Vivasayam | விவசாயம்

தேனீ வளர்ப்பு பகுதி – 11

தேன் மகசூலை அதிகரிப்பதற்கான சில யுக்திகள்

 மிதமான அல்லது சராசரியான தேன் உற்பத்திக்காக தேனீ கூடுகளைக் கையாளுவதற்கான அனைத்து பருவகால மற்றும் இதர மேலாண்மை நடைமுறைகளைப் பற்றிய பல வழிமுறைகள் வெவ்வேறு அத்தியாயங்களின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வணிக ரீதியில் தேனீ வளர்ப்பவர்கள் மிக அதிக மகசூலைப் பெறுவதற்கான சில கூடுதல் தகவல்களை இந்தப் பகுதியில் பார்க்க உள்ளோம்.

  1. செயற்கை ராணி விலக்கு சட்டங்களைப் பயன்படுத்துதல்
  2. நல்ல தரமான அடைகளைப் பயன்படுத்துதல்
  3. தேனீ இழப்புகளைத் தடுத்தல்
  4. தரமான உணவு மற்றும் அதன் மேலாண்மை
  5. விஞ்ஞான ரீதியில் புலம்பெயர் தேனீ வளர்ப்பு முறையை பின்பற்றுதல்
  6. செயற்கை ராணி விலக்கு சட்டங்களைப் பயன்பாடு:

தரமான தேனைப் பெற, தேன் அறையில் ராணி முட்டை இடுவதைத் தடுக்க செயற்கை ராணி விலக்கு சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேன் ஓட்ட காலத்தில் அடைகாக்கும் அறைக்கும் தேன் அறைக்கும் இடையில் இதனை வைப்பதன் மூலம் ராணி நடமாட்டம் அடைகாக்கும் அறையோடு நிறுத்தப்படுகிறது. மேலும் இளம்புழுவின் கலப்படமற்ற சுத்தமான  தேன் பெறப்படுகிறது.

  1. நல்ல தரமான அடைகளின் பயன்பாடு:

அடைகளை தொடர்ந்து வளர்ப்பிற்கு பயன்படுத்துவதால் செல் அளவு குறைகிறது; மேலும் பழைய மற்றும் அடர் நிற அடைகளில் சேமிக்கப்படும் தேன் அடர்  கருமையாகிறது. 3-4 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அடைகளை அப்புறப்படுத்த வேண்டும். தேன் ஓட்ட காலம் அடைகளை வளர்ப்பதற்கான சிறந்த நேரம். பழைய அடைகளில் ராணிகள் கூட முட்டையிடுவதை தவிர்க்கிறது.

  1. தேனீ இழப்பைத் தடுத்தல்:

பயிர்களில் கண்மூடித்தனமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் ஏராளமான தேனீக்கள் இறக்கின்றன. பின்வரும் காரணங்களால் தேனீக்கள் பாதிக்கப்படுகிறது:

  • பூக்கும் காலத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும்போது
  • பூச்சிக்கொல்லிகளை அருகிலுள்ள பயிர்கள் அல்லது பூக்கும் தருவாயில் உள்ள களைகளில் செலுத்துவதன் மூலம்.
  • பூச்சிக்கொல்லி துகள்கள் தேனீக்கள் சேகரிக்கும் மகரந்தம் அல்லது தேனுடன் சேர்ந்து கூட்டிற்குள் செல்கிறது. மேலும் அவை இளம்புழுக்களுக்கு உணவாக புகட்டப்படுவதால் அவை கொல்லப்படுகின்றன.
  • இறுதியில் மகரந்தத்துடன் பின்னங்கால்களில் நிரம்பியுள்ளன. பூச்சிக் கொல்லிகளில் குறிப்பாக பென்கேப்-எம் மற்றும் செவின் ஆபத்தானவை, ஏனெனில் அவை மகரந்தத்துடன் சேமிக்கப்பட்டு அடுத்த பருவத்தில் புதிதாக வெளிவந்த தொழிலாளர் தேனீக்களைக் கொல்லக்கூடும்.
  • பூச்சிக்கொல்லிக் கலந்த தண்ணீரை தேனீக்கள் குடிப்பது அல்லது தொடுவது.

