Skip to content

மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள்

கடந்த பல தலைமுறையாக மலர்கள் நமது சமுதாய மற்றும் தனிப்பட்ட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதங்கள், இனங்கள், மொழிகள், பிரதேசங்களைக் கடந்து மக்களைச் சென்றடைவதுடன் மக்களை இணைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்பு, காதல், பக்தியை வெளிப்படுத்த உதவும் மலர்கள் வணிகம் பல தலைமுறையாக நமது நாட்டில் நடைமுறையில் காணப்பட்டாலும், சமீப காலமாக பல புதிய வணிக முயற்சிகள் மலர் வணிகத்தை முறைப்படுத்துவதாகவும், அதில் உள்ள குறைகளைத் தவிர்த்து நுகர்வோரின் தேவைகளை சந்திக்க உதவுவதாகவும் உள்ளது.

சுமார் 200 மில்லியன் வீடுகளில் தினமும் மலர்கள் வாங்கப்படுகிறது. வீடுகளில் பூஜைக்கு தேவைப்படும் பூக்களை, நேரடியாக நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் “ரோஸ் பஜார்’ (Rose Bazaar) என்ற புதிய மலர் வர்த்தக நிறுவனம் துவங்கப்பட்டு, விற்பனை பணிகளை திறம்பட மேற்கொண்டு நுகர்வோரின் தேவை மற்றும் நன்மதிப்பையும் பெற்று வருகிறது.

புதிய ரோஸ் பஜார் நிறுவனத்தின் செயல்பாடுகள்

தற்போது மலர் வணிகத்தில் பல பூங்கொத்துகள், மலர் அலங்காரங்கள், பூ மாலை செய்து நுகர்வோருக்கு சேவை வழங்கும் பல வணிக நிறுவனங்கள் பல்லாண்டு காலமாக செயல்படுகிறது. ஆனால் தினமும் மலர்களை நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப வழங்கும் நிறுவனம் சந்தையில் இல்லை. பூஜைக்கு தேவைப்படும் மலர்களை மணம் குறையாமல் தினந்தோறும் வழங்குவதே இப்புதிய வணிக முயற்சியின் நோக்கம். இந்த புதிய முயற்சி  சந்தா (Subscription) அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. தினமும் பூஜை மற்றும் மலர் அலங்காரங்களுக்கு தேவைப்படும் மலர்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டது, பெட்டிகள் அல்லது பைகள் வைத்து வாடிக்கையாளர்களின் தேவையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நமது சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவது கிடையாது. சுமார் 50 வகையான சந்தா அடிப்படையிலான மலர் பெட்டிகளில் இந்த புதிய மலர் வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மல்லிகை, ரோஜா, தாமரை, சாமந்தி போன்ற மலர்கள் தனியாகவும், நுகர்வோரின் தேவைக்கேற்ப தேவையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்புதிய முயற்சியில் பல மலர் வணிகர்கள், சிறிய வியாபாரிகள், மலர் அலங்காரத் தொழிலாளர்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது நமது நாட்டில் பெங்களுர் மாநகரில் மட்டும் 5 லட்சம் வீடுகளில் மலர் தேவை உண்டு என்ற கண்டறியப்பட்ட நிலையில் இதனை சந்திக்க தேவைப்படும் வணிக முயற்சிகளை இப்புதிய மலர் வணிக நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது நுகர்வு பொருட்கள், உணவு வழங்கல் தேவைகளை பல வணிக நிறுவனங்கள் இணைய வழி மூலமாக மேற்கொண்டு வரும் நடைமுறைச் சூழலில்  மலர் வணிகத்திலும் சந்தா அடிப்படையில் பல புதிய தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நுகர்வோரின் தேவையை சந்திக்கும் இப்புதிய மலர் வணிக தொழில் முயற்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் போது காலங்காலமாக உள்ள நமது மலர் வணிகத்தில் நிச்சயம் பெரிய அளவிலான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com

Leave a Reply

editor news

editor news