உலக தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு எலிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் 7 முதல் 8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் எலிகளால் சேதமடைகின்றன. ஒரு எலியானது ஒரு நாளைக்கு சராசரியாக 30 முதல் 50 கிராம் உணவும், 40 மிலி தண்ணீரையும் உட்கொள்ளும். எலிகள் சேமித்து வைக்கப்படும் விதைகள், தானியங்களை சேதப்படுத்துவதோடு, மனிதர்களுக்கு பல்வேறு சுகாதாரக் கேடுகளையும், நோய்களையும் பரப்புகின்றன.
எலி வகைகள்
இந்தியாவில் பல எலி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கீழ்கண்ட எலி வகைகள் உணவுபயிர்களான நெல், கரும்பு, பயறு, உளுந்து, பருத்தி, மற்றும் தென்னை உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் அழித்து சேதப்படுத்துவதில் மிக முக்கியமானவை ஆகும்.
- இந்திய வயல் எலி அல்லது கரம்பெலி
- புல் எலி
- வயல் சுண்டெலி
- வெள்ளெலி
- பெருச்சாளி
- வீட்டுச் சுண்டெலி
- வீட்டெலி
ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள்
எலிகளால் ஏற்படும் சேதாரத்தை கீழ்காணும் முறைகளைப் பின்பற்றி குறைக்கலாம்.
உழவியல் முறைகள்
- பயிர் சாகுபடிக்கு முன்னும், அறுவடைக்குப் பின்னும் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும், சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம். எலிகள் வலைகளை அமைக்க முடியாதபடி குறுகிய வரப்புகளையே அமைக்கவேண்டும்.
- வயலுக்கு அருகாமையில் வைக்கோல் போர் அமைக்கக்கூடாது.
- ஆட்டுக்கிடை போடும் வயல்களில் எலிகளின் தாக்கம் மிக குறைவாகவே இருக்கும்.
- நெல் வயலில் சணப்பு பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வயல் முழுவதும் தூவி விட்டால், அந்த பூவின் வாசத்திற்கு எலிகள் ஓடிவிடும்.
- ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப் பின்பும் எலிகளின் எண்ணிக்கையை குறைக்க எலி வலைகளைத் தோண்டி எலிகளை அழிக்கவேண்டும்.
- பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.
- வேலிப்பயிராக நொச்சி மற்றும் எருக்கஞ் செடியை வயலை சுற்றிலும் நட்டால், எலிகளின் தொல்லை குறையும்.
- தங்கரளி கிளைகளை வயலை சுற்றி போட்டாலும் எலிகள் வராது.
இயந்திரவியல் முறைகள்
எலிகளை பிடிக்கும் பொறிகளான பானைப்பொறி, தஞ்சாவூர் கிட்டி, மூங்கில் பொறி, இடுக்கிப்பொறி ஆகியவற்றை உபயோகித்து எலிகளை பிடித்து அழிக்கலாம். நெல் வயலில் ஏக்கருக்கு 25 தஞ்சாவூர் கிட்டிகள் வைத்து எலிகளை அழிக்கலாம்.
உயிரியல் முறைகள்
ஆந்தைப் பந்தம் (Bird perch / Owl perch)
- வயல்களில் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் ஆறு அடி உயரம் உள்ள ‘T’ வடிவில் குச்சிகளை ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் எலி பிடிக்க வசதி அளிக்கும் வகையில் நட்டு வைக்கவேண்டும். பனை ஓலைகளை அந்த ஆந்தை உட்காரும் குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் ‘எலிகள்’ ஓடிவிடும்.
- பயிற்சி அளிக்கப்பட நாய்களையும், பூனைகளையும் எலி பிடிக்கப் பயன்படுத்தலாம்.
இரசாயன முறைகள்
எலிகளை கட்டுபடுத்த நஞ்சுகள் தற்போது பெருமளவில் உபயோகபடுத்தப்படுகின்றன. அவற்றுள் எலிகளை உடனே கொல்லும் நச்சு மருந்துகள் (எ.கா: துத்தநாக பாஸ்பைடு), இரத்தத்தை உறையவிடாமல் உடன் கொல்லும் நஞ்சு மருந்துகள் (எ.கா: ப்ரோமோடையலான்) மற்றும் புகை வழி எலிக்கொல்லிகள் (எ.கா: அலுமினியம் பாஸ்பைடு) ஆகியவை மிக முக்கியமானவை.
