இந்திய நாட்டின் கறிக்கோழி (பிராய்லர்) உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 9% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் கோழி இறைச்சியின் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது. அரசு மானியத்தை வழங்குவதன் மூலம், இந்தத் தொழிலை ஊக்குவித்து வருகிறது. உலகில் மூன்றாவது பெரிய கறிக்கோழி (பிராய்லர்-கோழி) உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, ஆண்டுக்கு 3.7 மில்லியன் டன் கோழி இறைச்சியை உற்பத்தி செய்கின்றது. சந்தை மதிப்பு சுமார் 91,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தனிநபர் கோழி நுகர்வு தினமும் அதிகரித்து வருகின்றது, மேலும் மக்களின் உணவு பழக்கத்தை மாற்றி வருகின்றது. வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்தத் தொழில்துறையின் பரந்த திறனைக் கருத்தில் கொண்டு பல கோழித் திட்ட அறிக்கைகளை அரசு வெளியிட்டுள்ளது. ஒரு கலப்பின கறிக்கோழி பண்ணையைத் தொடங்குவதற்கு முன்பு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சிக்காக உள்ளூர் கால்நடை பராமரிப்புத் துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம். மேலும் முற்போக்கான கறிக்கோழி மற்றும் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் வேளாண் பல்கலைக்கழக கோழிப் பண்ணையையும் பார்வையிட வேண்டும்.
பாரத (எஸ்பிஐ) வங்கியின் கடன் நடைமுறைகள் பற்றி விவாதிக்கலாம்
BROILER PLUS SCHEME (கறிக்கோழிகள் பிளஸ் திட்டம்)
பாரத வங்கியின் கடன் பெற சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும் கோழி கொட்டகையும் அமைக்க வேண்டும். கோழி வளர்ப்பில் அனுபவ சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். கடன் பெற குறைந்தபட்சம் ஐந்தாயிரம் (5000) கறிக்கோழிகள் வரை பராமரிக்கப்பட வேண்டும். ஒப்பந்த கோழி வளர்ப்பு நிறுவனங்களுடன் விவசாயிகள் கூட்டுறவு கொள்வது அவசியம். கோழி வளர்ப்புக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான திட்ட வரைவு சமர்ப்பிக்க வேண்டும்.
சொந்த நிலம் மற்றும் கோழி கொட்டகையை வங்கி கடனுக்காக அடமானம் வைத்தல்.
நிலம் மற்றும் கோழி கொட்டகையின் ஆவணங்கள் வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட வேண்டும். உங்களிடம் சொந்த நிலம் இல்லையென்றால் குத்தகைக்கு எடுத்து அந்த நில ஆவணங்களையும் அடமானம் வைக்கலாம்.
கடன் பெற குறைந்தபட்சம் ஐந்தாயிரம் கறிக்கோழிகள் வரை பராமரிக்கப்பட வேண்டும்.
ஐந்தாயிரம் (5000) கறிக்கோழிகளுக்கு சுமார் 7500 சதுர அடிக்கு கொட்டகை கட்ட வேண்டும். ஒரு கறிக்கோழிக்கு 1.25 சதுர அடி இடம் தேவைப்படும். மேலும் 7500 சதுர அடிக்கு கொட்டகை கட்ட 15 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். வங்கியின் வழிகாட்டுதல்களின் படி கோழி கொட்டகை கட்டப்பட்டால் மட்டுமே கடன் வழங்கப்படும்.
கடன் பெற ஒப்பந்த கோழி வளர்ப்பு நிறுவனங்களுடன் விவசாயி கூட்டுறவு அவசியம்
விவசாயிகள் கோழி ஒப்பந்த நிறுவனங்களுடன் இணைந்திருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படுகின்றது. விவசாயி மற்றும் கோழி ஒப்பந்த நிறுவனத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தை வங்கியில் சமர்ப்பித்தல் அவசியம். உதாரணத்திற்கு சுகுனா, மனிஸ் பிராய்லர்கள், வெங்கிஸ் வென்கார்ப் போன்ற நிறுவனங்களுடன் கூட்டுறவு கொள்வது மிகவும் அவசியம்.
