Vivasayam | விவசாயம்

தேனீ வளர்ப்பு பகுதி – 10

தேனீக்களுக்கு செயற்கை உணவளித்தல்

ராபிங்

ராபிங் (robbing) என்பது தமிழில் ‘திருட்டு’ என்பதை குறிக்கும் ஆங்கில சொல்லாகும். ஒரு தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் மற்ற கூடுகளிலிருந்து தேன் மற்றும் மகரந்த உணவினை  திருடுகிறது.  இதற்கான காரணங்கள்?

  • தேன் கூட்டினை மேற்பார்வையிடும் போது அதிக நேரம் திறந்து வைப்பது.
  • சர்க்கரை கரைசலை திறந்து வைப்பது அல்லது தேன் கூடுகளுக்கு அருகில் சிந்துவது.
  • பலவீனமான தேன் கூடுகளை கவனக்குறைவாக கையாள்வது.
  • வயலில் மகரந்தம் மற்றும் தேனின் இருப்பு குறைவாக இருத்தல் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.

திருட்டில் ஈடுபடும் தேனீக்கள் பொதுவாக மற்ற கூட்டிலுள்ள காவல் தேனீக்களின் தொடர்ச்சியான தாக்குதலால் மென்மையான, பளபளப்பான மற்றும் அடர் நிறத்தில் காணப்படுகின்றன. இத்தகைய தேனீக்கள் பொதுவாக கூட்டின் நுழைவாயிலில் தைரியமாக நுழைவதில்லை. மாறாக  கூட்டிலுள்ள விரிசல் மற்றும் பிளவுகள் மூலம் கூட்டினுள் நுழைய முயற்சிக்கின்றன..

ராபிங் தடுப்பு:

தேனீ வளர்ப்பவர் கவனமுடன் இருப்பாராயின் ராபிங் ஒரு பிரச்சினை அல்ல. மேற்கூறிய திருடுவதற்கான காரணங்களை சரி செய்வதன் மூலம் தேன் கூடு கொள்ளையடிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். இருந்தும் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்:

– திருடப்பட்ட தேன் கூட்டின் நுழைவாயிலுக்கு முன்னால் ஈரமான புல்லை வைக்கவும்.

– கார்போலிக் அமிலம் அல்லது மண்ணெண்ணெய் போன்ற பூச்சி விரட்டிகளை கூட்டின் நுழைவாயிலில் தெளிக்கலாம்.

– மிக மோசமாக திருடப்பட்ட தேன் கூடுகளின் நுழைவாயிலைக் குறைத்து, கூட்டின் நுழைவாயிலில் பச்சை புல் வைத்தப்பின், தேனீ வளர்ப்பில் புதிய தளத்திற்கு மாற்றப்படலாம். தேன் கூட்டின் நுழைவாயிலைக் குறைத்து, மற்ற அனைத்து விரிசல்களையும் பிளவுகளையும் மூடலாம்.

– தேன் பிரித்தெடுத்த பிறகு தேன் அடைகளை மூடி வைத்துப், பின்னர் மாலையில் தேனீக்களின் நடமாட்டம் அடங்கிய பிறகு மீண்டும் கூடுகளுக்கு வழங்கலாம்.

செயற்கை / துணை உணவு (Artificial diet)

தேன் கூட்டினுள் மிக குறைவான உணவு இருப்பு இருக்கும்போது தேனீக்களுக்கு செயற்கை உணவு வழங்கப்படுகிறது. தேன் கூடுகளுக்கு இயற்கை உணவு கிடைக்காத காலங்களில் சர்க்கரை பாகு மற்றும் மகரந்தம் / செயற்கை புரதம் வழங்குவது செயற்கை / துணை உணவு என்று அழைக்கப்படுகிறது.

தேனீக்களுக்கு எப்போது செயற்கை உணவு தேவை?

  • குளிர்காலத்தில் அல்லது இலையுதிர்காலத்திற்குப் பிறகு மற்றும் தேன் கூடுகளில் போதுமான உணவு இல்லாதபோது.
  • தேன் கூட்டின் அடைகாக்கும் திறனை தூண்டுவதற்கு.
  • புதிய தேன் கூடுகள் அல்லது புதிய ராணிகள் உருவாக்கப்படும் போது.
  • வறட்சி காலம், தேன் கூடுகள் மிகவும் வலுவற்று இருக்கும்போது மற்றும் தேன் இருப்பு இல்லாத போது.

மகரந்தம் / செயற்கை புரதம்

தேனைத் தவிர, தேனீக்களுக்கு அவற்றின் புரதத் தேவைகளையும், அடைகாக்கும் வாய்ப்பையும் அதிகபடுத்த மகரந்தம் தேவை. மகரந்தம் இருப்பு போதுமானதாக இல்லாவிட்டால், புதிய மகரந்தம் கிடைக்கவில்லை என்றால், தேன் கூடுகளுக்கு மகரந்தம் / செயற்கை புரதம் கொடுக்கலாம். இது 2 வெவ்வேறு முறையில் வெவ்வேறு உட்பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது.

முறை 1 : செய்முறை (Pollen substitute)

  • இது இயற்கை மகரந்தம் சேர்க்கப்படாத உணவு.
  • கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவு (Defatted soy flour) 150கிராம், ஈஸ்ட் 50கிராம் மற்றும் 400 மில்லி சர்க்கரை பாகினை (1:1) சூடான நீரில் கலந்து இரவு முழுவதும் வைக்கவும். இப்பொழுது சர்க்கரை நன்கு ஊடுருவி தேனீயின் உண்ணும் திறனை அதிகரிக்கிறது.
  • இந்த உணவினை 400 கிராம் எடுத்து அதனை சட்டத்தில் நிரப்பி அல்லது வெண்ணெய் காகிதத்தில் போர்த்தி, வெண்ணெய் காகிதத்தில் சில துளைகளை இட்டபின், சட்டத்தின் மேல் வைப்பதன் மூலம் உணவளிக்கலாம்.

முறை 2 : மகரந்த துணை உணவு (Pollen supplement)

மகரந்த சப்ளிமெண்ட் மற்ற பொருட்களுடன் கூடுதலாக மகரந்தத்தையும் கொண்டுள்ளது. இது தேனீக்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மகரந்த துணை உணவு தயாரிக்க கொழுப்பு இல்லாத சோயா மாவு  150கிராம், சர்க்கரை பாகு 400மிலி மற்றும் மகரந்தத்தூள் 100கிராம் சேர்த்து தேனீக்களுக்கு கொடுக்ககலாம்.

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Exit mobile version