மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்தில் பண்ணை வீடுகள் அமைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டில் நகர்ப்புறங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளை கடந்த 10 ஆண்டுகளாக வேளாண் சுற்றுலாவை (Farm Tour) நோக்கி ஈர்த்து வருகின்றனர், முதலில் மிகச் சிறிய அளவில் துவங்கிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள் தற்போது பெரிய அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்த புதிய சுற்றுலா முயற்சியில் பயணிகளை வெகுவாக ஈர்க்கவும், அவர்களின் பயண அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும், நீண்ட காலம் நினைவில் கொள்ளும் வண்ணம் இரவு நேரங்களில் இங்கு இயற்கையாகவே உள்ள பல லட்சம் மின்மினிப்பூச்சிகள் (Fire flies) பெரிதும் உதவுகிறது. தற்போது விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் வண்ணம் கிராமப்புறங்களில் வீடுகள், விடுதிகள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 பயணிகள் வரை தங்க முடியும்.
இரவு நேர சுற்றுலா அனுபவங்கள்
தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள ராஜ்மாச்சி (Rajmachi) கிராமப்புற பகுதிகளில் வேளாண் சுற்றுலா முயற்சிகள் அதிகமாக மேற்கொள்ளப் படுகிறது. இங்கு மிகவும் பிரபலமான புர்ஷ்வாடி (Purushwadi) கிராமத்தில் இரவு நேரங்களில் லட்சக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் வெளிவந்து ஒரு மிகவும் அழகிய காட்சியாக வெளிநாட்டு மற்றும் நகர்ப்புற உள்நாட்டு பயணிகளை பரவசப்படுத்தும். இரவு நேரத்தில் வானத்தில், வயல் புறங்களில், தோட்டங்களில் கூடும் லட்சக்கணக்கான மின்மினிப் பூச்சிகளை வேறு வேளாண் சுற்றுலாத் தளங்களில் காண முடியாது என்பதே இச்சுற்றுலா தளத்தின் தனிச்சிறப்பாகும். இந்த வேளாண் சுற்றுலாவில் அதிகப்படியாக பாடல்களை ஒளிபரப்பச் செய்வது, புகைப்படங்களை எடுப்பதில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் உண்டு. மேலும் இச்சுற்றுலா வாயிலாக பயணிகள் மலை ஏறி இம்மின்மினிப் பூச்சிகளை சிறந்த முறையில் காணவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதற்கென்ற தனியாக பல வழிகாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண் மின்மினிப் பூச்சிகள், பெண் மின்மினிப் பூச்சிகளை ஈர்க்க வெளியிடும் மஞ்சள் நிறத்திலான திரவம் இம் மின்மினிப் பூச்சிகள் வெளிச்சம் வெளியிடக் காரணம். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய இயற்கை முறையில் உணவு சிறப்பு கட்டணத்தில் வழங்கி வருகிறார்கள். மாநில வனத்துறை வருகை புரியும் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவு வரி (Entry tax) விதித்தும், ஒரு தங்கும் விடுதியை நடத்தியும் அதிகளவு வருமானம் பெற்று வருகிறது. சுமார் 15,000 பயணிகள் வரை வருகை தந்துள்ள இந்த வேளாண் சுற்றுலா தளத்தில் உள்ள இயற்கை சூழல் மற்றும் கோடிக்கணக்கில் உள்ள மின்மினிப் பூச்சிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் இக்கிராம மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் வேளாண் சுற்றுலா மூலமாக தங்களுக்கு கிடைக்கும் அதிகப்படியான வருமானம் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பெரிதும் உதவுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய தனித்துவம் வாய்ந்த சுற்றுலா முயற்சிகள் நமது நாட்டின் பிற வேளாண் சுற்றுலா முயற்சிகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ளது.
கட்டுரையாளர்:
முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com