Site icon Vivasayam | விவசாயம்

தேனீ வளர்ப்பு பகுதி – 9

தேனீக்களின் இதர மேலாண்மை

தேனீ கூடுகளைப் பிரித்தல், ஒன்றிணைத்தல் மற்றும் இடம் மாற்றுதல்

வெவ்வேறு பருவங்களில் தேனீக்கள் எவ்வாறு  கையாளப்பட வேண்டும் என்பதை முன்னர் வந்த பகுதிகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் பருவங்கள் தவிர இதர மேலாண்மை முறைகள்  மற்றும் கையாளுதல்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

தேன் கூடுகளைப் பிரித்தல் / தேன் கூடுகளை அதிகரித்தல்

தேன் கூடுகளிலிருந்து பிரிந்து வரும் திரள்களைப் (swarms) பிடிப்பது கூடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பின்பற்றப்பட்ட ஒரு பழைய முறையாகும், ஆனால் இந்த முறையை ஊக்குவிக்க/பின்பற்றக்கூடாது, ஏனெனில் திரள்களிலிருந்து வளர்க்கப்படும் தேன் கூடுகளில், மீண்டும் பிரிந்து செல்லும் திரள் உள்ளுணர்வு இருக்கும். அதுமட்டிமின்றி, திரள் கைப்பற்றுவது அதிக நேரம் தேவைப்படும் முறையாகும்.

பொதுவாக வசந்த காலத்தில், வலுவான  மற்றும் தேன் உற்பத்தியில் ஈடுபடும் கூடுகள் பிரிக்கப்படுகின்றன. பிரிக்கப்பட்ட இத்தகைய கூடுகள் இரண்டு முதல் மூன்று சட்டங்கள் தேனீக்களுடனும் மற்றும் ஒரு ராணி செல் அல்லது புதிய ராணியுடனும் ஒரு புதிய கூடாக உருவாக்கப்படுகிறது. இந்த கூடுகளுக்கு 50% சர்க்கரை பாகுடன் உணவளிக்கப்பட வேண்டும். இவ்வாறு தேன் கூடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன.

மற்றொரு முறையில், வசந்த காலம் அல்லது தேன் ஓட்ட காலத்திற்கு முன்பு கூடுகளில் அதிக மக்கள் தொகை இருக்கும். அக்காலத்தில் அத்தகைய பெட்டியிலிருந்து இளம் புழுக்களுடனான 2-3 சீப்புகளை எடுத்து அவற்றை புதிய பெட்டியில் மற்ற தேனீக்கள் மற்றும் ஒரு ராணியுடன் வைக்கும் போது புதிய கூடு உருவாக்கப்படுகிறது.  இது வலுவான கூடுகளின் வலிமையை பாதிக்காது, மேலும் இவை வலுவான நிலை காரணமாக தேன் ஓட்டத்தை நன்கு பெறலாம். இது திரள்வதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

தேனீ கூடுகளை ஒன்றிணைத்தல்

ஒன்றிணைக்கப்பட வேண்டிய கூடுகளை ஒவ்வொரு நாளும் 1 மீட்டர் நகர்த்துவதன் மூலம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக கொண்டு வர வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருக்கும்போது (ஒரு மீட்டருக்குள்), செய்தித்தாள் முறையைப் பயன்படுத்தி கூடுகளை எளிதில் ஒன்றிணைக்க முடியும். வலுவான பெட்டியின் கீழ்புறத்தில் வைத்து அதன் மேற்பகுதியில் செய்தித்தாளில் துளையிட்டு பொருத்த வேண்டும். இப்போது தேனீக்கள் படிப்படியாக காகிதத்தை கிழித்து கசக்கி ஒன்றிணைக்கும்.

குறிப்பு: செய்தித்தாளில் சிறிதளவு மணம் பொருந்திய பவுடரை (Any perfumed talc) தடவி வைப்பதன் மூலம் தேனீக்களுக்கிடையேயான மணம் சிறிது நேரம் மறைக்கப்படுகிறது. இது தேனீக்கள் சுமூகமாக ஒன்றினைய உதவுகிறது.

முன்னெச்சரிக்கை: ஒன்றிணைவதற்கு முன் சிறந்த திறமையான ராணியை வைத்து மற்ற ராணியை அகற்றவும்.

எப்போது இணைக்க வேண்டும்?

  • உணவு ஆதாரம் இல்லாத போது, ​​பலவீனமான கூடுகளை ஒன்றிணைத்தல்.
  • தேன் ஓட்ட காலத்திற்கு முன்பு, பலவீனமான கூடுகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான கூட்டை உருவாக்க.
  • வசந்த காலத்தில், அனைத்து கூட்டிலும் எண்ணிக்கையை சமன் செய்ய வலுவானவற்றிலிருந்து சட்டங்களை எடுத்து வலுவற்றவைக்கு வழங்குவதல்.
  • ஒரு தேன் கூடானது வளமான ராணியை எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். ராணியானது மோசமான வானிலை,  குறைந்த ஆண் தேனீக்களின் எண்ணிக்கை ஆகிய காரணிகளால் துணையுடன் சேராமல் முட்டையிடாமல் இருக்கலாம். இந்நிலையில் அத்தகைய கூடு வளமான ராணியைக் கொண்ட கூடுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

தேனீ கூடுகளை இடம் மாற்றுவது

  • தேனீ வளர்க்கும் இடத்திற்குள், கூடுகளை குறுகிய தூரத்திற்கு நகர்த்த வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் மாலையில் 1 மீட்டர் தூரம் வரை விரும்பிய இடத்தை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்.
  • கூடுகள் தேனீ வளர்க்கும் தளத்தில் சில நூறு மீட்டர் தூரத்திற்கு நகர்த்தப்பட வேண்டுமானால், கூடுகள் முதலில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று அங்கேயே 2-3 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும். பின்னர் தேனீ பண்ணைக்கு கொண்டு வந்து விரும்பிய இடத்தில் வைக்கவும். இருப்பினும், கூடுகளை நகர்த்துவதற்கு முன், அனைத்து அசையும் அல்லது உடைந்த பகுதிகள் சரிபார்க்கப்பட்டு, தேனீக்களின் செயல்பாடு நிறுத்தப்பட்ட பின்னர் மாலை தாமதமாக நகர்த்தப்பட வேண்டும்.

இக்காலகட்டத்தில், சில நேரங்களில் ஒரு கூட்டில் உள்ள தேனீ மற்றொரு கூட்டின் தேன் மற்றும் மகரந்த சேகரிப்பினை திருடுகின்றன. இத்தகைய தேனீக்கள் திருட்டு அல்லது கொள்ளைக்காரத்தேனீ அல்லது ராபர் தேனீ (robber bees) என்றழைக்கப்படுகிறது. இனி வரவிருக்கும் பகுதிகளில் இந்த கொள்ளைக்காரத்தேனீயை எவ்வாறு அடையாளம் காண்பது, கொள்ளையை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் கோடைகாலத்திற்கான செயற்கை உணவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

-தொடரும்…

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Exit mobile version