நமது அன்றாட வாழ்வில் காய்கறிகள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அவை நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை நமக்கு அளிக்கின்றன. இந்தியாவானது பலவகையான நிலத்தோற்றம் மற்றும் காலநிலையை கொண்டுள்ள ஒரு பல்லுயிர் மண்டலமாக விளங்குகிறது. எனவே பலதரப்பட்ட காய்கறிகள் விளைவதற்கு இந்தியாவில் ஏற்ற கால நிலை நிலவுகிறது.
இந்தியாவானது காய்கறி உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது. மேலும் இந்தியாவானது காய்கறி பயிர்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளின் இடத்தில் உள்ளது.
தேசிய தோட்டக்கலை துறையின் தரவுகளின் படி 2015 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் மொத்த காய்கறி உற்பத்தி ஆனது 169.1மில்லியன் மெட்ரிக் டன்னாக இந்தியாவில் உள்ளது. மேலும் இந்தியாவில் காய்கறி பயிரானது 10.1 மில்லியன் எக்டேர் அளவில் பயிரிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் தக்காளி, வெண்டை மற்றும் கத்திரி பயிரில் வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நச்சுயிரிகள் மேலாண்மை பற்றி காண்போம்.
தக்காளியில் இலைச்சுருட்டு நச்சுயிரி நோய் (Tomato leaf curl virus)
- தக்காளிப் பயிரைத் தாக்க கூடிய மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக இந்த நோயானது கருதப்படுகிறது.
- இந்த நோய் தாக்கப்பட்ட தாவரமானது வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் இலைகளின் அளவானது குறைந்து காணப்படும்.
- நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள் மஞ்சள் நிறத்திலும் சுருண்டும் காணப்படும். இது மிக முக்கியமான அறிகுறியாகும்.
- இந்த நச்சுயிரி நோயானது வெள்ளை ஈக்கள் மூலமாக பரவக்கூடியது.
மேலாண்மை
- இந்த நோயானது ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நோய் தாக்கப்பட்ட செடிகளை நீக்குவதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.
- கோடைகாலங்களில் வெள்ளை ஈக்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும் எனவே கோடை காலங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்நோயிலிருந்து சிறப்பான மேலாண்மை பெறலாம்.
- இதனைக் கட்டுப்படுத்த மெத்தில் டெமட்டான் அல்லது டைமெதோயாட் 500 மில்லியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
தக்காளியில் புள்ளி வாடல் நோய் ( Tomatto spotted wilt virus )
- தக்காளியில் புள்ளி வாடல் நோய் ஆனது அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட தாவரமானது அதிக அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
- இந்த நோய் தாக்கப்பட்ட பயிரானது வாடிய நிலையில் மஞ்சள் நிறத்தில் மாறி காணப்படும். மேலும் பழங்களில் மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும். இந்த புள்ளிகள் ஆனது வளையங்களாக மாறும்.
- சில சமயங்களில் இந்த நோய் தாக்கப்பட்ட இலைகள் ஆனது கீழ்நோக்கி வளைந்து காணப்படும்.
மேலாண்மை
- இந்த நோயானது இலைப்பேன்களின் மூலமாக பரவக்கூடியது. இந்த நோய் தாக்கப்பட்ட செடிகளை நீக்குவதன் மூலமும் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
- இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ பியூரடான் குருணை நடவு செய்த பிறகு இடவேண்டும்.
- மேலும் வீரிய ஒட்டு ரகங்களை பயன்படுத்துவதன் மூலம் நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
வெண்டையில் மஞ்சள் நரம்பு தேமல் நோய் (Bhendi yellow vein clearing virus)
- வெண்டை தாவரத்தை தாக்கக்கூடிய நச்சுயிரி நோய்களில் மஞ்சள் தேமல் நோய் மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இது அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நோயாகும்.
அறிகுறிகள்
மஞ்சள் தேமல் நோய் பாதித்த தாவரமானது வளர்ச்சி குன்றி காணப்படும் . இந்த தாவரத்தின் நரம்புகளில் மஞ்சள் நிற தேம்பல் காணப்படும். இந்த நோய் பாதித்த வெண்டைக்காய் ஆனது விரைவிலேயே முற்றிவிடும். எனவே அதன் மகசூல் மற்றும் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலாண்மை
- இந்த நோயானது வெள்ளை ஈக்களின் மூலம் பரவுகிறது. எனவே அந்த பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோயிலிருந்து தாவரங்களை பாதுகாக்கலாம்.
- இரண்டு மில்லி வேப்ப எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிப்பதன் மூலம் இந்த பூச்சிகளிலிருந்து தாவரங்களை பாதுகாக்கலாம். கோடை காலங்களில் இந்த பூச்சிகளின் பெருக்கம் மிக அதிகமாக இருக்கும் எனவே அந்த காலங்களில் எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது டைமெதோயாட் 500 மில்லி + 500 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
- மேலும் இந்த நோயினை தாங்கி வளரக்கூடிய ரகங்களான பர்பானி கிராந்தி, அர்கா அனாமிகா போன்ற ரகங்களை சாகுபடி செய்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
- மஞ்சள் நிற இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
கத்திரியில் தேம்பல் நோய் (Brinjal mosaic virus)
தேம்பல் நோயானது பொதுவாக அனைத்து வகையான காய்கறி பயிரையும் தாக்கக் கூடிய மிக முக்கியமான நோயாகும்.
அறிகுறிகள்
தேம்பல் நோய் ஏற்பட்ட பயிரானது வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் அந்த இலைகளில் மஞ்சள் நிற திட்டுக்கள் மற்றும் புள்ளிகள் காணப்படும் அவை தாவரம் முழுவதும் பரவி அந்தப் பயிரானது விரைவில் அழிந்துவிடும்.
மேலாண்மை
- இந்த நோயினை பரப்பக்கூடிய மிக முக்கியமான காரணி ஆனது அசுவினிப் பூச்சிகள் ஆகும்.
- இவை ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரத்திற்கு நோயைப் பரப்புகின்றன. மேலும் இந்த நச்சுயிரி ஆனது ஏற்கனவே தாக்கப்பட்ட தாவரத்தின் விதைகளின் மூலமும் பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே தரமான விதைகளை மற்றும் வீரிய விதைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
- நைட்ரஜன் உரங்களை தேவையான அளவு பயன்படுத்துவதன் மூலமும் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். அதிக அளவு நைட்ரஜன் இந்த பூச்சிகளின் பெருக்கத்திற்கு வழி வகுக்கும்.
- பிரதிபலிக்கக்கூடிய பாலிதீன் மூடாக்குகளை பயன்படுத்துவதன் மூலமாகவும் இந்த பூச்சிகளின் தாக்கத்தில் இருந்து பயிர்களைக் காப்பாற்றலாம்.
- மேலும் மீத்தைல் டெமட்டான் போன்ற பூச்சிக்கொல்லிகள் இதற்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன.
கட்டுரையாளர்: மு. கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை மாணவர், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். மின்னஞ்சல்: krishnaagrocin84@gmail.com. தொடர்பு எண்: 8189970321.