முன்னுரை
வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்யப்படும் வணிக மலர்களில் சம்பங்கி முக்கியமான மலர்ப்பயிராகும். இம்மலர்கள் கவர்ச்சியான வெண்மை மற்றும் வண்ண நிறங்களாலும் மெல்லிய நறுமணத்துடனும், கொய்மலர் மற்றும் உதிரி மலராகவும், நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் தோட்டங்களில் அழகுக்காக தொட்டிகளிலும், படுக்கைகளிலும், வரப்புகளிலும் வளர்க்கப்படுகின்றன. வட மாநிலங்களில் இவை பெரும்பாலும் கொய் மலருக்காகவும், தென்னிந்தியாவில் உதிரி மலருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றது. இதன் மலர்கள் மென்மையாக இருப்பினும் மலரை சுற்றிலும் மெழுகு போன்ற பூச்சு இருப்பதால் நீண்ட காலம் வாடாமலும் புதிய பொலிவுடனும் தொலை தூர சந்தைகளுக்கு எடுத்து செல்ல ஏதுவாகிறது. சம்பங்கியில் ஓரடுக்கு மலர், மூன்றடுக்கு மலர் மற்றும் பல அடுக்கு மலர் என மூன்று வகைகள் உள்ளன. ஓரடுக்கு மலர்கள் பெரும்பாலும் மாலைக்காகவும், திருமண அலங்காரங்களிலும், மலர் செண்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பல அடுக்கு மலர் வகைகள் பூச்சாடிகள், பூக்கூடை மற்றும் பூ கிண்ணம் போன்றவற்றில் வைக்கப்பட்டு அறையில் மேஜைகளை அலங்கரிக்கவும் பூங்கொத்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. தமிழ்நாட்டில் கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் வணிக ரீதியில் பயிர் செய்யப்படுகிறது.
இரகங்கள்
ஓரடுக்கு இரகங்கள்: மெக்ஸிகன் ஒற்றை, கல்கத்தா ஒற்றை, ப்ஹுலே ரஜனி, ப்ரஜிவால், ஷ்ரிங்கார் மற்றும் ரஜத் ரேகா
ஈரடுக்கு ரகம் : வைபவ்
பல அடுக்கு ரகங்கள்: சுவர்ண ரேகா, ஹைதெராபாத் டபுள் மற்றும் சுவாசினி.
மண் மற்றும் தட்பவெப்பநிலை
சம்பங்கியை எல்லா வகை மண்ணிலும் பயிர் செய்யலாம். எனினும் மணல் கலந்த வண்டல் மண் இதன் சாகுபடிக்கு மிகவும் உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். மண்ணில் நல்ல காற்றோட்டமும் வடிகால் வசதியும் இருக்க வேண்டும். செடியின் வேர்ப்பகுதியில் நீர் தேங்கக்கூடாது. இதற்கு நல்ல சூரிய வெளிச்சம் தேவை. மிக குறைந்த வெப்பநிலையும், பனியும், செடியையும் மலர் உற்பத்தியையும் பாதிக்கும்.
