரு மூலிகை குணம் நிறைந்த பயிராகும். இதில் உள்ள பிபேரின் மூலிகைத்துவம் கொண்டது. எனவே இக்கட்டுரையில் மிளகின் சாகுபடி தொழில்நுட்பங்களை பற்றி பார்க்கலாம்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: மிளகு பொதுவாக மானாவாரிப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. 150-250 செ.மீ. அளவிலான மழையும், அதிக அளவு ஈரப்பதமும், மிதமான தட்பவெப்ப நிலையும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. நல்ல வடிகால் வசதியுள்ள மண் வளம் நிறைந்த செம்பொறை மண் மிளகு சாகுபடிக்கு ஏற்றவாகும். 1500 மீட்டர் வரை உயரமுள்ள நிலப்பகுதிகளில் பயிரிடப்படலாம்.

பருவம்: ஜூன் – டிசம்பர்.

இரகங்கள்: பன்னியூர் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7, கரிமுண்டா, சிரிகார, சுபகார, பஞ்சமி, பவுர்ணமி, ஐஐஎஸ்ஆர் சக்தி, ஐஐஎஸ்ஆர் தேவம், ஐஐஎஸ்ஆர் கிரிமுண்டா, ஐஐஎஸ்ஆர் மலபார் எக்செல் ஆகியவை சிறந்த இரகங்கள் ஆகும். இவை ஏனைய வகைகளைக் காட்டிலும் கூடுதல் மகசூல் கொடுக்கவல்லது. பன்னியூர் 5 வகை நிழலைத் தாங்கி வளரும். பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது.

  • பன்னியூர் 1 – குறைந்த உயரத்தில் குறைந்த நிழலில் வளரக்கூடியது.
  • கரிமுண்டா – அதிக உயரமான அதிக நிழல் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது.
  • பன்னியூர் 5 – பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது.

பயிர்ப்பெருக்கம்: மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகு கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம்.

விதையும் விதைப்பும்

நாற்றாங்கால் தயாரிப்பு: நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயரப்பாத்திகள் அமைக்கவேண்டும். மண்ணை நன்கு கொத்தித் தேவையான தொழு உரம், மணல், செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்கவேண்டும்.

விரும்பத்தக்க நல்ல குணங்களைக் கொண்ட தாய் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஒரு கொடிகளை தண்டுத் துண்டுகளாக தேர்ந்தெடுக்கவேண்டும். இவற்றின் பக்கத்தில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்கவேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஒடுகொடிகளை தாய்க்கொடியில் இருந்து வெட்டி நீக்கவேண்டும். பின்பு ஒடுகொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும், கீழ்ப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் தவிர்த்து விட்டு நடுப்பகுதியில் பகுதியை தண்டுத்துண்டுகள் (cuttings) தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்கவேண்டும். இளசான கொடிகளையும், முதிர்ந்த கொடிகளையும் தவிர்க்கவேண்டும். பின்னர் ஒரு கொடியிலிருந்து 2-3 கணுக்களை கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியர் வெட்டித் தயாரிக்க வேண்டும். இத்தண்டுத் துண்டுகளில் இலைக் காம்பை மட்டும் விட்டு இலைப்பரப்பை நீக்கவேண்டும்.

பின்னர் இத்தகைய தண்டுத் துண்டுகளின் கீழ்ப்பகுதியை 1000 பிபிஎம் இண்டேல் புட்ரிக் அமிலம் கலவையில் சிறிது நேரம் முழ்கவைத்து எடுத்து பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நடவேண்டும்.

பாலித்தீன் பைகளில் (7×5 அங்குல அளவு) 2 பாகம் வளமான மேல் மண், ஒருபாகம் ஆற்று மணல் ஒரு பாகம் தொழு உரம் கலந்த உரக்கலவை பாலித்தின் பைகளில் நிரப்பவேண்டும். உரக்கலவையை இடுவதற்கு முன்னரே தேவையான சிறிய துளைகளை பைகளில் இடவேண்டும். பாத்திகளிலும், பாலித்தீன் பைகளிலும் தண்டுத் துண்டுகளை நட்ட பின்னர் போதிய நீர் விட்டு நிழலில் வைக்கவேண்டும். இரு முறை தேவையான அளவு பூவாளியால் நீர் ஊற்றவேண்டும். வளரும் சிறு பதியன்களுக்கு உரமாக 10 லிட்டர் தண்ணீரில் யூரியா 40 கிராம் கரைத்து பைக்கு 250 மில்லி என்ற அளவில் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வரவேண்டும். பாலித்தீன் பையில் நட்ட துண்டுகள் மூன்றாம் வாரத்தில் வேர்விடத்தொடங்கி, நடுவதற்குத் தயாராகிவிடும்.