தேனீ விஷத்தின் அறிகுறிகள்

  • அதிக தேனீக்களின் இறப்பு
  • தேனீக்கள் வயல் மற்றும் கூட்டிற்க்கிடையே இறத்தல்
  • தேனீக்களில் முடக்குவாதம் மற்றும் தளர்வு
  • அடிவயிறு விரிவடைந்தது, நாக்கு நீட்டப்பட்டிருப்பது
  • தேனீக்கள் அதிகமாக எரிச்சலடைந்து பெரிதும் கொட்டுவது
  • ராணி முட்டை இடுவதை நிறுத்தலாம் அல்லது ஒழுங்கற்ற முறையில் இடலாம்
  1. தரமான உணவு மற்றும் அதன் மேலாண்மை

தேனீ உணவு மேலாண்மை என்பது தேனீக்களுக்கான உணவினை பெரிய அளவிலான தோட்டங்களில் பயிர் செய்வதாகும். ஆனால் தேனீக்களுக்காக மட்டுமே பயிரிடுவது தேனீ வளர்ப்பவருக்கு சிறிது பணச்செலவை ஏற்படுத்தும். இருப்பினும், தேனீ தீவனம் மற்ற பல பயன்பாடுகளைக் கொண்ட தோட்டத்தை வெவ்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக கழிவு நிலங்கள், சாலையோர தோட்டங்கள் மற்றும் சமூக வனங்கள். பெரிய அளவிலான தோட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேனீ உணவு பற்றிய சில விரும்பிய குணங்கள் இருக்க வேண்டும்:

  • நீண்ட பூக்கும் காலம்
  • அதிக அடர்த்தியான பூக்கள்
  • அதிக சர்க்கரை செறிவு கொண்ட நல்ல தேன் தரம்.

தேனீ தோட்டமானது செடியின் பூக்கும் கால அடிப்படையில் தேனீ காலத்திற்க்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். வெவ்வேறு கால பூக்களைக் கொண்ட வெவ்வேறு தாவரங்களை காலத்திற்க்கேற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும் .

  1. விஞ்ஞான ரீதியில் புலம்பெயர் தேனீ வளர்ப்பு முறையை பின்பற்றுதல்

புலம்பெயர்ந்த தேனீ வளர்ப்பு தேனீ வளர்ப்பவர்களால் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தேன் பாய்ச்சல் மூலங்களை சுரண்டுவதற்காக அல்லது பழத்தோட்டக்காரர்களுக்கு வாடகை அடிப்படையில் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீ கூடுகளை வழங்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதாகும். ஒரு பூக்கும் காலத்திற்கு  ஒரு பெட்டிக்கு சுமார் ரூ .600-700  வரை வசூலிக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்த தேனீ வளர்ப்பின் நன்மைகள்

  • தேனீ வளர்ப்பவர்களின் வருமானம் நிலையான தேனீ வளர்ப்பைப் பயன்படுத்துபவர்களை விட மூன்று மடங்கு அதிகரிக்கிறது.
    • இடம்பெயர்ந்த தேனீ வளர்ப்பின் காரணமாக இயற்கை வளங்களான தேன் மற்றும் மகரந்தம் வீணடிக்காமல் பயன்படுத்தப்படுகின்றன.
    • புலம்பெயர்ந்த தேனீ வளர்ப்பு அப்பகுதியில் உள்ள பல்வேறு காட்டு மற்றும் பயிரிடப்பட்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.
    • கோடை காலத்தில் தேனீக்கு உணவளிப்பதில் ஆகும் செலவு சேமிக்கப்படுகிறது.

    கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Exit mobile version