1950களில் இருந்தே அனைத்து நாடுகளிலும் உணவு தட்டுப்பாடு வந்துவிட்டது. எந்த நாடும் வளரும் மக்கள்தொகைக்கு இணையான உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவாக வந்தது தான் பசுமைப் புரட்சி. என்னதான் கோதுமையில் அதிக உற்பத்தி செய்யும் ரகங்களை போர்லாக் கொண்டு வந்தாலும், பல ஆசிய நாடுகளில் அரிசியே அடிப்படை உணவாக இருந்துவந்தது. எனவே அரிசிக்கும் ஒரு வழி பிறக்க வேண்டும் என்று அனைவரும் காத்திருந்தனர். பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தது. 1960ஆம் நெல்லில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கவும், நோய் மற்றும் பூச்சி தாக்குதலைப் பற்றி ஆய்வு செய்யவும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிப்பைன்ஸில் தொடங்கப்படுகிறது. அங்குதான் அந்த அதிசயமும் நிகழ்கிறது.
அந்த ஆராய்ச்சி நிலையத்தில் நெல் இனப் பெருக்கவியலாளர்களாக பணிபுரியும் பீட்டர் ஜென்னிங்கும் ஹென்றி பெச்சலும் தான் அந்த அதிசயத்தை நிகழ்த்தினர். சீனாவின் Dee-Geo-Woo-Gen (DGWG) ரகத்தையும் இந்தோனேசியாவின் PETA ரகத்தையும் கலப்பு செய்து அவர்கள் உருவாக்கிய ரகம் தான் IR-8. ஒரு ஹெக்டரில் சுமார் 10 டன் அளவிற்கு உற்பத்தியை தந்தது இந்த ரகம். இது அதற்குமுன் பயிரிடப்பட்ட நெல் ரகங்களைவிட பத்து மடங்கு அதிகமாகும்.
மிகச் சிறிய காலத்தில் இந்த நெல் ரகத்தின் சிறப்பும் பெருமையும் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அப்போதுதான் போர்லாக் கோதுமையில் புரட்சி செய்துக்கொண்டிருந்தார். அடுத்தகட்டமாக, இந்திய அரசு IR-8 நெல் விதைகளை வாங்கி சோதனையாக, ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் சுப்பாராவ் என்பவரின் நிலத்தில் சுமார் 1600 ஹெக்டர்கள் பயிரிட்டனர். அந்த அதிசய ரகத்தை பற்றி தெரியாத சுப்பாராவ், அதன் பிரமாண்ட உற்பத்தியை பார்த்து மிரண்டுப்போனார். ஒரு ஹெக்டருக்கு 7 -10 டன் வரை மகசூல் ஈட்டியது. உடனே இந்தியா முழுவதும் IR-8 நெல் ரகம் பயிரடப்பட்டு மாபெரும் மகசூல் பார்க்கப்பட்டது.
இந்த நெல் ரகத்தின் உற்பத்தி திறனுக்கு விஞ்ஞானிகள் இரண்டு காரணங்களை வைக்கின்றனர். ஒன்று, இந்த ரகத்தில் சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிக்கதிர்களின் சக்தி பெரும்பாலும் தானிய உற்பத்திக்கு மட்டுமே செல்கிறது. இது குட்டையான ரகம் என்பதால் தண்டுகளுக்கும் இலைகளுக்கும் செல்லும் சக்தி குறைக்கப்படுகிறது. இரண்டாவது, இதன் வாழ்நாள். மிகக்குறைந்த வாழ்நாள் கொண்டுள்ளதால் வருடத்திற்கு இரண்டு மூன்றுமுறை மகசூல் பார்க்க முடிகிறது.
IR-8ன் வருகை இந்திய விஞ்ஞானிகளுக்கு நெல் ஆராய்ச்சியில் புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது. அதற்குப்பின் அவர்களின் மற்ற ரகங்கள் உருவாக்க அடிப்படையாய் அமைந்தது.
IR-8யை உற்பத்தி செய்த விவசாயிகள் பலரின் வாழ்வாதாரம் உயர்ந்தது. அந்த நன்றியை காட்டும் விதமாக பலர் தங்கள் பிள்ளைகளுக்கு IR-8 என்று பெயர் வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கணேசன் தன் மகனுக்கு IR-8 என்று பெயர் வைத்தது அப்போது பிரபலமாக இருந்தது. இது போன்ற ரகங்கள் வராமல் போயிருந்தால் நமது நாட்டின் உணவு உற்பத்தி இப்போது எந்த பாதாளத்தில் கிடக்கும் என்பது கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
சரி, தலைப்பு வரமா? சாபமா? என்று வைத்துவிட்டு வரங்களையே எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு பக்கத்தை காட்ட வேண்டாமா?
-தொடரும்…
கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com