நடவு

முள் முருக்கு, சீமை கொன்றை மற்றும் சில்வர் ஓக், சூபாபுல் ஆகியவை மிளகு பற்றி வளரப் பயன்படுத்தலாம். ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்யும் போது பலா, கமுகு, தென்னை போன்ற பலன் தரும் மரங்களை படர மரங்களாகப் பயன்படுத்தலாம். முள், முருக்கு, சீமை கொன்னை ஆகியவை வெட்டப்பட்ட தண்டுகள் மூலமாக நடப்படுகின்றன. இத்தண்டுகளை மிளகுக் கொடிகளை நடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நட்டால் போதுமானது. ஏனைய சில்வர் ஓக், சூபாபல் போன்றவை நாற்றுக்களாகவே நடவேண்டும். நாற்றுக்களை மிளகுக் கொடிகள் நடுவதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நடவேண்டும்.

உரமிடுதல்

ஒரு கொடிக்கு 10 கிலோ மக்கிய தொடு எருவுடன் 100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து மற்றும் 140 கிராம் சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை இருபாகங்களாகப் பிரித்து மே – ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். இராசயன உரங்கள் நட்ட ஒரு மாதம் கழித்து கொடி ஒன்றிற்கு 10 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் இடவேண்டும்.

ஒருங்கிணைந்த உர மேலாண்மை

செடி ஒன்றிக்கு 50 சதவித கனிம தழைச்சத்து + 10 கிலோ தொழுஉரம் + 50 கிராம் அசோஸ்பைரில்லம் + 50 கிராம் பாஸ்போபாக்டீரியா + 200 கிராம் வேம்பு இடவும். உரங்களைக் கொடியிலிருந்து 30 செ.மீ தூரம் தள்ளி இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

டிசம்பர் – மே மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குழிகளைச் சுற்றி நீர் விட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

ஜூன் – ஜூலை மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இரண்டு முறை களை எடுக்கவேண்டும்.

காய் உதிர்தல்

காய் உதிர்தலை தடுக்க1 சதவித டை அமோனியம் பாஸ்பேட்டை நான்கு முறை (பூ பூப்பதற்கு முன் 1 மே), புதிய இலைகள் மற்றும் பூக்கள் தோன்றும் போது (ஜீன்), காய்கொத்து உருவாவதற்கு முன் (ஜீலை) மற்றும் சிறு காய்கள் இருக்கும் பருவம் (ஆகஸ்ட்)) இலைமேல் தெளிக்க வேண்டும்.

கவாத்து செய்தல்

மிளகுக் கொடிகளின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும். முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் எல்லா பூங்கொத்துக்களை நீக்கிவிடவேண்டும். அத்துடன் மிகுதியான பக்கக் கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிடவேண்டும். மிளகுக்கொடி உருவாக்க தேர்ந்தெடுக்கப்படட இலைகளையும் கிள்ளிவிடவேண்டும். மிளகுக் கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன், மேலும் பற்றிப்படர படர்மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை அப்புறப்படுத்தி, தண்டுகளை நாற்றுக்களாக உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

அறுவடை

நடவு செய்த மூன்று வருடங்களில் மிளகு காய்க்கத் தொடங்குகிறது. நவம்பர் முதல் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யலாம். மிளகுக் கொத்தில் சில பழங்கள் சிவப்பு நிறத்தை அடைந்தவுடன் முழுக் கொத்தை கையால் பறிக்க வேண்டும். பழங்களை பிரித்தெடுத்து, சுடுநீரில் (80 செ.) ஒரு நிமிடத்திற்கு முக்கி எடுத்து 7 முதல் 10 நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும்.

மகசூல்: ஒரு வருடத்திற்கு ஒரு கொடியிலிருந்து 2 முதல் 3 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும்.

கட்டுரையாளர்கள்: 1. கா. அருண்குமார், ஆராய்ச்சி மாணவர் (வாசனை மற்றும் மலை தோட்டப்பயிர்கள் துறை), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை, 641003.

மின்னஞ்சல்: arunkru9791402135@gmail.com

  1. க. வெங்கடேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், வாசனை மற்றும் மலை தோட்டப்பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை, 641003.

மின்னஞ்சல்: venkatesanhort@tnau.ac.in

Leave a Reply

editor news

editor news