கடந்த சில ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநில கிராமப்புற தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் வாழ்வில் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள் பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் கோழி வளர்ப்பவர்கள் நிறுவனத்தின் சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிதி உதவிகளை வழங்கி தங்களின் வீடுகளுக்கு பின்புறம் 500 சதுர அடியில் கறிக் கோழிகள் வளர்க்கத் தேவைப்படும் மூலதனத்தை வழங்கி உதவி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் 500 கோழி குஞ்சுகள் சுமார் 23 நாட்கள் பெண்களால் ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழிகளாக வளர்க்கப்பட்டு, மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது முதல் அவற்றுக்கு தேவைப்படும் உணவு, மருந்துகள் மற்றும் கால்நடை மருத்துவ உதவிகள் மற்றும் வளர்ந்த கோழிகள் கொள்முதல் பணிகளும் முறையே மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய தன்னிறைவு முயற்சிகளுக்கு தேவைப்படும் ரூ.2.5 கோடி மூலதனத்தை “Northern Coal fields” நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக சுமார் 200 பழங்குடியின பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனை மேலும் 300 பெண்களுக்கு விரிவாக்க செய்யவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது தேசிய சிறு கோழி வளர்ப்போர் முன்னேற்ற அறக்கட்டளை (National small poultry growers development trust) வாயிலாக நமது நாடு முழுவதும் பல மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியின பெண்களிடம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 12600 தலித் மற்றும் 6000 பழங்குடியின பெண்கள் வாழ்வில் ஒரு பொருளாதார முன்னேற்றத்தை காண உதவி செய்துள்ளது. இவ்வாறு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 4800 தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், அசாம் மாநிலத்தில் 1000 பெண்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் 500 பெண்கள், ஒடிசா மாநிலத்தில் 300 பெண்கள் என்று வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் அதிகளவில் பயன் பெற்றுள்ளனர்.
இத்தகைய வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு முன்னோடியாக தில்லியை தலைமை இடமாக கொண்ட பிரதான் (Pradhan) கடந்த 1993ஆம் ஆண்டில் இத்திட்டத்தை துவக்கியது. இதன் வாயிலாக இன்று மத்திய பிரதேசத்தின் 30 சதவீத கறிக்கோழித் தேவை மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 12 சதவீத கறிக்கோழித் தேவை முறையே சந்திக்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் புதிய வணிகப் பெயரில் நகர்ப் புறங்களில் கறிக்கோழி கடைகளை துவங்கவும், மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும் வணிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதிகளவு முதலீடுகள் மற்றும் மிகவும் குறைந்தளவு லாபத்தில் மேற்கொள்ளப்படும் இப்புதிய ஆக்கப்பூர்வமான முயற்சிகளை விரிவாக்கம் செய்ய பல தனியார் பங்கு முதலீடுகளை (private equity) பெறும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள் வாழ்வில் மேற்கொள்ளப்படும் இப்புதிய கோழி வளர்ப்பு முயற்சிகளின் பெருக்கம் கிராமப்புறங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகள், தொழில் முதலீடுகள், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
கட்டுரையாளர்:
முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com