Skip to content

கோகோ செடியில் தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சியின் தாக்குதலும் அவற்றின் மேலாண்மை முறைகளும்

கோகோ ஒரு வாசனை மிகுந்த பணப்பயிராகும். இது வணிகரீதியில் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது. கோகோ தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலப்பகுதியைத் தாயகமாகக் கொண்டது. கோகோ பயிரானது 1523 ஆம் ஆண்டிலிருந்தே உலகின் பல நாடுகளில் பயிரிடப்பட்டு வந்தாலும் நமது இந்திய நாட்டில் 1970 ஆம் ஆண்டு முதல் பண்ணைப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  உலக அளவில் கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீதமாக உள்ளது. கோகோ சாக்லேட் சுவை மிகுந்த பானங்கள் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாது மருத்துவ மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழ் நாட்டில் கோயம்பத்தூர், கன்னியாகுமரி, ஈரோடு சேலம், தேனி, திண்டுக்கள், தருமபுரி, நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் தென்னத்தோப்புகளில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்வதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. கோகோ தனிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ வளர்க்கப்படுகிறது. மரத்தின் வளர்ச்சி மற்றும் கிளைகளின் பரவல் போன்ற காரணங்களால் தோப்புகளில் ஒரு விதமான குளிர்ந்த காற்றுச் சூழல்  நிலவுகிறது. இதனால் பூச்சி மற்றும் நோய் பரவலுக்கு காரணமாக அமைகிறது.  தேயிலைக்கொசுவின் (சாறு உறிஞ்சும் பூச்சி) சேத அறிகுறிகளை பற்றியும் அவற்றின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

வளர்ச்சிப் பருவம்

தாய் தேயிலை கொசுவானது சிவப்பும் பழுப்பும் காலந்த நிறத்தில் இருக்கும். கொசு போன்ற தோற்றத்துடன், வயிற்றுப்பகுதியில் கருப்பு வெள்ளை நிறத்தினை உடையதாக இருக்கும். பெண் தாய்பூச்சிகள் இளந்தளிர் இலைக்காம்புகளிலும், இளம் மொட்டுகளிலும், பூக்காம்புகளிலும் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய முட்டையிடும் பெண் உறுப்பை உள்ளே செலுத்தி சதைப் பகுதியில் முட்டைகளைத் தனித்தனியாக இடும். முட்டைகள் இரண்டு கொம்புகள் போல் காட்சியளிக்கும். அதாவது முட்டை இடப்பட்ட ஒரு இளங்காம்பை எடுத்து உருப்பெருக்கியில் பார்த்தால் இரண்டு கொம்புகள் காம்பின் வெளிப்பகுதியில் நீட்டிக்கொண்டிருப்பது போன்று தெரியும். முட்டைகள் வெளிறிய வெண்மை நிறத்தில் இருக்கும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வருவதற்கு ஒரு வாரமும் குஞ்சுகளிருந்து தாய்ப்பூச்சி நிலையை அடைவதற்கு பத்து நாட்களும் ஆகும். குஞ்சு பொரித்தலிருந்து முழு தாய்ப்பூச்சி நிலையை அடைய ஐந்து நிலைகள் ஆகும்.  தேயிலை கொசுவின் தாக்குதல் கோகோவைத் தவிர கொய்யா, முந்திரி, வேம்பு, தேயிலை, திராட்சை, ஆப்பிள் போன்ற பயிர்களிளும் காணப்படும்.

அறிகுறிகள்

இப்பூச்சி இளங்குருத்து, பூ மொட்டு மற்றும் இளம் காய்களைத் தாக்கும். இது தனது ஊசி போன்ற வாயால் குருத்தைத் துளைத்து சாற்றை உறிஞ்சும். அப்போது உமிழ் நீரை குருத்தினுள் செலுத்தும். இந்த உமிழ் நீரில் உல்ல நச்சுக்கள் குருதில் துளைக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்களைத் தாக்கி இறக்கச் செய்து விடும். இதனால் தாக்கப்பட்ட குருத்துக்களுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தடைப்படுவதால் துளையிட்ட பகுதிக்கு அருகில் வட்ட வடிவில் கருமை நிறத் திட்டுகள் காணப்படும். துளையிலிருந்து பழுப்பு நிறச் சாறு வடிந்து கொண்டிருக்கும்.

மேலாண்மை முறைகள்

  • கோகோ வயலுக்கு அருகில் முந்திரி, வேம்பு, கொய்யா, திராட்சை பயிரிடாமல் தவிர்ப்பதினால் இப்பூச்சி பரவாமல் தடுக்கலாம்.
  • உதிர்ந்த மொட்டுக்கள் மற்றும் இளம் காய்களைச் சேகரித்து அழிக்கவேண்டும்.
  • குறைவான பூச்சித்தாக்குதலின் போது வேப்பெண்ணெய் 3% தெளிக்கவும்.
  • அதிகமான தாக்குதலின் போது கீழ்கண்ட ஏதேனும் ஒரு பூச்சிகொல்லியைத் தெளிக்கவும்
  • இமிடாகுளோபிரிட் (0.6 மி.லி/ லிட்டர்) அல்லது தையமீதாக்சம் (0.6 மி.லி/ லிட்டர்) அல்லது புரோபனோபோஸ் (2 மி.லி / லிட்டர்) அல்லது கார்பரில் (0.2 மி.லி / லிட்டர்).

கட்டுரையாளர்கள்:

  1. சீ.சின்னதுரை, முதுநிலை வேளாண்மை பட்டதாரி (பூச்சியியல்), சின்னசேலம், கள்ளக்குறிச்சி. தொடர்பு எண்: 9585865379. மின்னஞ்சல்: durai0850@gmail.com
  2. மு.ம.மௌதம், முனைவர் பட்டப் படிப்பு மாணவர் (பூச்சியியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.தொடர்பு எண்: 8883369881, மின்னஞ்சல்: mawthammm1996@gmail.com

Leave a Reply

editor news

editor news