கோரை உலகின் மோசமான களைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரை இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது அனைத்து வகையான மண்ணிலும் வளர்கிறது. பயிரிடப்பட்ட வயல்கள் (குறைந்தது 50 வெவ்வேறு பயிர்கள்), சாலையோரங்கள், மேய்ச்சல் நிலங்கள், ஆற்றங்கரைகள், நீர்ப்பாசனத் தடங்கள் மற்றும் இயற்கை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழ்விடங்களில் கோரையைக் காணலாம். இவற்றில் பயிரிடப்பட்ட வயல்களைத் தவிர மற்ற வாழிடங்களில் பல்லினத்தன்மை மற்றும் மற்ற தாவர போட்டிகளால் கோரைக் குறைந்து காணப்படும். கோரையில் பூங்கோரை, வட்டக்கோரை மற்றும் கோரைக்கிழங்கு என பல வகைகள் உண்டு. பூங்கோரை நெல் வயல்களில் அதிகமாக காணப்படும். இவற்றில் பெரும்பாலான இடங்களில் காணப்படும் மற்றும் கட்டுப்படுத்த கடினமான கோரைக்கிழங்கு பற்றி பார்ப்போம்.
வாழ்க்கைச் சுழற்சி
கோரையின் வாழ்க்கைச் சுழற்சி ஒரு கிழங்கின் நுனி மொட்டின் வளர்ச்சியுடன் தொடங்குகிறது. இவை ஒரு சங்கிலித்தொடர் போல மண்ணுக்கடியில் படர்கிறது. ஒரு கிழங்கிலிருந்து மூன்று அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் கிழங்கினை உற்பத்தி செய்கிறது. இதிலிருந்தும் தளிர்கள் வந்து கிளைச் சங்கிலிகள் உருவாகிறது. இவை மண்ணுக்கடியில் ஒரு விரிவான வலைப்பின்னலை உருவாக்குகிறது. இதற்கிடையில் புதிய துளிர்கள் தோன்றிய 3-8 வாரங்களுக்குள் நன்றாக வளர்ந்து பூக்களை உருவாக்குகின்றன. கோரைக்கிழங்கில் உறக்க நிலை (dormancy) மிக முக்கியமான ஒன்ராகும் மற்றும் இது குறைந்தது 7 ஆண்டுகள் நீடிக்கும். மண்ணினை உழும்போது வலையமைப்பு சிதைக்கப்பட்டு, துண்டுத் துண்டாகி தனித்தனியாகிறது. மேலும் இவை வளர்ச்சியையும் தூண்டுகிறது. உழவு உபகரணங்கள், பண்ணைக் கருவிகள் மூலமும் கிழங்குகள் பரவுகிறது. விதை மூலம் பரவுவது பொதுவாக முக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.
ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு
கோரை களைகள் கடினத்தன்மை கொண்டிருப்பதால் மிக விரைவில் இவைகளை நீக்க முடியாது. கோரை மண்டியுள்ள வயலில் இக்களையை மேலும் பரவ விடாமலும், நாள் போக்கில் இதன் வீரியத்தை குறைத்தும் சிறுகச் சிறுக இதன் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு வர வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த முறையில் திட்டம் வகுப்பது சிறந்தது.
- கோடை உழவு செய்வதன் மூலம் கிழங்குகளை மண் மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து சூரிய வெப்பத்தில் காய வைத்தல்
- பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடித்தல் – பாசன நீர் வசதியுள்ள நிலங்களில் சேற்றுழவு செய்து நெல் பயிரிடுவதால் இக்களைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
- பயிர் வரிசையாக உள்ள நிலங்களில் இடை உழவு அடிக்கடி செய்தல்
- பயிருக்கு மேலுரமிடும் போது பயிர் வரிசைக்கு அருகில் சீராக இடுவது நல்லது. இதனால் வரிசைக்கு இடையில் வளரும் கோரைப் புல்லுக்கு உரம் சென்று வீணாகாது.
- அடர்ந்து விரைவான வளர்ச்சியுடைய பயிறு வகைகளை, பயிர் வரிசைகளுக்கிடையே சாகுபடி செய்வதால் கோரை வளர்ச்சியைத் தடுக்கலாம்.
- கோரைக் களையினை களைக்கொல்லி மட்டும் கொண்டு அடியோடு அழித்து விட முடியாது. எனினும் வளர்ச்சியைக் குறைக்கவும், நாளடைவில் அவற்றைக் குறையச் செய்யவும் சில களைக் கொல்லிகள் உள்ளன.