வங்கியின் கடன் பெற கோழி கொட்டகை கட்டுமானத்திற்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
கோழி கொட்டகையானது, கிழக்கு மேற்கு திசையில் கட்ட வேண்டும். இது பிரதான சாலையிலிருந்து குறைந்தபட்சம் 10 மீ இடைவெளி விட்டு கட்ட வேண்டும். எந்தவொரு நீர்நிலையிலிருந்தும் குறைந்தபட்சம் 100 மீ இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு கோழி கொட்டகைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் இடைவெளி 500 மீ தூரம் இருக்க வேண்டும். இவை பொருந்தாவிட்டால் கடன் வழங்கப்படாது.
வங்கிக் கடன் மற்றும் வட்டி விகிதம்.
இந்த திட்டத்தில் 9 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. ஐந்தாயிரம் (5000) கறிக்கோழிக்கான செலவுக்காக மூன்று லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. மேலும் கறிக்கோழிகளின் எண்ணிக்கையை (5,000, 10000, 15000) படிப்படியாக அதிகரித்து 9 லட்சம் வரை வங்கிக்கடன் பெறலாம். கடனில் 75 சதவீதத்தை மட்டுமே வங்கி வழங்கும். மீதமுள்ள 25 சதவிகிதம் நாம் சொந்தமாக ஏற்பாடு செய்ய வேண்டும். வங்கி கடன் ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். மாத தவணைகளை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும். கோழி வங்கி கடனுக்கான வட்டி 10.85 சதவீதமாகும்.
வங்கிக் கடன் இரு மாத தவணை முறை (Bimonthly EMI) முறை
ஐந்தாயிரம் கறிக்கோழிகள் ஏழு வாரங்கள் அல்லது 45 நாட்களில் விற்கப்பட்டுவிடும் என்பதால் இரு மாத தவணை முறை பின்பற்றப்படுகிறது. ஒப்பந்த கோழி நிறுவனங்கள் விவசாயிகளுக்கு தவறாமல் பணம் செலுத்துவதற்கான உறுதிமொழியையும் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கிக் கடன் திட்ட அறிக்கை (Project)
வங்கிக் கடன் திட்ட அறிக்கையில் தங்கள் பெயர், நிலப்பரப்பு, கல்வித் தகுதி மற்றும் எத்தனை கறிக்கோழிகளை நீங்கள் பராமரிக்கப் போகிறீர்கள், கறிக்கோழிகளுக்கு தேவையான தீவனம், அளவு மற்றும் அதன் செலவை உள்ளடக்கிய திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். புகைப்படம் மற்றும் வங்கி காசோலை மற்றும் பான் / ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
மத்திய அரசு திட்டங்கள்
கோழி வளர்ப்பு மூலதன நிதி திட்டம் என்பது கோழி வளர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நபார்டு வங்கி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தினால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD)
இந்த வங்கி இந்தியாவில் ஒரு உச்ச வளர்ச்சி நிதி நிறுவனமாகும். கறிக்கோழி வளர்ப்புக்கு வங்கி கடன் மானியம் கிடைக்கின்றது. இந்த வங்கியின் சலுகைகள் 25 சதவீதம் வரை இருக்கும். வங்கி மேலாளர் இணையம் மூலம் வங்கி கடன் மானியத்திற்கான விண்ணப்பத்தை 30 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும். இதனை செய்யாவிட்டால் மானியம் நிராகரிக்கப்படும். மத்திய அரசிடமிருந்து நபார்டு வங்கி மானியத்தொகையைப் பெற்று பாரத பொது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் அங்கேயே இருக்கும். பின்னர் பயனாளிகள் கணக்கிற்கு மாற்றப்படும். இதற்கிடையில் நீங்கள் மாத தவணையை சரியாக செலுத்தினால் மானியம் வழங்கப்படும். அப்படி செலுத்தாவிட்டால் வங்கியே மானியத்தொகையை எடுத்துக் கொள்ளும். வங்கி கடன் மற்றும் மானியத்தொகை பற்றிய விரிவான விளக்கத்தைப் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
கட்டுரையாளர்:
டாக்டர். ஜெ. வசந்தி, உதவிப் பேராசிரியர், பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி, புதுச்சேரி. தொடர்பு எண்: 8754519740
மின்னஞ்சல்: vasres01@gmail.com