பசுமைப் புரட்சி என்னும் வார்த்தையை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம், நாம் பசுமையைப் புரட்சி செய்யப்போவதில்லை. உணவு உற்பத்தியில் புரட்சி செய்யப்போகிறோம். இந்தப் பசுமை புரட்சியின் முக்கியச் சாரம்சமே நவீனமயமாக்கல் தான். இன்று எப்படி நாம் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களைச் சென்று சேருமோ சேராதோ என்று விவாதிக்கிறோமோ அதே போலத் தான் அன்று பசுமைப் புரட்சியும், அது அனைத்து விவசாயிகளையும் சென்று சேர்கிறதா என்ற கேள்வி இருந்தது.
இதற்கு முக்கியக் காரணம் – சமூகம். பொதுவாக விவசாயிகளில், பெரும் விவசாயிகள் அதாவது அந்த ஊரில் அதிக நிலங்களை வைத்துக்கொண்டு பல ஆட்களை வைத்துக்கொண்டு விவசாயம் செய்பவர். இவரைத் தவிற அடுத்தடுத்த கட்டங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் இருக்கின்றனர். இவர்கள் இல்லாமல் நிலம் இல்லாத மக்கள் மேலே குறிப்பிட்டவர்களின் நிலங்களுக்கு வேலைப் பார்க்க பணிக்கு செல்கின்றனர்.
பசுமைப் புரட்சியின் நவீனமயமாக்கலின் முக்கியமான இரண்டு டிராக்டரும் ஆழ்துளை கிணறும் தான். பசுமைப் புரட்சியின் மூலம் நாம் உருவாக்கிய விதைகள் அதிக நீர் தேவையுடைய விதைகள். அதனை Thirsty Seeds என்கின்றனர். இத்தகைய சூழலில் அரசு மானியங்கள் கொடுத்தாலும் இந்த டிராக்டரும் ஆழ்துளை கிணறும் சாதாரணச் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கையில் இல்லாமல் போகிறது. ஒரு சிலர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் இந்தப் புதிய மாற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் நிலங்களை விற்கின்றனர். இது சிறு குறு விவசாயிகளின் நிலை. இன்னொரு பக்கம் நவீன இயந்திரங்களின் வருகையால் வேலையாட்களாகப் பணிபுரிந்தவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. நான் மேலே குறிப்பிடும் அனைத்து 1960-70களில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட போது நடைபெற்றவை.
அதேபோலக் கிராமங்களில் சாதிய கட்டமைப்பு வேறு இருந்த காரணத்தால், ஒரு வகையான வரிசைப்பாடு அங்கு இருந்தது. புதிய விதைகள், புதிய உரங்கள், புதிய திட்டங்கள் அனைத்தும் அந்த வரிசையில் தங்களை முன்னர் நிறுத்திக்கொண்ட ஒரு சாராருக்கோ பெரும் நில உரிமையாளருக்கோ தான் சென்று சேர்ந்தது. அங்கிருந்து அது கீழே வருவதற்குள் அந்த விவசாயி நிலத்தை அந்தப் பெரும் நிலக்காரரிடமே கொடுத்துவிட்டு, தன்னுடைய நிலத்திலேயே வேலையாளாகப் பணிபுரிகிறான்.
இது ஒருபுறம் இருக்க, பசுமைப்புரட்சியின் இன்னொரு முக்கிய அம்சம் வேளாண் கடன்கள். விவசாயிகளுக்கு உதவுவதற்காக வந்த இந்தக் கடன்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்று நம் எல்லாருக்கும் தெரியும். ஒரு பக்கம் சரியான உரங்கள் இல்லாமல் விளைச்சல் தவறுவது இன்னொரு பக்கம் கடன் என்று இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் விவசாயிகள் தற்கொலை செய்து இறக்கின்றனர். இந்தத் தகவல்களை எல்லாம் நானே மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பல கட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் இதையே குறிப்பிடுகின்றன. குறிப்பாக NCEUS அறிக்கை (Financial Express 22 டிசம்பர், 2008) இதையே கூறுகிறது.
அமைதியாக இருந்த வேளாண்மையில் இப்படிப் பல ரணங்களை ஏற்படுத்தியதால் பல அறிஞர்கள் பசுமைப் புரட்சியை, சிகப்புப் புரட்சி என்றே வர்ணிக்கின்றனர்.
ரேச்சல் கார்சன் தன்னுடைய மௌன வசந்தம் (Silent Spring) புத்தகத்தின் இறுதி வாக்கியங்களை இப்படி எழுதுகிறார், “மிகவும் ஆபத்தான நவீன மற்றும் பயங்கரக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு நாம் இயங்கும் இந்த அறிவியல் மிகவும் துரதிர்ஷ்டமாகும். நம் அறிவியலை நாம் பூச்சிகளுக்கு எதிராகத் திருப்பியதில் அது பூமிக்கு எதிராக மாறிவிட்டது”.
-தொடரும்…
கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com