மண் என்பது பல்லுயிரின் அடிப்படை. ஆற்றல் உருவாகும் இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஒரு காட்டு அமைப்பில் மான், புலி, சிங்கம் இருக்கிறதோ, ஒரு நீர் அமைப்பில் மீன்கள், ஆமைகள் எல்லாம் இருக்கிறதோ, அதே போல மண் என்பதும் பல உயிர்களைத் தாங்கிய அமைப்பு. நம்முடைய கண்ணுக்கு வெறும் கரடுமுரடான கல்லும் பாறையுமாகத் தெரிந்தாலும் மண் ஒரு வீடு. இந்த வீட்டில் பாக்டீரியா, பூஞ்சைகள், பாசிகள், ஆக்டினோமைசீட்கள் என்ற பெரிய கூட்டுக் குடும்பம் இருக்கிறது. இதில் பல உயிரினங்கள் தாவரத்தின் வேர்களுடன் இணைந்து தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது.
இந்த கதை இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஆரம்பிக்கிறது. உலகப்போரின் போது போரின் தேவைக்காக வெடிபொருள் தயாரிக்கும் பல நிறுவனங்கள் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளின் உருவாக்கப்பட்டன. ஆனால் போர் முடிந்த பின்னர் இந்த தொழிற்சாலைகளை மூட வேண்டிய கட்டாயம் வந்தது. இந்தக் காலத்தில் தான் ஜெர்மனிய ஆராய்ச்சியாளர் லீபிக் (Liebig) மிச்சமான வெடி பொருள்களில் அதிக அளவில் நைட்ரஜன் சத்து உள்ளது என்றும் அதைப் பயிர்களுக்குக் கொடுப்பதின் மூலம் விளைச்சல் அதிகரிக்க முடியும் என்ற நூறு வருடங்களுக்கு முன் நடத்திய ஆய்வுகள் பிரபலமாகிறது. மூடும் நிலைக்கு சென்ற வெடிபொருள் தொழிற்சாலைகள் மீண்டும் உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக இயங்க ஆரம்பிக்கிறது. அதன்பின்னர் தான் ‘NPK Mentality’ வந்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்தியாவில் முதலில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட போது ரசாயன உரங்கள் இயற்கை உரங்களோடு சிறிய அளவில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவு தான் எடுக்கப்பட்டது. ஆனால் பயிரின் விளைச்சலுக்கு இன்னும் அதிகம் ரசாயான உரங்கள் தேவை என்பதால் அடுத்த ஐந்தாண்டு திட்டத்திலேயே ராசாயன உரங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டது. இதை ‘Seed-Fertilizer package’ என்கின்றனர். அதாவது விதையுடன் சேர்த்தே அந்த விவசாயிக்கு உரங்களைச் சேர்த்து கொடுக்கப்பட்டு விடும். பயிர் விளைச்சலுக்காகக் கட்டாயமாக்கப்பட்ட ரசாயன உரங்கள் நாளடைவில் வேளாண்மையின் ஒரு அங்கமாக ஆகிறது.
சில புள்ளி விவரங்களை வைத்து இதைப் பார்க்கலாம். பசுமைப் புரட்சிக்கு முன்னர் கோதுமைக்கு அளிக்கப்பட்டு வந்த NPK அளவு 45:23:23, பசுமைப் புரட்சிக்குப் பின் இந்த அளவு 120:60:30 என்று அதிகரிக்கிறது. இதே நெற்பயிரில் முன்னர் 45:23:23 என்று இருந்தது 120:60:60 என்று அதிகரிக்கிறது. சரி, இந்த அதிகரிப்புகள் அப்படி என்ன செய்து விடப்போகிறது?
முதலில் இது மண்ணின் கார்பன்-நைட்ரஜன் விகிதத்தைப் பெருமளவு பாதிக்கிறது. இந்தப் பாதிப்பு பயிர்களைப் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் வலிவடையச் செய்கிறது. இரண்டாவது நுண்ணூட்ட உரங்கள் இந்த NPKவில் வருவதில்லை. பயிருக்கு தேவையான Zinc, Iron, Copper, Manganese போன்ற சத்துக்கள் அந்த மண்ணில் இல்லாமல் போகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஐம்பது சதவீத நிலங்களில் Zinc சத்து குறைப்பாடு கண்டறியப்பட்டு அதற்காக ஜின்க் சல்பேட் கொடுக்கப்படுகிறது. அதாவது பசுமைப் புரட்சிக்கு முன் 1.98 டன்களாக இருந்த ஜின்க் சல்பேட் பயன்பாடு, அதன்பின் 15,000 டன்களாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் நெல் விளையும் இடங்களில் இரும்பு சத்து குறைவாகவே இருக்கிறது. மேலும் இந்த ரசாயன உரங்கள் மண்ணின் pH அளவுகளை மாற்றுவதின் மூலம் மண்ணில் வளரக்கூடிய பயனுள்ள நுண்ணுயிரிகள் அழிகின்றது.
விவசாயிகளுக்கு இந்த ரசாயன உரங்களின் அளவும் பயன்பாடும் புதிது. அதை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு சரியாகச் சென்று சேராததும், சில வியாபார பேராசைகளுக்காகத் தவறான உரங்கள் விவசாயிகள் தலையில் கட்டப்பட்டதே இந்த நிலைக்குக் காரணம்.
நாம் பிடிக்கப்போவது புலி வால் என்று தெரிந்தும் அதைச் சரியாகப் பிடிக்காதது நம்முடைய தவறுதான். இனிமேல் அரசு ரசாயான உரங்களின் பயன்பாட்டை முறைப்படுத்துவதிலும், இயற்கை உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் தான் நம் வருங்கால வேளாண்மை இருக்கிறது.
பசுமை புரட்சியினால் ஏற்பட்ட சில சமூகக் கட்டமைப்பின் ஏற்ற தாழ்வுகளைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.
-தொடரும்…
கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com