Site icon Vivasayam | விவசாயம்

கரும்பு சாகுபடியில் நிலத்தடி சொட்டு நீர் பாசனம் மூலம் மணிச்சத்து உர அளவு நிர்ணயம் பற்றிய ஆய்வு

பழங்காலத்திலிருந்தே கரும்பு பயிரிடப்பட்டு வருவதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கரும்பு மகசூலை அதிகரிப்பதில் ஊட்டச் சத்துக்கள் அதிக பங்கு வகிக்கின்றன. கரும்பு வளர்ச்சி பருவத்தில் அதிக சத்துக்களை உட்கொள்கிறது. பேரூட்டச்சத்துக்களில் ஒன்றான மணிச்சத்து கரும்பிற்கு மிகவும் முக்கியமானது. மணிச்சத்தினை தாவரம் எடுத்து கொள்வது என்பது, மணிச்சத்து உரம் கரையும் மற்றும் தாவரம் உறிஞ்சக்கூடிய வடிவத்தில் இருப்பதை பொருத்தது ஆகும். மணிச்சத்தின் தேவை, தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை விட குறைவானது.  மணிச்சத்து புரதம் உருவாவதற்கு, மகசூல் அதிகரிப்பதற்கு, செல்பகுப்பிற்கு, வேர் வளர்ச்சிக்கு மற்றும் போதுமான தூர்கள்  உருவாவதற்கு இன்றியமையாதது ஆகும்.

மணிச்சத்து உரங்களை நடவுக்குமுன் சாலில் இட்டு அதனை லேசாக மண்ணில் கலந்து விடவேண்டும். குறைந்த நீரைக்கொண்டு, சொட்டு நீர் பாசனம் மூலம் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து வருமானத்தைப் பெருக்கலாம். கரும்பு பயிருக்கு தேவையான நீரையும், உரங்களையும் தேவையான நேரத்தில், தேவைக்கேற்ப சிறிது சிறிதாக வேர்ப்பகுதியின் அருகில் அளிக்கும் நீர்பாசன முறையினை சொட்டு நீர் பாசனம் என்கிறோம்.

நிலத்தடி சொட்டுநீர் பாசனத்தில், தீயினால் பாதிப்பு இல்லை, எலியினால் பாதிப்பு இல்லை. பயிரின் வளர்ச்சி சமச்சீராக இருக்க ஆறரை அடி இடைவெளியில் இரண்டடி அகலம் கொண்ட இணையான பார்கள் அமைத்து இரண்டு பார்களின் நடுவில் நிலத்திடி சொட்டு நீர் பாசனக் குழாயை 20 முதல் 30 செமீ ஆழத்தில் அமைக்க வேண்டும். உழவர்கள் வழக்கமாக இணைப்பாரில் 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரமிட்டு கரும்பு நடவு செய்கிறார்கள். இதனால் பாஸ்பரஸ் உர உபயோகிக்கும் திறன் குறைகிறது.

இதனை கருத்தில் கொண்டு கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூரில் 2013 மற்றும் 2014 வருடத்தில் ஒரு நடவு பயிர் மற்றும் ஒரு மறுதாம்புப் பயிர்களில் அடி பரப்பு சொட்டு நீர் பாசனத்தின் மூலம் நீர் மற்றும் மணிச்சத்து உரம் அளவு நிர்ணயம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழு உர நிர்வாகங்கள் முறையே சிபாரிசு உரம் 300:100:200 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் ஒரு ஹெக்டேருக்கு – யூரியா, மோனோ அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு ; 75 சதவீத சிபாரிசு உரத்தை யூரியா, 19-19-19 மற்றும் பொட்டாஷியம் குளோரைடு ; 100 சதவீத சிபாரிசு உரத்தை யூரியா, மோனோ அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷியம் குளோரைடு; 100 சதவீத தழை, மணி, சாம்பல் சத்துக்களை, யூரியா, 19-19-19 மற்றும் பொட்டாஷியம் குளோரைடு; 125 சதவீத சிபாரிசு உரத்தை, யூரியா, மோனோ அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷியம் குளோரைடு; 125 சதவீத தழை, மணி, சாம்பல் சத்துக்களை  யூரியா, 19-19-19, பொட்டாஷியம் குளோரைடு மற்றும் 100 சதவீத தழை, மணி, சாம்பல் சத்துக்களை யூரியா, பாஸ்பாரிக் அமிலம் மற்றும் பொட்டாஷியம் குளோரைடு மூலம் அளிக்கப்பட்டு கோ. கடலூர் (கரும்பு) 24 இரகத்தில் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் கரும்பு கிளைப்புகள், கரும்பு எண்ணிக்கை, கரும்பு மகசூல், சர்க்கரை மகசூல் மற்றும் நிகர லாப விகிதம் கணக்கிடப்பட்டது.

பாஸ்பரஸ் உரங்களான 19-19-19, மோனோ அம்மோனியம் பாஸ்பேட், பாஸ்பாரிக் அமிலம், கரும்பு நடவிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை, ஏழு தவணைகளில் அடிபரப்பு சொட்டு நீர் பாசனம் மூலம் அளிக்கப்பட்டது நல்ல மகசூலை அளித்தது.

ஆய்வு முடிவுகளின் படி அதிகமான கரும்பு எண்ணிக்கை, ஒரு நடவு மற்றும் ஒரு மறுதாம்பு பயிர்களில் 894400 / ஹெக்டர் மற்றும் 899500 / ஹெக்டர்,  கரும்பு கிளைப்புகள் 217670 / ஹெக்டர்,  210750 / ஹெக்டர் எனவும் கரும்பு மகசூல் 175.48 டன்கள் / ஹெக்டர் மற்றும் 180.44 டன்கள் / ஒரு ஹெக்டருக்கு முறையே ஒரு நடவு மற்றும் ஒரு மறுதாம்புபயிர்களில் 125 சதவீத தழை, மணி, சாம்பல் சத்துக்களை  யூரியா, 19-19-19 மற்றும் பொட்டாஷியம் குளோரைடு மூலம் இட்ட திடலில் அதிகரித்துள்ளது.

நிகர இலாப விகிதம் 2.95 மற்றும் 3.06 முறையே  ஒரு நடவு மற்றும் ஒரு மறுதாம்புப் பயிர்களில் 100 சதவீத சிபாரிசு தழை, மணி, சாம்பல் சத்துகளை யூரியா, 19-19-19 மற்றும் பொட்டாஷியம் குளோரைடு மூலம் இட்ட திடலில் அதிகரித்துள்ளது.

எனவே விவசாயிகள் கரும்பு பயிருக்கு அடிப்பரப்பு சொட்டு நீர்ப் பாசனம் மூலம்  100 சதவீத உர சிபாரிசான தழை, மணி, சாம்பல் சத்துக்களை முறையே யூரியா, 19-19-19 மற்றும் பொட்டாஷியம் குளோரைடு ஆகியவற்றை இட்டு கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்.

கட்டுரையாளர்கள்:

  1. முனைவர் பே. கிறிஸ்டி நிர்மலா மேரி, இணைப்பேராசிரியர், மண் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை. மின்னஞ்சல்: chrismary21041969@gmail.com
  2. முனைவர் மா. ஜெயச்சந்திரன், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர். மின்னஞ்சல்: jayachandranm@tnau.ac.in
Exit mobile version