இனப்பெருக்கம்
நடுவதற்கு ஒரே அளவில் உள்ள 5 முதல் 10 கிராம் எடையுள்ள கிழங்குகளை தேர்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். கிழங்குகளை முந்தய பயிரின் மலர் அறுவடை முடிந்ததும், செடிகளில் உள்ள இலைகள் காய ஆரம்பித்தவுடன் தோண்டி எடுத்து கிழங்கில் ஒட்டி இருக்கும் மண் மற்றும் வேர் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து நிழலில் ஒன்று அல்லது இரண்டு மாதம் வரை உலர்த்தி பின்னர் நட வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை ஆழமாக உழுது பக்குவபடுத்த வேண்டும். கடைசி உழவின் போது நன்கு மக்கிய தொழுவுரம் அல்லது எருவினை ஒரு எக்டருக்கு 25 டன் என்றே அளவில் இட வேண்டும். பின்னர் 45 செ. மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
விதைக்கிழங்கு நேர்த்தி
விதைக் கிழங்குகளை வளர்ச்சி ஊக்கிகளில் நனைத்து நடுவதால் செடிகளில் 15-20 நாட்கள் முன்னதாக பூக்கள் மலர்வதாகவும், மலர்களின் எண்ணிக்கை மற்றும் மகசூலும் அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதற்காக ஜிபெர்லிக் அமிலம் 1000 பி.பி.எம் அல்லது சைகோசெல் 200 பி.பி.எம் கொண்ட வளர்ச்சி ஊக்கிகளில் கிழங்குகளை ஒரு மணிநேரம் ஊரவைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்தல்
ஜூன் முதல் ஜூலை வரையிலான பருவம் சம்பங்கி சாகுபடிக்கு மிகவும் உகந்த பருவம் ஆகும். மண்ணில் மிதமான ஈரப்பசை இருக்கும் போது பார்களின் ஒரு பக்கத்தில் 30 செ. மீ. இடைவெளியில் சுமார் 2.5 செ. மீ. ஆழத்தில் கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். ஒரு எக்டர் நடவு செய்ய 2,50,000 கிழங்குகள் தேவைப்படும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
கிழங்கு நடும் போது அடியுரமாக எக்டருக்கு 25 டன் தொழுவுரத்துடன் 55 கிலோ யூரியா, 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 100 கிலோ மியுரியேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்களை இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் மேலுரமாக 55 கிலோ யூரியாவை இரண்டு மாதத்திற்கு பின் ஒருமுறையும் அதன் பின் ஓவ்வொரு மூன்று மாத இடைவெளியிலும் கொடுக்க வேண்டும். உரங்களை வேர்களின் பக்கவாட்டில் போட்டு கலந்துவிட்டு உடனடியாக நீர்பாய்ச்ச வேண்டும்.
நீர் மேலாண்மை
கோடையில் வாரம் ஒருமுறை நீர் பாசனமும், குளிர் காலங்களில் 10-15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனமும் கொடுத்தால் போதுமானது. மிதமான ஈரத்தில் கிழங்குகளை நடவு செய்த பின் கிழங்குகள் முளைக்கும் வரை நீர்பாய்ச்சுதல் கூடாது.
களை நிர்வாகம்
நிலத்தில் தேவைக்கேற்ப களைகளை அகற்றி வயலை சுத்தமாக வைக்க வேண்டும். சராசரியாக மாதம் ஒரு முறையாவது களை எடுக்க வேண்டும். நடும் முன்னர் அட்ரஸின் என்னும் களை கொல்லியை எக்டருக்கு 3 கிலோ என்ற அளவில் பயன்படுத்தியும் களைகளை கட்டுப்படுத்தலாம்.
வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்
ஜிப்ரலிக் அமிலம் என்னும் வளர்ச்சி ஊக்கியை 1000 பி.பி.எம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் பூங்கொத்துகளின் நீளத்தையும் மலர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.
அறுவடை மற்றும் மகசூல்
- வாசனை எண்ணெய் தயாரிக்கவும் உதிரிப் பூக்களாகப் பயன்படுத்தவும் மலர்களை அதிகாலையில் சூரிய வெளிச்சம் வரும் முன்னர் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த உடனே வாசனை எண்ணையை பிரித்து எடுக்க வேண்டும்.
- கொய்மலராக பயன்படுத்த பூங்கொத்துகளை கொத்தின் அடி பாகத்திலுள்ள இரு மலர்கள் விரிய ஆரம்பித்தவுடன் வெட்டி எடுக்க வேண்டும்.
- சம்பங்கி மலரின் உற்பத்தி மண்ணின் வகை, காலநிலை, நடவுக்கு பயன்படுத்தப்படும் கிழங்குகள் மற்றும் சாகுபடி முறைகளை பொறுத்து வேறுபடும். முதல் வருடம் எக்டருக்கு 12-14 டன், இரண்டம் வருடம் 14-16 டன், மூன்றாம் வருடம் 4-6 டன் உதிரி பூக்கள் மகசூலாகக் கிடைக்கும்.
கட்டுரையாளர்கள்:
- முனைவர் கா.கயல்விழி, உதவி பயிற்றுநர் (தோட்டக்கலை), வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி. மின்னஞ்சல் : kkayal.flori@gmail.com
- முனைவர் அ. சங்கரி. இணைப் பேராசிரியர் (தோட்டக்கலை), காய்கறிகள் துறை, தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்பத்தூர்.