Skip to content

பனை மரப் பயிர் பாதுகாப்பு

தென்னையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் பனையையும் தாக்குகின்றன. பனை மெதுவாக வளரும் தன்மையைப் பெற்றுள்ளதால் தெளிக்கும் வேதிப்பொருள் நீர்மத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். பனை வளருகின்ற பொழுது தேவைப்படும் கரைசலின் அளவு அதிகரிக்கும் என்பதால் பயிர் பாதுகாப்புக்கு ஆகும் செலவும் கூடும். பனையின் வயதைப் பொருத்து பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதற்கான செலவு மாறுபடும்.

பனையைத் தாக்கும் பூச்சிகள்

விதை முளைத்தலின் போது காண்டாமிருக வண்டின் இளம்புழுக்கள் மற்றும் கரையான்களால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கீழே விழும் பனைகளை உண்ணும் பூச்சிகளாக காண்டாமிருக வண்டுகளும் சிவப்புக் கூன் வண்டுகளும் உள்ளன. இப்பூச்சிகள் படிப்படியாக வளர்நிலையில் உள்ள பனைகளையும் தாக்கி அழிக்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது பனையோலைகளை உண்டு அவற்றிலேயே முட்டைகளை இடுகின்றன. கீழே விழுந்த பனைகளை அழுக விடாமல் தடுத்து உடனே அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் இருந்து காண்டா மிருக வண்டுகள் (ஒரைசிடஸ் ரைனோசரஸ்) மற்றும் இலை உண்ணும் கம்பளிப் புழுக்கள் (ஒபிசினா அரினோசெல்லா) ஆகிய பூச்சியினங்கள் பனையைத் தாக்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காண்டாமிருக வண்டுகளின் தாக்குதல் 5.0-16.5 விழுக்காடாகவும் ஓலை தின்னும் கம்பளிப் புழுக்களின் தாக்குதல் 3.3-27.1 விழுக்காடாகவும் காணப்பட்டது.

காண்டாமிருக வண்டு (ஒரைசிடஸ் ரைனோசரஸ்)

ஓலையின் அடிப்புறம், நுனி ஓலை, இளம் ஓலை மற்றும் ஓலைத் தண்டு போன்றவற்றை முதிர்ந்த வண்டுகள் தாக்கும். பாளை மற்றும் மஞ்சரிகளும் பாதிக்கப்படுகின்றன. ஓலை அச்சுக்கும் தண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் 250 கிராம் மாலத்தியான் 4 விழுக்காடு தூள் மற்றும் மணல் ஆகியவற்றை சம அளவில் கலந்து பூச வேண்டும். முதிர்ந்த வண்டுகளை கொக்கி போட்டு இழுத்தும் கட்டுப்படுத்தலாம். இளம் பனைகளில் ஓலை அச்சுகளில் மூன்று பாசிமணி உருண்டைகளை 45 நாட்களுக்கு ஒரு முறை வைத்தும் கட்டுப்படுத்தலாம். ஆமணக்கு பிண்ணாக்கினை பானைகளில் ஊற வைத்து ஆங்காங்கு வைப்பதன் மூலம் முதிர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். பனை ஓலைத் தண்டுகளை இரண்டாகப் பிளந்து அவற்றை பதநீரில் நனைத்து நச்சு உணவை வைப்பதன் மூலம் வண்டுகளை அழிக்கலாம். பொதுவாக பனைகளை சுத்தம் செய்யும்பொழுது பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டும்.

சிவப்புக் கூன் வண்டு (ரைன்கோபோரஸ் பெர்ருஜீனஸ்)

இளம் புழுக்கள் தண்டின் மெல்லிய பகுதியையும் ஓலைத் தண்டின் அடிப்பகுதியையும் உண்பதால் பனைகள் காய்ந்துவிடுகின்றன. கூன் வண்டு தாக்கிய பகுதியில் இருந்து பசை போன்ற நீர்மம் வெளியாகும். ஓலை மற்றும் ஓலை காம்படிகளை அகற்றும் பொழுது தண்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய மற்றும் பாதிக்கப்பட்ட பனைகளை அகற்றி எரிப்பதன் மூலம் வண்டுகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம். தண்டில் காயங்கள் ஏதேனும் இருப்பின் மாலத்தியான் 50 விழுக்காடு நனையும் தூள் மற்றும் தார் ஆகியவற்றை கலந்து பூச வேண்டும். பதநீர் மற்றும் பழ விளைச்சல் இல்லாத காலங்களில் 10 மிலி மோனோ குரோட்டாபாஸ் பூச்சிக் கொல்லியை 30 மிலி நீரில் கலந்து பாலித்தீன் பைகளில் நிரப்பி வேர்களை அதனுள் செலுத்தி வேர்வழியே அளிக்கலாம். நுகர்வோர் நலம் கருதி பதநீர் எடுப்பதற்கு 45 நாட்களுக்கு முன்பே பூச்சிக் கொல்லியை வேர் வழி செலுத்துவதை நிறுத்தி விட வேண்டும்.

கருந்தலை கம்பளிப் புழு (ஒபிசினா அரினோசெல்லா)

இளம் பனைகளை கருந்தலை கம்பளிப்புழு வெகுவாகப் பாதிக்கும் புழுக்கள் ஓலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் ஓலை நரம்பு மட்டுமே மிஞ்சும். ஓலைகளின் அடிப்புறத்தில் அறைகளை அமைத்து அவற்றில் புழுக்கள் வாழும். கடுமையான பாதிப்புகளுக்கு ஆளான ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்தி விட வேண்டும். புழு ஒட்டுண்ணிகளையும் (பிராகோனிடுகள், பெத்திலிடுகள்) கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளையும் (யூலோபிடுகள்) இரை விழுங்கிகளையும் உரிய கால இடைவெளிகளில் விடுவதன் மூலம் இத்தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். புழு ஒட்டுண்ணிகளான பிராகோனிடுகள் மற்றும் பெதிலிடுகள் ஆகியவற்றை பனையொன்றுக்கு 5 என்ற வீதத்திலும் கூட்டுப்புழு ஓட்டுண்ணியான யூலோபிடு ஒட்டுண்ணியை பனையொன்றுக்கு 10 என்ற வீதத்திலும் அளிக்க வேண்டும். பூச்சி தாக்குதலின் தீவிரத்தைப் பொருத்து 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று முறைகள் ஒட்டுண்ணிகளை விடலாம். இளம் நாற்றுகளில் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் அல்லது மோனோகுரோட்டாபாஸ் பூச்சிக்கொல்லியை லிட்டருக்கு 1 மிலி என்னும் வீதத்தில் கலந்த தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: கா. அருண்குமார், ஆராய்ச்சி மாணவர் (வாசனை மற்றும் மலை தோட்டப்பயிர்கள் துறை), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை. மின்னஞ்சல்: arunkru9791402135@gmail.com

Leave a Reply

editor news

editor news