ப்ரோமோடையலான் மருந்தின் சிறப்புகள்
- இந்த மருந்திற்கு “பொறிக் கூச்சம்” ஏற்படுவதில்லை. இதனால் 2 முதல் 3 முறை கவர்ச்சி உணவை மட்டும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
- ஒரேயொரு முறை நஞ்சை எலிகள் உட்கொண்டாலே எலிகள் இறந்துவிடும். மேலும் திறந்த வெளிகளில் எலிகள் இறந்து விடுவதால் அவற்றினை அப்புறப்படுத்துவது மிகவும் சுலபமானது.
- இவற்றை வீடு மற்றும் வயல்களில் பயன்படுத்தலாம்.
- இது உடனே பயன்படுத்தும் வகையில் தயார் நிலை மருந்தாக (தேங்காய் வில்லை போன்றது) 0.005 சத அளவிலும், கவர்ச்சி உணவுப் பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும் தூள் வடிவில் 0.25 சத அளவிலும் கிடைக்கிறது.
- இதனை ஒரு வலைக்கு 8 கிராம் வீதம் 3 மீட்டர் இடைவெளிக்கு ஒரு கட்டி வீதம் பயன்படுத்தவேண்டும்
புரோமோடையலான், துத்தநாக பாஸ்பைடு கவர்ச்சி விஷ உணவு தயாரிக்கும் முறை
- புரோமோடையலான் விஷ உணவு தயாரிக்க, 250 கிராம் கவர்ச்சி உணவுப் பொருள் (பொரிகருவாடு) + 5 கிராம் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் + 5 கிராம் ப்ரோமோடையலான் 0.25 சதம் ஆகிய மூன்றையும் கைப்படாமல் குச்சி கொண்டு நன்கு கலந்து எலி நடமாட்டம் உள்ள இடங்களில் ஏக்கருக்கு 10 இடங்களில் தேங்காய் ஓடு கொண்டு மூடி வைக்க வேண்டும்.
- துத்தநாக பாஸ்பைடு (சிங்க்பாஸ்பைடு) நச்சு உணவு கலவை வைத்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம். உணவு பொருள் (பொரிகருவாடு) 97 கிராம், சமையல் எண்ணை ஒரு கிராம், சிங்க்பாஸ்பைடு 2 கிராம் ஆகிய மூன்றையும் குச்சி கொண்டு நன்கு கலந்து எலி நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கலாம்.
வயல்களில் கவர்ச்சி விஷ உணவை வைக்கும் முறை
- எலிகளின் வலை மற்றும் அவைகளின் நடமாட்டம் இருக்ககூடிய இடத்தை கண்டறிந்து அந்த இடங்களில் ஒரு இடத்திற்கு 15 முதல் 20 கிராம் என்ற அளவில் விஷம் கலந்த உணவுக்கலவையினை வைக்க வேண்டும்.
- முதல் நாள் வைத்து மீதமிருக்கும் விஷ உணவை எடுத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் புதிதாக கலந்த விஷ உணவினை வைக்க வேண்டும்.
- அருகிலுள்ள வயலிலிருந்து நம் வயலுக்குள் எலி புகுவதை தடுக்க மருந்து கலவையை எலி நடமாடும் இடங்களில் 10 முதல் 15 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும்.
- திறந்த வெளியில் கவர்ச்சி விஷ உணவுப் பொருளை வைப்பது பாதுகாப்பாக இருக்காது. எனவே காகிதத்தில் விஷ உணவினை வைத்து சிறு சிறு பொட்டலங்களாக கட்டி வைக்கலாம்.
எலிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
- வயலுக்கு அருகில் குழந்தைகள், ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற விலங்கினங்கள் அருகில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
- நஞ்சினை கையுறை அணிந்தோ அல்லது மரக்குச்சி கொண்டோ கலக்க வேண்டும்.
- விஷ உணவை தயார் செய்யும் போது, அதை தயாரிப்பவர், சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ, புகை பிடிக்கவோ, மூக்குப்பொடி போடவோ கூடாது.
- வயலில் எஞ்சியிருக்கும் கலவையும், இறந்த எலிகளையும் சேகரித்து ஒன்றாக குழி தோண்டி மண்ணில் புதைத்து விட வேண்டும்.
கட்டுரையாளர்கள்:
1ஜெ. இராம்குமார், 1ப. வேணுதேவன், 1ப. அருண்குமார், 2இரா. மங்கையர்கரசி
1வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புகோட்டை, விருதுநகர் மாவட்டம்
2முதுநிலை ஆராய்ச்சியாளர், மலரியல் மற்றும் நிலஎழிலூட்டும் கலைத்துறை, கோயம்புத்தூர்.