- பயிர் செய்யப்படும் வயல்களில் உள்ள கோரையினையும் பயிரிடப்படாத தரிசு நிலங்களில் உள்ள கோரையினையும் கட்டுப்படுத்த வெவ்வேறு வகையான களைக்கொல்லி மருந்தினை பயன்படுத்துதல் வேண்டும்.
- ஊடுருவிச் செல்லும் களை மருந்தை வளர்ச்சிப் பருவத்தில் தெளிப்பதால் மருந்து இலை வழியாக உட்கிரகிக்கப் பட்டு வளர்ச்சிப் பகுதியான இளங்குருத்து மற்றும் வேரின் நுனிப்பகுதி ஆகியவற்றைத் தாக்கி அழிக்கும்.
- கொத்துக் கலப்பையினை பயன்படுத்துவதன் மூலம் கோரையினை வெகுவாக குறைக்கலாம்.
பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் வளரும் கோரையை கட்டுப்படுத்த தேவையான களைக்கொல்லிகள் மிகவும் குறைவு. அவற்றில் ஹேலோசல்ஃப்யூரான் மீதைல் மிக முக்கியமான ஒன்று. கோரை முழுவதும் ஊடுருவி செயல்படும் திறன், களைகளின் பச்சையத்தினை அழித்து, பழுப்பு நிறமாக மாற்றி, இறுதியாக களையானது காயந்து போகிறது.
பரிந்துரைக்கப்பட்ட பயிர் மற்றும் மருந்து அளவு
கரும்பு: ஹேலோசல்ஃப்யூரான் மீதைல் கொண்ட களைக்கொல்லியை ஏக்கருக்கு 36 கிராம் என்ற அளவில் 150-200 லிட்டர் தண்ணீரில் தெளித்து கோரையைக் கட்டுப்படுத்தலாம். அனைத்து களைகளும் கரும்பு வயலில் இருப்பின் ஏக்கருக்கு 400 கிராம் மெட்ரிபூசன் உடன், இதனை பயன்படுத்தலாம்
மக்காச்சோளம்: விதை நடவு செய்ததில் இருந்து 21 நாட்களுக்கு பிறகு ஹேலோசல்ஃப்யூரான் மீதைல் ஏக்கருக்கு 36 கிராம் என்ற அளவில் பயன்படுதலாம்.
இவ்வாறு களை மருந்தினை தொடர்ந்து தெளிப்பதால் கிழங்குகளை முடிந்தளவு குறைக்கலாம். எனவே ஒருங்கிணைந்த முறைகளை அவ்வப்போது கையாண்டு பிரச்சினைக்குரிய கோரைகளை கட்டுப்படுத்துவது சிறந்தது.
களைக்கொல்லி தெளிக்கும் போது
செய்ய வேண்டியவை
- பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் மற்றும் அளவுகளில் பயன்படுத்த வேண்டும்
- மண்ணில் தகுந்த ஈரப்பதம் முக்கியம்
- ஒரு ஏக்கருக்கு தேவையான மருந்து மற்றும் 150-200 லிட்டர் தண்ணீர்.
- களைக்கொல்லி மட்டும் தனியாக பயன்படுத்தவும்
- 7 நாட்களுக்கு பிறகு கோரை பழுக்க ஆரம்பித்து, நன்கு காய 15 நாட்கள் தேவைப்படும். குறைந்தது 3-5 கிழங்கு வரை பாதிப்பை ஏற்படுத்தும்.
- 5 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். 2-4 இலை நிலையில் தெளிக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
- பயிரிடாத நிலங்களில் தெளிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அடுத்து வைக்கும் அல்லது பின் வரும் பயிர்களைப் பாதிக்கும் அபாயம் இருக்கிறது.
- பூ பூத்த அல்லது முற்றிய கோரைகள் மீது களைக்கொல்லி தெளிப்பதைத் தவிர்க்கவும்.
- கிழங்குகள் உறக்க நிலையிலேயே பலகாலம் இருக்கின்றன. தளிர் விடாத உறக்கத்தில் உள்ள கோரைக்கிழங்கினை பாதிக்காது.
- பரிந்துரைக்கப்பட்ட அளவை விடக் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தெளிக்கக்கூடாது.
கட்டுரையாளர்கள்:
- மு. ஜெயராஜ், உதவிப் பேராசிரியர் (உழவியல்), தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, சகாயத்தோட்டம், அரக்கோணம். மின்னஞ்சல்: jayarajm96@gmail.com
- முனைவர் ஆ. குழந்தைவேல் பிள்ளை, தொழில்நுட்ப வல்லுநர், கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், – திருச்சி. மின்னஞ்சல்: kuzhandhai635@gmail.com